இந்தியாவில் கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை தற்போது 370 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று, இந்தியாவிலும் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கையும் 7 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக, தில்லி, பஞ்சாப், கர்நாடகா, மகாராஷ்டிரத்தில் தலா ஒருவர் உயிரிழந்திருந்த நிலையில் இன்று மட்டும் இந்தியாவில் 3 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.
மகாராஷ்டிரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 63 வயது முதியவர், அதன் தொடர்ச்சியாக பிகார் மாநிலம் பாட்னாவில் 38 வயது நபர் உயிரிழந்தனர்.
இதையடுத்து குஜராத்தில் சூரத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 69 முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரேநாளில் இந்தியாவில் 3 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.