இந்தியா

காஷ்மீர் பிரச்னைக்கு தேர்தல் தீர்வல்ல: மெஹபூபா

29th Nov 2020 10:43 PM

ADVERTISEMENT


காஷ்மீர் பிரச்னைக்கு தேர்தல் தீர்வாகாது, இந்தியா-பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என பிடிபி கட்சித் தலைவர் மெஹபூபா முஃப்தி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

குப்கார் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மெஹபூபா தெரிவித்ததாவது:

"காஷ்மீர் பிரச்னைக்கு தேர்தல் தீர்வல்ல. இருநாடுகளுக்கிடையே (இந்தியா-பாகிஸ்தான்) பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும். நமது நிலத்தை ஆக்கிரமித்த சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது, பாகிஸ்தானுடன் ஏன் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது? அது முஸ்லிம் நாடாக இருப்பதால்தான் தற்போது எல்லாமே வகுப்புவாதமாக இருக்கிறதா.

இங்கு ஏறத்தாழ இந்தியாவின் 9 லட்சம் பாதுகாப்புப் படைகள் உள்ளன. வேறு எந்த மாநிலத்தில் பொது மக்கள் வசிக்கும் பகுதிகளில் இத்தனைப் படைகள் உள்ளன? சட்டப்பிரிவு 370 அனைத்துப் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுவிட்டது என்றால் இன்னும் எதற்கு இங்கு ராணுவம் குவிந்துள்ளது? அவர்கள் எல்லைக்குச் சென்றிருக்க வேண்டும்.

ADVERTISEMENT

தேர்தலில் பங்கெடுப்பது காஷ்மீர் பிரச்னையில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் வரை இந்தப் பிரச்னை இருந்துகொண்டேதான் இருக்கும்.

எங்கள் கூட்டணி வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை. அவர்களை பிரசாரம் மேற்கொள்ள அனுமதிக்காமல் வீட்டிலேயே அடைக்கப்பட்டுள்ளார்கள். அதேசமயம், பாஜக வேட்பாளர்கள் சுதந்திரமாக உலா வருகின்றனர்.

சட்டப்பிரிவு 370 குறித்து பேசக் கூடாது என எங்களிடம் கூறுகின்றனர். பாஜக அமைச்சர்கள் காஷ்மீருக்கு வருகின்றனர். 10-இல் 9 முறை சட்டப்பிரிவு 370 குறித்து அவர்கள் பேசுகின்றனர். 

சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டுவிட்டது, அது திரும்ப கொண்டுவரப்படாது என்பதில் பாஜக உறுதியாக இருந்தால், பிறகு ஏன் அதைப் பற்றி நான் பேசும்போது அவர்களுக்கு சலசலப்பு ஏற்படுகிறது. இதை என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை.

யார் பேச முற்பட்டாலும், அவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் பாய்கிறது. வஹீதைவிட அமைதியை விரும்பும் சிறந்த நபரைப் பார்க்க முடியாது. ஆனால், அவர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு நிகழ்வது துரதிருஷ்டவசமானது.

நான் காவலில் வைக்கப்பட்ட பிறகு, தேர்தல் அதிகாரிகளும், மற்ற அதிகாரிகளும் நான் காவலில் வைக்கப்படவில்லை என்று கூறியது துரதிருஷ்டவசமானது. காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதையும், எது உண்மை, எது கதை என்பதையும் இது கூறுகிறது. இங்கு நடக்கும் உண்மை வெளியே காட்டப்படவில்லை.

நாங்கள் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தவுடன், காஷ்மீரில் அடக்குமுறை அதிகரிக்கத் தொடங்கியது. ஜனநாயகத்தை நகைப்புக்குள்ளாக்கின்றனர்.

முஸ்லிம்கள் பாகிஸ்தானியர்களாகவும், சீக்கியர்கள் காலிஸ்தானியர்களாகவும், செயற்பாட்டாளர்கள் நகர்ப்புற நக்சல்களாகவும், பெண்கள் உள்பட மாணவர்கள் தேச விரோதிகளாகவும் சித்தரிக்கப்படுகின்றனர். பெண்களின் போராட்டம் தேச விரோதமாக முத்திரை குத்தப்படுகிறது. இந்த நாட்டில் அனைவரும் தேச விரோதிகள், பயங்கரவாதிகள் என்றால் யார்தான் ஹிந்துஸ்தானியர்கள்? பாஜகவினர் மட்டும்தான் ஹிந்துஸ்தானியர்களா? அவர்கள் இந்த நாட்டை பிளவுபடுத்துகின்றனர்." என்றார் மெஹபூபா.

ஜம்மு-காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக 43 தொகுதிகளுக்கு சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 51.76% வாக்குகள் பதிவாகின. இதில் ஜம்முவில் 64.2%, காஷ்மீரில் 40.65% வாக்குகள் பதிவாகின.

Tags : Kashmir
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT