இந்தியா

இந்தியாவில் விரைவில் கரோனாவுக்கு தடுப்பூசி:  நிதின் கட்கரி 

DIN


புது தில்லி: இந்தியாவில் கரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டு வரும் என்று மத்திய சிறு,குறு,நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சித் துறை, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி திங்கள்கிழமை நம்பிக்கை தெரிவித்தார்.

"டன் அண்ட் பிராட்ஸ்ட்ரீட்' என்ற அமெரிக்க வணிக நிறுவனத்தின் சார்பில் காணொலி வழியில் திங்கள்கிழமை நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது:

பெரும்பாலான நாடுகள் இப்போது சீனாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடுவதை விரும்பவில்லை. இந்தியாவுடனான வர்த்தகத்திலேயே நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன. இது நாட்டின் உற்பத்தித் துறைக்கு மிகச் சிறந்த வய்ப்பாகும். ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், உற்பத்திக்கான கட்டமைப்புகளை நிறுவனங்கள் மேம்படுத்த வேண்டும்.
இந்தியாவில் கரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. அதன் மூலம், கரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெற முடியும் என்பதோடு, பொருளாதார பாதிப்பிலிருந்தும் மீண்டுவிட முடியும்.

பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவித்தபடி, ரூ. 3 லட்சம் கோடி பிணையில்லா கடனுதவி மட்டுமின்றி, மேலும் ரூ. 1.48 லட்சம் கோடி மதிப்பிலான கடன்கள் தொழில்நிறுவனங்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ளன. 

பொது முடக்கத்தால் பொருளாதார பாதிப்பைச் சந்தித்தபோதும், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றன. சீனாவிலிருந்து நாம் இறக்குமதியை ஏற்கெனவே வெகுவாகக் குறைத்துள்ள சூழலில், இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்திருக்கிறது. இந்த நடைமுறை, நாட்டின் உற்பத்தித் துறைக்கு மேலும் நல்ல பலனை அளிக்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் போன்ற பொருள்கள் இறக்குமதியையும் குறைப்பதற்கான நடவடிக்கைகளும் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. 

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்காக ஏற்கெனவே 93 திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், மேலும் நூற்றுக்கும் அதிகமான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அவற்றும் விரைவில் ஒப்புதல் அளிக்கப்படும். 

காதி மற்றும் கிராமப்புற தொழில்நிறுவனங்களின் ரூ. 80,000 கோடி ஆண்டு உற்பத்தி அளவை, அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரூ. 5 லட்சம் கோடி உற்பத்தி என்ற அளவில் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக, ஐஐடி, என்ஐஐடி போன்ற கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து ஆற்றல்சார் மையங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மத்திய அமைச்சகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று நிதின் கட்கரி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

SCROLL FOR NEXT