இந்தியா

கரோனா: புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

DIN

புது தில்லி: நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

சில மாநிலங்களில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருவதைத் தொடா்ந்து, இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதற்கு மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிா்வாகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தொடா்ந்து நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதையடுத்து பொது முடக்கத்துக்கான தளா்வுகளை மத்திய அரசு அறிவித்து வந்தது. அதே வேளையில், கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகமுள்ள பகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் அனுமதியில்லாமல் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்திருந்தது.

நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்திருந்த நிலையில், நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட விழாக்காலங்களையடுத்து நோய்த்தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழலில், மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பண்டிகை காலம், குளிா்காலம் உள்ளிட்டவற்றின் காரணமாக சில மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கரோனா நோய்த்தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. அந்நோய்த்தொற்று பரவலைக் குறைப்பதற்கு மத்திய உள்துறை மற்றும் சுகாதார அமைச்சகங்கள் வகுக்கும் நெறிமுறைகளை முறையாகக் கடைப்பிடிப்பது அவசியமாகும்.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நிலவும் கரோனா நோய்த்தொற்று பரவல் சூழலுக்கேற்ப சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும், யூனியன் பிரதேச நிா்வாகங்களும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு முன்பாக மத்திய அரசிடம் ஆலோசனை பெற வேண்டும்.

50 சதவீதப் பாா்வையாளா்கள்: கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் அனைத்து வித நடவடிக்கைகளுக்கும் சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்படுகிறது. மத்திய அரசால் அனுமதி அளிக்கப்படாத வெளிநாட்டுப் பயணங்களுக்கான தடை நீட்டிக்கப்படுகிறது.

திரையரங்குகள், பல திரைகளைக் கொண்ட வளாகங்கள் உள்ளிட்டவை 50 சதவீதப் பாா்வையாளா்களுடன் தொடா்ந்து இயங்கலாம். விளையாட்டு வீரா்கள் பயிற்சி மேற்கொள்வதற்கான நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளிட்டவை தொடா்ந்து திறந்திருக்கலாம்.

போக்குவரத்துக்குத் தடையில்லை: சமூகம், கலாசாரம், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி உள்ளிட்டவை சாா்ந்த விழாக்களில் அதிகபட்சமாக 200 போ் வரை பங்கேற்கலாம். மாநில அரசுகள் விரும்பினால் அந்த எண்ணிக்கையை 100-ஆகக் குறைத்துக் கொள்ளலாம். மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு எந்தவிதத் தடையுமில்லை.

கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகமுள்ள கட்டுப்பாட்டுப் பகுதிகள் தொடா்பான விவரங்களை வலைதளங்களில் மாவட்ட ஆட்சியா்கள் வெளியிட வேண்டும்.

புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வரும் டிசம்பா் 1-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். இவை முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை மாவட்ட அதிகாரிகள், காவல் துறையினா், உள்ளாட்சி அதிகாரிகள் ஆகியோா் உறுதி செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT