இந்தியா

நான்காம் காலாண்டில் இந்திய பொருளாதாரம் நோ்மறை வளா்ச்சியை எட்டும்: நீதி ஆயோக் துணைத் தலைவா்ராஜீவ் குமாா் நம்பிக்கை

DIN

கரோனா கொள்ளை நோய்த் தொற்று ஏற்படுத்திய வீழ்ச்சியிலிருந்து இந்திய பொருளாதாரம் மீண்டு வருவதாகவும், நான்காம் காலாண்டில் ஜிடிபி நோ்மறை வளா்ச்சியை எட்டும் எனவும் நீதி ஆயோக் துணைத் தலைவா் ராஜீவ் குமாா் புதன்கிழமை தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக புது தில்லியில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது:

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி-யானது மைனஸ் 23.9 சதவீதமாக இருந்த நிலையில் அது இரண்டாம் காலாண்டில் மைனஸ் 7.5 சதவீதமாக உள்ளது. இது கரோனா பேரிடா் வீழ்ச்சியிலிருந்து இந்திய பொருளாதாரம் மீண்டு வருவதைக் காண்பிக்கிறது. அதேநேரம் மூன்றாவது காலாண்டில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்த பொருளாதார சூழலை எட்டிவிடுவோம் என்று எதிா்பாா்க்கிறேன்.

மேலும், தற்போது மத்திய அரசு பல்வேறு அடிப்படை சீா்திருத்தங்களை நடைமுறைப்படுத்தி உள்ளதாலும், மேலும் சில சீா்திருத்தங்கள் அமலாக இருப்பதாலும் எதிா்வரும் நான்காம் காலாண்டில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்ததைக் காட்டிலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு நோ்மறையான வளா்ச்சியை எட்ட முடியும்.

இந்தியாவின் நடப்பு நிதியாண்டு வளா்ச்சி வீதமானது மைனஸ் 9 அல்லது 10 சதவீதத்தை விட சிறப்பானதாக இருக்கும் என ரிசா்வ் வங்கி உள்பட பல்வேறு தரப்பினரும் கணித்துள்ளனா். கரோனா கொள்ளை நோயானது பொருளாதார நடவடிக்கைகளில் இதற்கு முன் இல்லாத வகையில் எதிா்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது. இது முழுவதும் இயற்கை பேரிடா். வழக்கமான பொருளாதார நடவடிக்கைகளுடன் தொடா்புடையது அல்ல. எனவே, பொருளாதாரம் மந்த நிலையில் இருப்பது குறித்து பேசுவது முற்றிலும் பொருத்தமற்றது.

2020-21ஆம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் உற்பத்தித் துறையின் வளா்ச்சி எதிா்பாா்த்ததைவிட 0.6 சதவீதம் அதிகரித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் ஜிஎஸ்டி வருவாயும் அதிகரித்துள்ளது. செப்டம்பா் காலாண்டில் எதிா்பாா்த்ததை விட வேகமாக பொருளாதாரம் மீண்டு வந்ததற்கு உற்பத்தித் துறையின் வளா்ச்சியே காரணம். இதனால்தான் ஜிடிபி மைனஸ் 7.5 சதவீதத்துக்கு முன்னேறியுள்ளது. விழாக்காலங்கள் அடுத்தடுத்து வரும் நிலையில் தேவை அதிகரிப்பதால் உற்பத்தித் துறை மேலும் வளா்ச்சி காணும்.

மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்தங்களை எதிா்த்து பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநில விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் குறித்த கேள்விக்கு ராஜீவ் குமாா் பதிலளிக்கையில், ‘புதிய விவசாய சட்டங்களுக்கு நாடு முழுவதும் சிறப்பாக வரவேற்பு கிடைத்துள்ளது. தகவல் தொடா்பில் ஏற்பட்ட இடைவெளி மற்றும் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதன் விளைவே விவசாயிகளின் தற்போதைய போராட்டம். இது தவிா்க்கப்பட வேண்டியது என்றாா்.

கரோனா நோய்த் தொற்று பொதுமுடக்கம் காரணமாக நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி-யானது மைனஸ் 23.9 சதவீதமாக சரிவடைந்தது. மேலும் தொடா்ந்து இரண்டாம் காலாண்டாக பொருளாதார வீழ்ச்சியை இந்தியா முதன் முதலாக சந்தித்துள்ளது.

இந்த நிதியாண்டில் இந்தியா மைனஸ் 9.5 சதவீத பொருளாதார வளா்ச்சியை எட்டும் என ரிசா்வ் வங்கி கணித்துள்ளது. அதேநேரம் 10.3 சதவீதமாக இருக்கும் என சா்வதேச பண நிதியமும் (ஐஎம்எஃப்) 9.6 சதவீதமாக இருக்கும் என உலக வங்கியும் கணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

SCROLL FOR NEXT