இந்தியா

கரோனா: கட்டுப்பாட்டு அறை அமைத்தார் சோனியா காந்தி

30th Mar 2020 04:25 PM

ADVERTISEMENT


கரோனா வைரஸ் தொடர்பாக உதவிகளை வழங்குவதற்காக மாநில அளவில் தொடர்பில் இருக்க காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

"அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டியில் மத்திய கட்டுப்பாட்டு அறையை அமைக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒப்புதல் அளித்துள்ளார். கரோனா தொடர்பான விஷயங்களை ஒருங்கிணைப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவ் சாதவ், முன்னாள் எம்எல்ஏ தேவேந்திர யாதவ் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலர் மணீஷ் சத்ரத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா வைரஸ் பரவல், மாநில அரசுகளின் மருத்துவ தயார் நிலைகள், கட்சி மேற்கொள்ளும் நிவாரணப் பணிகள் உள்ளிட்டவையின் கள நிலவரம் குறித்து மாநில காங்கிரஸ் கமிட்டிகள் தரப்பில் நாள்தோறும் மத்திய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்படும். காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபாலின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலில் இந்தக் கட்டுப்பாட்டு அறை இயங்கும்.

ADVERTISEMENT

கரோனா பணிகளை ஒருங்கிணைப்பதற்காக மாநிலங்களுடன் தொடர்பில் இருப்பதற்காக இந்தக் கட்டுப்பாட்டு அறையை அமைப்பது குறித்து தில்லி மாநிலத் தலைவர்களால் சனிக்கிழமை பரிந்துரைக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் முன்னாள் தலைவர்கள், கட்சி நிர்வாகிகளிடமும், பொதுமக்களிடமும் கலந்துரையாட வேண்டும். நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், உணவு மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்காக கட்சி நிர்வாகிகளுக்கு மாநில அரசிடம் இருந்து சிறப்பு அனுமதிகளை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளது.

Tags : Sonia Gandhi
ADVERTISEMENT
ADVERTISEMENT