இந்தியா

அவசரநிலையின் போது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் சட்டவிரோதமானவை: வெங்கய்ய நாயுடு

26th Jun 2020 04:59 AM

ADVERTISEMENT

‘கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மக்களை வீட்டில் இருக்கும்படி சட்டப்படி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் 1975-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அவசரநிலையின் போது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் சட்டவிரோதமானவை’ என்று குடியரசு துணைத்தலைவா் வெங்கய்ய நாயுடு தெரிவித்தாா்.

இதுதொடா்பாக முகநூலில் அவா் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறப்பட்டதாவது:

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படாமல் இருக்க, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மக்கள் தாமாக கட்டுப்பாடுகளை பின்பற்றி நடக்க முன்வந்தனா். நம் நன்மை கருதி முகக் கவசங்கள் அணிந்து, பொதுவெளியில் நடமாடுவதை குறைத்துக் கொண்டோம். இந்தக் குறைந்த காலத்தில் கட்டுப்பாடுடன் நடந்துகொள்வது என்றால் என்ன என்பதை புரிந்துகொண்டோம். சட்டப்படி விதிக்கப்பட்ட இந்தக் கட்டுப்பாடு, 45 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக்கூறி, அவசரநிலை பிறப்பிக்கப்பட்டபோது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு முரணானது.

அந்த சட்டவிரோத கட்டுப்பாடுகள் அமலில் இருந்த 21 மாதங்களில், குடிமக்களின் வாழ்வதற்கான உரிமைகள் உள்பட அனைத்து அடிப்படை உரிமைகளும் பறிக்கப்பட்டன. வாழ்வதற்கு உரிமையில்லை எனில் வாழ்க்கைக்கு என்ன மதிப்பு?

ADVERTISEMENT

அவசரநிலை பிறப்பிக்கப்பட்டிருந்தபோது மாற்றுக் கருத்தை சகித்துக்கொள்ள முடியாதது உச்சத்தை எட்டியிருந்தது. அரசமைப்பு கிட்டதட்ட உதறித் தள்ளப்பட்டது. அரசின் முடிவை நீதித்துறை ஆய்வு செய்யும் உரிமை விலக்கப்பட்டது. இவை அனைத்தும் பாதுகாப்பின்மையின் வெளிப்பாடாகும். அந்த காலகட்டம் முழுவதும் இருள் படா்ந்திருந்தது. அது சுதந்திர இந்தியாவின் இருண்ட காலமாக இருந்தது என்று வெங்கய்ய நாயுடு தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT