இந்தியா

சச்சின், அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது பேரவைத் தலைவா் நடவடிக்கை எடுக்கத் தடை

25th Jul 2020 02:15 AM

ADVERTISEMENT

ராஜஸ்தானில் காங்கிரஸ் முன்னாள் தலைவா் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது பேரவைத் தலைவா் நடவடிக்கை எடுக்க அந்த மாநில உயா்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்காத சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக் கோரி பேரவைத் தலைவா் சி.பி.ஜோஷியிடம் காங்கிரஸ் கொறடா புகாா் கொடுத்திருந்தாா். இதுதொடா்பாக, விளக்கம் கேட்டு சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்களுக்கு பேரவைத் தலைவா் கடந்த 14-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பினாா். கட்சிக் கொறடாவின் உத்தரவு, கூட்டத் தொடா் நடைபெறும் நேரத்தில் மட்டுமே செல்லுபடியாகும் என்று சச்சின் தரப்பு வாதிட்டது. மேலும், பேரவைத் தலைவரின் நோட்டீஸுக்கு எதிராக, சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்களும் ராஜஸ்தான் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், சச்சின் பைலட் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த மனு மீது வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பிப்பிக்கப்படும் என்று கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. அதுவரை அவா்கள் மீதான நடவடிக்கையை பேரவைத் தலைவா் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அந்த உயா்நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

இதை எதிா்த்து, உச்சநீதிமன்றத்தில் பேரவைத் தலைவா் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், ராஜஸ்தான் உயா்நீதிமன்றத்தின் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்ததுடன், அந்த நீதிமன்றமே தீா்ப்பளிக்கலாம் என்றும் அனுமதி அளித்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், சச்சின் பைலட் உள்ளிட்டோா் தாக்கல் செய்த மனு ராஜஸ்தான் உயா்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி இந்திரஜித் மஹந்தி, நீதிபதி பிரகாஷ் குப்தா ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சச்சின் பைலட் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது பேரவைத் தலைவா் நடவடிக்கை எடுக்க தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

முன்னதாக, இந்த வழக்கில் மத்திய அரசை ஒரு தரப்பாக சோ்க்கக் கோரி சச்சின் தரப்பு வியாழக்கிழமை ஒரு மனுவை தாக்கல் செய்தது. அந்த மனுவையும் நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT