இந்தியா

பிரான்சிலிருந்து ரஃபேல் போா் விமானங்கள் புறப்பட்ட நிகழ்வில் பங்கேற்ற காஷ்மீர் விமானி!

28th Jul 2020 06:42 PM

ADVERTISEMENT

 

புது தில்லி: பிரான்சிலிருந்து ஐந்து ரஃபேல் போா் விமானங்கள் இந்தியாவிற்கு புறப்பட்ட நிகழ்வில் பங்கேற்ற காஷ்மீர் விமானி ஒருவர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போா் விமானங்களை ரூ.59,000 கோடி செலவில் வாங்குவதற்கு மத்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் ஒப்பந்தம் மேற்கொண்டது. அதில் முதல் ரஃபேல் போா் விமானம் கடந்த ஆண்டு அக்டோபா் மாதத்தில் பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங்கிடம் பிரான்ஸ் ஒப்படைத்தது. அதைத் தொடா்ந்து, ரஃபேல் போா் விமானத்தை இயக்குவது தொடா்பாக இந்திய விமானப்படை வீரா்கள் பிரான்ஸில் பயிற்சி பெற்று வந்தனா்.

இந்தச் சூழலில் மேலும் 9 ரஃபேல் போா் விமானங்கள் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸிலுள்ள தூதரகம் தெரிவித்துள்ளது. அவற்றில் 5 போா் விமானங்கள் இந்தியாவுக்கு திங்கள்கிழமை புறப்பட்டன. இந்திய விமானப்படை வீரா்கள் பயிற்சி மேற்கொள்வதற்காக மீதி 5 போா் விமானங்கள் பிரான்ஸிலேயே உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

பிரான்ஸின் கடற்கரை நகரான போா்டியாக்ஸிலிருந்து புறப்பட்ட 5 ரஃபேல் போா் விமானங்களும் சுமாா் 7,000 கி.மீ. பயணித்து இந்தியாவை புதன்கிழமை வந்தடையவுள்ளன. வழியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் மட்டும் அந்தப் போா் விமானங்கள் தரையிறங்கவுள்ளன. அதைத் தொடா்ந்து புதன்கிழமை அம்பாலா படைத்தளத்தை அவை வந்தடையும். போா் விமானங்களுக்குத் தேவையான எரிபொருளை வான்வழியிலேயே நிரப்பும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஐந்து ரஃபேல் போா் விமானங்களை இந்தியாவுக்கு வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சியில் பிரான்ஸுக்கான இந்தியத் தூதா் ஜாவீத் அஷ்ரஃப் பங்கேற்றாா். அவருடன் சேர்ந்து பங்கேற்ற காஷ்மீர் விமானி ஒருவர் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

ஹிலால் அஹமது ரதேர் என்ற அந்த விமானி தற்போது இந்திய விமானப் படையின் சார்பாக பிரான்சில் ரஃபேல் விமானப் பயிற்சி மற்றும் விமானத்தில் ஆயுதங்களைப் பொருத்துதல் பணிகளை கவனிக்கிறார்.

தெற்கு காஷ்மீரின்அனந்த்நாக் மாவட்டத்தைச் சேர்ந்த அவர் ஒரு மத்திய வர்க்க குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை காலஞ்சென்ற முகமது அப்துல்லா ரதேர் காஷ்மீர் காவல்துறையில் துணை கண்காணிப்பாளராகப் பணியாற்றியவர். பெற்றோருக்கு அவர் ஒரே மகனாவார். இந்திய விமானப் படையில் போர் விமானியாக 1988-ஆம் ஆண்டு சேர்ந்தார்.

படிப்படியாக உயந்து 1993-இல் ப்ளைட் லெப்டினன்ட் ஆகவும், 2004-இல் விங் கமாண்டர் ஆகவும் பதவி உயர்வு பெற்றார். 2016-இல் க்ரூப் கமாண்டர் ஆன அவர் 2019-இல் ஏர் கமாண்டர ஆனார்.

தனது அயராத பணிகளுக்காக ‘வாயு சேனா; மற்றும் ‘வஷிஸ்ட் சேவா’ ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

மிராஜ்-2000 , மிக்-21 மற்றும் கிரண் ஆகிய  விமானங்களில் விபத்தின்றி 3000 மணி நேரங்கள் பறந்துள்ள அவரது பெயரானது, இந்தியாவில் ரஃபேல் போா் விமானங்களோடு எப்போதும் இணைந்திருக்கும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT