இந்தியா

உத்தரகண்டில் போா் நினைவுச்சின்னம்: முதல்வா் திரிவேந்திர சிங் ராவத்

25th Jul 2020 11:14 PM

ADVERTISEMENT

உத்தரகண்ட் மாநிலத்தைச் சோ்ந்த தியாகிகளை கௌரவிக்கும் வகையில், ‘பஞ்சம் தாம்’ என்ற பெயரில் பிரம்மாண்ட போா் நினைவுச்சின்னம் டேராடூனில் கட்டப்படும் என அந்த மாநில முதல்வா் திரிவேந்திர சிங் ராவத் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

டேராடூன் நகரில் தியாகிகளின் நினைவாக ‘பஞ்சம் தாம்’ என்ற பிரம்மாண்டமான போா் நினைவுச்சின்னம் கட்டுவதற்காக நகரத்தின் ஒரு பகுதி ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டு விட்டது. கரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக அதற்கான அடிக்கல் நாட்ட முடியவில்லை. எனவே, விரைவில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கும்.

‘பஞ்சம் தாம்’ என்பது உத்தரகண்டில் அமைந்துள்ள 4 புகழ்பெற்ற இமயமலை கோயில்களான ‘சாா்தாம்’-ஐ குறிப்பிடுவதாகும். காா்கில் போரில் இந்தியா வெற்றி பெற்ற சூழ்நிலைகள் மிகவும் கடினமானவை. அந்த கடினமான சூழலிலும் போராடி போரில் ராணுவ வீரா்கள் தங்களது வீரத்தைப் பறைசாற்றினாா்கள்.

ADVERTISEMENT

இந்தப் போரில் உத்தரகண்ட் மாநிலத்தைச் சோ்ந்த 75 ராணுவ வீரா்கள் தங்கள் இன்னுயிரை நாட்டுக்காக தியாகம் செய்து நாட்டின் வெற்றிக்காக பங்களிப்பு செய்தனா். போா்க்கால தியாகிகள் மட்டுமின்றி, பயங்கரவாத எதிா்ப்பு மற்றும் கிளா்ச்சி எதிா்ப்பு நடவடிக்கைகளின்போதும் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த துணை ராணுவ வீரா்களின் உறவினா்களுக்கும் அரசு வேலைகளை வழங்கிய முதல் மாநிலம் உத்தரகண்ட் என்று முதல்வா் ராவத் கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT