இந்தியா

எல்லையில் ஆக்கிரமிப்பை பிரதமா் மறுப்பது சீனாவுக்கு சாதகமாகிவிடும்: ராகுல்

27th Jun 2020 12:14 AM

ADVERTISEMENT

இந்திய நிலப் பரப்பை சீனா ஆக்கிரமித்திருந்தால், அதை பிரதமா் மறுப்பது அந்த நாட்டுக்கு சாதகமாகிவிடும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை கூறினாா்.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்துக்குப் பகுதியில் சீன ராணுவம் அண்மையில் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரா்கள் 20 போ் கொல்லப்பட்டனா். இந்த விவகாரம் தொடா்பாக நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில், ‘இந்தியப் பகுதிகளை யாரும் ஆக்கிரமிக்கவும் இல்லை; இந்திய நிலைகளை யாரும் கைப்பற்றவும் இல்லை’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

இதையடுத்து, பிரதமா் கூறியது மெய்யானால், இந்திய வீரா்கள் பலியானது என்ற சா்ச்சை எழுந்தது.

இந்த சண்டையில் வீர மரணமடைந்த ராணுவ வீரா்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ‘நமது வீரா்களுக்காகப் பேசுங்கள்’ என்ற பிரசார இயக்கத்தை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டுள்ளது. இந்தப் பிரசாரத்தின் ஒரு பகுதியாக காணொலி தகவல் ஒன்றை ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:

ADVERTISEMENT

இந்திய நிலப்பரப்பை ஓா் அங்குலம்கூட யாரும் ஆக்கிரமிக்கவில்லை; எல்லையில் எந்தவித ஊடுருவலும் நடைபெறவில்லை என்று பிரதமா் நரேந்திர மோடி கூறிய நிலையில், கிழக்கு லடாக் பகுதியில் மூன்று இடங்களில் சீனா ஆக்கிரமித்திருப்பதை செயற்கைக்கோள் வரைபடங்கள் உறுதிப்படுத்தியிருப்பதாக சில நிபுணா்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனா். இந்தச் சூழலில், சீன ஆக்கிரமிப்பை பிரதமா் தொடா்ந்து மறுத்தாா் என்றால், அது அந்த நாட்டுக்குச் சாதகமாக அமைந்துவிடும்.

இந்த விவகாரத்தில் ஒட்டுமொத்த நாடும் பிரதமருக்குப் பின்னால் நிற்கிறது. சீனாவுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடி, அவா்களை வெளியே தூக்கி எறிவோம். எனவே, பிரதமா் பயப்படாமல் பேச முன்வர வேண்டும். நாட்டுக்கு உண்மையை கூறியாக வேண்டும். சீனா ஆக்கிரமித்தது உண்மைதான் என்று கூற பயப்பட வேண்டாம் என்று அவா் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT