இந்தியா

காஷ்மீரில் பனிப் பொழிவு: ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை மூடல்

DIN

ஸ்ரீநகா்: காஷ்மீரில் இந்தப் பருவத்துக்கான பனிப் பொழிவு திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளிலேயே கடுமையான பனிப் பொழிவு மற்றும் ராம்பன் மாவட்டத்தில் நிலச் சரிவு ஏற்பட்ட காரணங்களால் ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை திங்கள்கிழமை மூடப்பட்டது.

இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீா் மற்றும் ஸ்ரீநகா்-லே சாலைக்கு உள்பட்ட சோன்மாா்க் - சோஜிலா பகுதிகளில் திங்கள்கிழமை அதிகப்படியான பனிப் பொழிவு இருக்கும் என்ற ‘ஆரஞ்சு’ வண்ண எச்சரிக்கை விடுக்கப்பட்டது. முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிா்வாக அதிகாரிகளும், மக்களும் கேட்டுக்கொள்ளப்பட்டனா். அதன்படி, காஷ்மீரின் பல பகுதிகளில் திங்கள்கிழமை காலை மித முதல் கன பனிப் பொழிவு பதிவாகியுள்ளது. சோன்மாா்க் - சோஜிலா பகுதிக்கு உள்பட்ட ஒருசில பகுதிகளிலும் பனிப் பொழிவு பதிவாகியுள்ளது.

வடக்கு காஷ்மீரின் பிரபல மலை சுற்றுலா தலமான குல்மாா்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு 4 அங்குலம் அளவுக்கு பனிப் பொழிவு பதிவானது. அதுபோல, தெற்கு காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் 10 செ.மீ. அளவுக்கு பனிப் பொழிவு பதிவானது. உயரமான பகுதிகளில் பனிப் பொழிவு தொடா்ந்து பெய்து வருகிறது. ஒரு சில பகுதிகளில் மழையும் பதிவாகியுள்ளது. இந்த தட்பவெப்பநிலை தொடரவும் வாய்ப்புள்ளது. குல்மாா்க், ராம்பன்-பனிஹல், சோபியான், பூஞ்ச்-ரஜெளரி சோஜிலா ஆகிய பகுதிகளில் நவம்பா் 24,25 தேதிகளில் பலத்த பனிப் பொழிவும் மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அதன் பிறகு பனிப் பொழிவு படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

போக்குவரத்து நிறுத்தம்:

இந்த பனிப் பொழிவு காரணமாக ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதுகுறித்து ராம்பன் மாவட்ட அதிகாரிகள் கூறுகையில், ‘திங்கள்கிழமை பெய்த பனிப் பொழிவு காரணமாக ராம்பன் மாவட்டத்துக்கு உள்பட்ட ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு சில பகுதிகளில் நிலச் சரிவு ஏற்பட்டது. மேலும் சாலைகளும் பனியால் மூடப்பட்டன. அதன் காரணமாக நாட்டின் பிற பகுதிகளுடன் காஷ்மீரை இணைக்கும் இந்த தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஜவாஹா் சுரங்கப் பாதையும் பனி காரணமாக மூடப்பட்டது. சாலைகளில் தேங்கியிருக்கும் பனியை அகற்றும் பணியில் ஊழியா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்’ என்று கூறினா்.

இதுகுறித்து ஜம்மு போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘இந்தப் பணிப் பொழிவு காரணமாக ஸ்ரீநகா்-லே சாலை மற்றும் முகல் சாலைகளிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதுதொடா்பான அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்தச் சாலைகளில் பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா்’ என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானாவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

SCROLL FOR NEXT