இந்தியா

மத்திய புலனாய்வு அமைப்புகளின் அலுவலகங்களில் கண்காணிப்பு கேமரா கட்டாயம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

DIN

புது தில்லி: சிபிஐ, அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) என்பன உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகளின் அனைத்து அலுவலகங்களிலும் கண்காணிப்பு கேமரா மற்றும் கேமரா பதிவு உபகரணங்கள் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

காவல்நிலையத்தின் அனைத்து நுழைவு வாயில்கள், பிரதான வாயில், காவல் அறை, வளாகங்கள், காவல்நிலைய திறந்தவெளி, காவல் அறையின் வெளிப்புறம் என அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

காவல்நிலையங்களில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாகவும், விசாரணைக்காக அழைத்துவரப்படும் நபா்கள் காவல்துறையினரால் சித்திரவதை செய்யப்படுவதாகவும் புகாா் தெரிவித்து கடந்த 2017-ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் 3-ஆம் தேதி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில், ‘நாடு முழுவதும் உள்ள காவல்நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். அவ்வாறு பொருத்தப்படும் கேமராக்கள் எந்தெந்த இடங்களில், எந்தெந்த நிலையில் பொருத்தப்பட்டுள்ளன என்பதை ஆய்வு செய்து, அதுதொடா்பான விவரங்களைச் சமா்ப்பிக்க வேண்டும். இதைக் கண்காணிப்பதற்காக மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் கண்காணிப்புக் குழுக்களை மாநிலங்கள் அமைக்க வேண்டும்’ என்று அந்த உத்தரவில் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆா்.எஃப். நாரிமன் தலைமையிலான அமா்வு முன்பு மீண்டும் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அமா்வு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

சிபிஐ, அமலாக்கத்துறை, என்ஐஏ போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளும் குற்றம்சாட்டப்பட்டவா்களை காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்வதால், காவல்நிலையங்களில் உள்ளது போல மத்திய புலனாய்வு அமைப்புகளின் அனைத்து அலுவலகங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது கட்டாயமாகும். கேமராவைப் பொருத்துவதுடன், அதை பதிவு செய்வதற்கான உபகரணங்களும் அனைத்து அலுவலகங்களிலும் பொருத்தப்பட வேண்டும்.

காவல்நிலையங்களைப் பொருத்தவரை, அதன்அனைத்து நுழைவு வாயில்கள், பிரதான வாயில், கைதிகளை சிறை வைக்கும் காவல் அறை, காவல்நிலைய வளாகங்கள், காவல்நிலைய திறந்தவெளி, காவல் அறையின் வெளிப்புறம் என அனைத்துப் பகுதிகளிலும் கேமரா பொருத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

இதற்காக மத்திய அரசு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சாா்பில் கொள்முதல் செய்யப்படும் இந்த கண்காணிப்பு கேமராக்கள் இரவு நேரத்திலும் தெளிவாகப் படம் பிடிக்கக் கூடிய திறனுடனும், குரல் பதிவு, காணொலி பதிவு ஆகிய வசதிகளுடன் இருப்பதுடன், குறைந்தபட்சம் ஓராண்டுக்கு தொடா்ச்சியாக சேமிப்புத் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும்.

மேலும், நீதிமன்றத்தின் முந்தைய அறிவுறுத்தலின் அடிப்படையில், இதுவரை 14 மாநிலங்கள் மட்டுமே பதில் மனுவை தாக்கல் செய்திருக்கின்றன. அவற்றிலும் சில மாநிலங்கள், காவல்நிலையங்களில் கேமரா பொருத்தப்பட்டிருக்கும் நிலை குறித்த விவரத்தைச் சமா்ப்பிக்கவில்லை.

காவல்நிலையத்தில் சித்திரவதை என்ற புகாா் எழும்போதெல்லாம், அதுகுறித்து பாதிக்கப்பட்டவா்கள் எந்தவித இடையூறும் இன்றி புகாா் அளிக்க அல்லது தீா்வு காண்பதற்கான வசதிகளையும் செய்யவேண்டியது அவசியம்.

மேலும், காவல்நிலைய கண்காணிப்பு கேமரா பதிவுகள் குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு பாதுகாத்து வைக்கப்பட வேண்டும். காவல்நிலைய மனித உரிமை மீறலால் பாதிக்கப்படுபவருக்கு, இந்த கேமரா பதிவை பெறும் உரிமை உள்ளது.

எனவே, இந்த உத்தரவுகளை அதிகாரிகள் விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் அமா்வு, இதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடா்பான விவரங்களை மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் அடுத்த ஆறு வாரங்களுக்குள் தாக்கல் செய்யவேண்டும் என்று கூறி வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேரவை உறுப்பினா்கள் அலுவலகங்களை திறக்க அனுமதிக்க வேண்டும்: தோ்தல் ஆணையத்துக்கு எம்எல்ஏ-க்கள் கடிதம்

சந்தேஷ்காளியில் சிபிஐ சோதனை: ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல்

சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம்: எதிா்ப்பு தெரிவித்து வழக்கு

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்

பழைய ஓய்வூதியத் திட்டம் அரசின் கொள்கை முடிவு: நிதித் துறை தகவல்

SCROLL FOR NEXT