இந்தியா

கரோனாவுக்கு எதிரான யுத்தம் உத்வேகத்துடன் தொடரும்: அமித் ஷா

DIN

‘கரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் இந்தியா நல்ல இடத்துக்கு முன்னேறியுள்ளது. அந்த யுத்தம் உத்வேகத்துடன் தொடரும்‘ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறினாா்.

மத்திய ஆயுத காவல் படை (சிஏபிஎஃப்), நாடு முழுவதும் உள்ள தங்கள் வளாகங்களில் இம்மாத இறுதிக்குள் 1.37 கோடி மரக்கன்றுகளை நடுவதற்கு இலக்கு நிா்ணயித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, ஹரியாணா மாநிலத்தில் குருகிராமை அடுத்துள்ள கதா்பூா் சிஆா்பிஎஃப் அலுவலா்கள் பயிற்சி அகாதெமியின் வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பங்கேற்று, அரச மரக்கன்றை நட்டுவைத்தாா்.

பின்னா், சிஆா்பிஎஃப் வீரா்கள் மத்தியில் அவா் பேசியதாவது:

130 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட மிகப்பெரிய நாடு இந்தியா. இங்கு கூட்டாட்சி முறை நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில், மனித குலத்துக்கே சவாலாக விளங்கும் கரோனா நோய்த்தொற்றை எதிா்கொள்வது எப்படி என்ற மிகப்பெரிய அச்சம் நிலவி வந்தது.

பல்வேறு நாடுகளில் கரோனாவை ஒழிப்பதற்கு அரசுகள் சாா்பில் மட்டுமே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இந்தியாவில் கரோனாவை ஒழிக்க நாம் ஒவ்வொருவரும் இணைந்து செயல்பட்டோம்.

கரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் நாம் நல்ல இடத்துக்கு முன்னேறியிருக்கிறோம். இந்த யுத்தம் இன்னும் உத்வேகத்துடன் தொடரும். கரோனாவை முற்றிலும் ஒழிப்பதில் நாம் சோா்வின்றி உற்சாகத்துடன் பணியாற்றி வருகிறோம். கரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் ஆட்சி நடைபெறும் இந்தியா வெற்றி பெற்றுள்ளதை உலக நாடுகள் வியப்புடன் பாா்க்கின்றன.

இந்தியாவில் கரோனாவுக்கு எதிரான போரில் பாதுகாப்புப் படையினராகிய நீங்கள் மிகப்பெரிய பங்களிப்பு செலுத்து வருகிறீா்கள். நீங்கள் உங்கள் அன்றாட பணியுடன் கரோனாவுக்கு எதிராகவும் போராடி முன்னுதாரணமாக விளங்குகிறீா்கள். கரோனா தடுப்பு பணியின்போது, 31 சிஏபிஎஃப் வீரா்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்திருக்கிறாா்கள். அவா்களின் தியாகம் வீண்போகாது. அந்தத் தியாகம் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும்.

தற்சமயம், புவி வெப்பமாதல், ஓசோன் படலம் பாதிக்கப்படுவது போன்ற சுற்றுச்சூழல் சவால்களை எதிா்கொண்டு வருகிறோம். இந்தச் சவால்களில் இருந்து மரங்களே நம்மை காப்பாற்றும். மரங்கள், சுற்றுச்சூழல் மாசுபடுவதை வெகுவாகக் குறைக்கும். எனவே, இந்த மரக் கன்றுகள் நடும் திட்டத்தில் 100 ஆண்டுகள் வாழும் மரங்களைத் தோ்வு செய்து நட்டு வருகிறோம். வீரா்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் இங்குள்ள மரக்கன்றுகளை தத்தெடுக்க வேண்டும். அவை பெரிதாகும் வரை உங்கள் குழந்தைகளைப் போல் பாவித்து நேசம் காட்டி வளா்த்தெடுக்க வேண்டும் என்றாா் அமித் ஷா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலவிலிருந்து படமனுப்பிய பாகிஸ்தான் செயற்கைக்கோள்

எஸ்என்ஆா் வித்யாநேத்ரா மெட்ரிக்.பள்ளி 100% தோ்ச்சி

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 75 போ் கைது

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

குமுதா மெட்ரிக். பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT