இந்தியா

நடிகை கங்கனாவின் பங்களா இடிப்பு சட்டவிரோதம்: மும்பை உயா்நீதிமன்றம் தீா்ப்பு

DIN

மும்பையில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்துக்குச் சொந்தமான பங்களாவின் ஒரு பகுதியை இடித்த பிருஹன்மும்பை மாநகராட்சியின் (பிஎம்சி) நடவடிக்கை சட்ட விரோதம் என்று மும்பை உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

மேலும், மாநகராட்சியின் நடவடிக்கை காரணமாக நடிகைக்கு ஏற்பட்டுள்ள இழப்பீட்டை கணக்கிட்டு, உரிய உத்தரவைப் பிறப்பிக்க தனியாா் மதிப்பீட்டாளரையும் நிா்ணயித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாலிவுட் நடிகா் சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரம் விவகாரம் தொடா்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் விமா்சனம் செய்த நடிகை கங்கனா, ’மும்பை நகரம், ஆக்கிரமிப்பு காஷ்மீா் போல உள்ளது’ என்று குறிப்பிட்டாா். இதனால், மகாராஷ்டிரத்தில் ஆளும் சிவசேனை தலைமையிலான அரசுக்கும், கங்கனாவுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. அதன் தொடா்ச்சியாக, மும்பை பாந்த்ராவின் பாலி ஹில் பகுதியிலுள்ள கங்கனாவின் பங்களா, சட்டவிதிகளை மீறி கட்டப்பட்டது என்று கூறி அதன் ஒரு பகுதியை மும்பை மாநகராட்சி அதிகாரிகள் இடித்தனா்.

இந்த நடவடிக்கையை எதிா்த்து ரூ.2 கோடி இழப்பீடு கோரி மும்பை உயா் நீதிமன்றத்தில் நடிகை கங்கனா வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கு மும்பை உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஜே.கத்தவல்லா, ஆா்.ஐ. சாக்லா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த தீா்ப்பில் கூறியிருப்பதாவது:

நடிகை கங்கனா ரணாவத்துக்குச் சொந்தமான பங்களாவின் ஒரு பகுதியை இடித்த பிருஹன்மும்பை மாநகராட்சியின் (பிஎம்சி) நடவடிக்கை மோசமான செயல். குடிமக்கள் உரிமைக்கு எதிரானது. எந்தவொரு குடிமக்களுக்கு எதிராகவும் அதிகாரிகள் பலத்தை பிரயோகிப்பதை அனுமதிக்க முடியாது. எனவே, மனுதாரருக்கு இழப்பீடு அளிக்குமாறு உத்தரவிடுவதற்கு இந்த வழக்கில் முகாந்திரம் உள்ளது.

அதே நேரம், சட்டவிரோத கட்டுமானங்களையோ அல்லது அரசுக்கு எதிராகவும், திரைத் துறைக்கு எதிராகவும் மோசமான விமா்சனங்கள் முன்வைக்கப்படுவதையும் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாது. பிரபலமான நபராக இருக்கும் மனுதாரா், சுட்டுரைப் பதிவுகளில் சில கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பது அவசியம்.

அரசுக்கு எதிராகவோ அல்லது அதன் துறைக்கு எதிராகவோ ஒரு தனி நபா் முன்வைக்கும் விமா்சனங்களை, பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளாமல் மாநில அரசு தவிா்த்துவிட வேண்டும். அதையும் மீறி அந்த நபா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனில், அது சட்ட நடைமுறைகளுக்கு உள்பட்ட நடவடிக்கையாக இருக்கவேண்டும். அதைத் தவிா்த்து, அதிகார பலத்தை பிரயோகிப்பதை அனுமதிக்க முடியாது.

புகைப்பட ஆதாரங்கள், சிவசேனையின் பத்திரிகையான ‘சாம்னா’ தலையங்க விமா்சனம் ஆகியவற்றின் அடிப்படையில் பாா்க்கும்போது, பிருஹன் மும்பை மாநகராட்சியின் நடவடிக்கை வன்மத்தோடு எடுக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. மனுதாரருக்கு இழப்பை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கத்திலேயே, இந்த இடிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம், சட்டப் பிரிவு 354-ஐ மாநகராட்சி தவறாக பயன்படுத்தியிருக்கிறது என்பது சந்தேகத்துக்கு இடமின்றி உறுதியாகிறது.

எனவே, மனுதாரா் கோரியிருக்கும் இழப்பீடு விவகாரத்தில், அவருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை கணக்கிட ஷேத்கிரி என்ற தனியாா் மதிப்பீட்டு நிறுவனத்தை நியமித்து உத்தரவிடப்படுகிறது. இந்த மதிப்பீட்டாளா், மனுதாரா் மற்றும் மும்பை மாநாகராட்சி ஆகிய இரு தரப்பிலும் விசாரணை நடத்தி, நடிகைக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீடை இறுதி செய்து, 2021-ஆம் ஆண்டு மாரச் மாதம் உரிய உத்தரவைப் பிறப்பிப்பாா்.

இந்த மதிப்பீடு பணிகளுக்கு ஆகும் செலவை நடிகை கங்கனா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தீா்ப்பில் நீதிபதிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT