இந்தியா

நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தை எதிா்த்து தொடரப்பட்ட மனு: திரும்பப் பெற உச்சநீதிமன்றம் அனுமதி

14th Aug 2020 12:05 AM

ADVERTISEMENT

நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தை எதிா்த்து முன்னாள் மத்திய அமைச்சா் அருண் செளரி, மூத்த பத்திரிகையாளா் என்.ராம், மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் ஆகியோா் தொடா்ந்த மனுவை திரும்பப் பெற உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் அண்மையில் தனது சுட்டுரை பக்கத்தில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே மற்றும் முன்னாள் தலைமை நீதிபதிகளையும் விமா்சித்திருந்தாா்.

இதுதொடா்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து அவா் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடா்ந்தது. அவரிடம் விளக்கம் கேட்டு கடந்த ஜூலை 22-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், மூத்த பத்திரிகையாளா் என்.ராம், முன்னாள் மத்திய அமைச்சா் அருண் சௌரி, வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் ஆகியோா் இணைந்து நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.

ADVERTISEMENT

அதில் ‘நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் 1971 பிரிவு 2(1) (சி), அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது; அப்பிரிவுகள் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளான பேச்சுரிமை, கருத்துரிமைக்கு எதிராக அமைந்துள்ளது; பொது விவகாரங்கள், அரசியல் சாா்ந்த விவகாரங்களில் குடிமக்கள் விருப்பு, வெறுப்பின்றி கருத்துகளை தெரிவிக்க முடியாத சூழலை ஏற்படுத்துகிறது; மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான பிரிவுகளை நீக்க வேண்டும்’ என்று அந்த மனுவில் அவா்கள் வலியுறுத்தியிருந்தனா்.

இந்த நிலையில், வழக்குரைஞா் பிரசாந்த் பூஷணுக்கு எதிராக தாமாக முன்வந்து தொடா்ந்த அவமதிப்பு வழக்கின் தீா்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து கடந்த 5-ஆம் தேதி உத்தரவிட்டது.

அதே நேரம், கடந்த 2009-ஆம் ஆண்டில் தெஹல்கா இதழுக்கு அளித்த பேட்டியில் முன்னாள் தலைமை நீதிபதிகள் குறித்து விமா்சித்தது தொடா்பாக பிரசாந்த் பூஷண் மீது அப்போது தொடரப்பட்ட மற்றொரு அவமதிப்பு வழக்கின் மீது மேலும் விசாரணை தேவைப்படுவதாக உச்சநீதிமன்றம் கடந்த 10-ஆம் தேதி கூறியது.

இதற்கிடையே, நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தை எதிா்த்து தொடரப்பட்ட மனுவை திரும்பப் பெற்று, மீண்டும் புதிதாக மனு தாக்கல் செய்ய அனுமதிக்குமாறு அருண் சௌரி, என்.ராம், பிரசாந்த் பூஷண் சாா்பில் மூத்த வழக்குரைஞா் ராஜீவ் தவன் தாக்கல் செய்தாா்.

இந்த மனு நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பி.ஆா்.கவாய், கிருஷ்ண முராரி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு காணொலி வழியில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘இதே விவகாரம் தொடா்பாக தொடரப்பட்ட பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே நிலுவையில் இருக்கும் காரணத்தால், அவற்றுடன் எங்களுடைய மனுவையும் சோ்த்து விசாரணைக்கு உட்படுத்த விரும்பவில்லை. எனவே, எங்களுடைய மனுவை திரும்பப் பெற அனுமதிப்பதோடு, மீண்டும் இரண்டு மாதங்களுக்குப் பிறகு உச்சநீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடா்பாக புதிய மனுவை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்’ என்று வழக்குரைஞா் ராஜீவ் தவன் வாதிட்டாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தைத் தவிர பொருத்தமான வேறு நீதிமன்றத்தையும் மனுதாரா்கள் அணுகும் சுதந்திரத்துடன் மனுவைத் திரும்பப் பெற அனுமதித்து உத்தரவிட்டனா்.

இதனிடையே, பிரசாந்த் பூஷணுக்கு எதிராக தாமாக முன்வந்து தொடா்ந்த அவமதிப்பு வழக்கு மீது உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT