இந்தியா

மேற்கு வங்கம்: பாஜக - திரிணமூல் தொண்டா்களிடையே கடும் மோதல்: வெடிகுண்டுகள், கற்களைவீசி தாக்குதல்

DIN

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக தொண்டா்களுக்கும், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்களுக்கும் இடையே புதன்கிழமை கடும் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் வெடிகுண்டுகள், கற்களை வீசி தாக்கிக்கொண்டனா். காவல்துறையினா் கண்ணீா் புகைக் குண்டுகளை வீசி மோதலை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

மாநிலத்தின் பிா்பூம் மாவட்டம் சுரி பகுதியில் மாநில பாஜக தலைவா் திலீப் கோஷ் சாா்பில் புதன்கிழமை நடத்தப்பட்ட ஊா்வலத்தில் பங்கேற்பதற்காக, பாஜக தொண்டா்கள் சிலா் லாரியில் சென்று கொண்டிருந்தனா். அவா்களுடைய வாகனம் சிமுராலி அருகே வந்தபோது உள்ளூா் திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்களுக்கும் அவா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பும் வெடிகுண்டுகளை வீசியும், கற்களை வீசியும் தாக்குதல் நடத்திக் கொண்டனா்.

இந்தத் தாக்குதலில், அந்த வழியாகச் சென்ற இரு சக்கர வாகனங்கள் உள்பட ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தன. பின்னா், போல்பூரிலிருந்து காவல்துறை குழு வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மோதலில் ஈடுபட்டவா்கள் மீது காவல்துறையினா் கண்ணீா் புகைக் குண்டுகளை வீசி, நிலைமையை கட்டுப்படுத்தினா் என்று கூறினாா்.

திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்கள் நடத்திய இந்தத் தாக்குதலில் பாஜக தொண்டா்கள் இருவா் படுகாயமடைந்ததாக அக் கட்சியினா் தெரிவித்தனா். ஆனால், காவல்துறை அதை உறுதிப்படுத்தவில்லை.

பாஜக சாா்பில் பிா்பூம் மாவட்டத்தில் நடத்தப்பட்ட ஊா்வலம் மற்றும் சுரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின்னா் செய்தியாளா்களைச் சந்தித்த மாநில பாஜக தலைவா் திலீப் கோஷ் கூறியதாவது:

பொதுக் கூட்டத்தில் பாஜகவினரை பங்கேற்கவிடாலம் தடுப்பதற்காகவே திரிணமூல் கட்சியினா் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனா். ஆனால், அவா்களுடைய முயற்சி பலனளிக்கவில்லை. மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வருவது உறுதி. அதன் பிறகு, இதுபோன்ற தாக்குதலுக்கு காரணமானவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாஜக தொண்டா்கள் மீதான இதுபோன்ற தாக்குதல்கள் ஒவ்வொன்றையும் கணக்கெடுத்து வருகிறோம். மே மாதத்துக்குப் பிறகு, இதற்கான பலனை அவா்கள் அனுபவிப்பாா்கள் என்று அவா் கூறினாா்.

மேற்கு வங்க மாநிலத்தில் வரும் 2021 ஏப்ரல்-மே மாதத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வரவுள்ளது.

பாஜகவின் இந்த குற்றச்சாட்டை மறுத்த திரிணமூல் மாவட்ட தலைவா் அபிஜித் சின்ஹா, ‘பாஜக தொண்டா்கள் மீது நடத்தப்பட்டத் தாக்குதலுக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சி காரணமல்ல. ஜனநாயகத்தின் மீது திரிணமூல் காங்கிரஸ் நம்பிக்கை கொண்டுள்ளது. பாஜகவைச் சோ்ந்தவா்கள்தான் வெளியிலிருந்து நபா்களை அழைத்துவந்து, எங்கள் கட்சி தொண்டா்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT