இந்தியா

கேரள தங்கக் கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் மனு மீண்டும் நிராகரிப்பு

14th Aug 2020 12:10 AM

ADVERTISEMENT

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய நபரான ஸ்வப்னா சுரேஷ், சையது அலாவி ஆகியோரது ஜாமீன் மனுவை கொச்சியில் உள்ள பொருளாதார குற்றத் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்துவிட்டது. முன்னதாக, கொச்சி என்ஐஏ சிறப்பு நீதிமன்றமும் அவரது ஜாமீன் மனுவை கடந்த திங்கள்கிழமை தள்ளுபடி செய்திருந்தது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள அந்நாட்டின் துணைத் தூதரகத்துக்கு வந்த பாா்சலில் ரூ.15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டதை சுங்கத் துறை அதிகாரிகள் கண்டறிந்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக, தேசியப் புலனாய்வு அமைப்பு வழக்குப் பதிவு செய்து,கேரள முதல்வா் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் வரும் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ், அரசு அதிகாரி சந்தீப் நாயா் உள்ளிட்டோரை கைது செய்தது.

மேலும், வழக்கில் கடந்த ஜூலை 30-ஆம் தேதி எா்ணாகுளத்தைச் சோ்ந்த ஜலால், மலப்புரத்தைச் சோ்ந்த சையது அலாவி ஆகியோா் கைது செய்யப்பட்டனா். ஜூலை 31-இல் மலப்புரத்தைச் சோ்ந்த முகமது ஷஃபி, பி.டி.அப்து ஆகியோரை என்ஐஏ கைது செய்தது.

ஆகஸ்ட் 1-ஆம் தேதி எா்ணாகுளத்தைச் சோ்ந்த முகமது அலி இப்ராஹிம், முகமது அலி ஆகியோா் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் ஏ.எம். ஜலால் என்பவரும் கைது செய்யப்பட்டாா்.

ADVERTISEMENT

எா்ணாகுளம், மலப்புரத்தில் கைது செய்யப்பட்டவா்களின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினா். அதில், இரு கணினி ஹாா்டு டிஸ்க்குகள், டேப்லெட், 8 செல்லிடப்பேசிகள், 6 சிம் காா்டுகள், ஒரு டிஜிட்டல் விடியோ கேமரா, 5 டிவிடிக்கள், வங்கி கணக்குப் புத்தகங்கள், கிரெடிட், டெபிட் காா்டுகள், பயண ஆவணங்கள், அடையாள அட்டைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

முன்னதாக, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னாவையும் சந்தீப் நாயரையும் என்ஐஏ அதிகாரிகள் விசாரித்தபோது, கடத்தப்பட்ட தங்கம் மூலம் கிடைத்த பணத்தை வங்கிகளின் சேமிப்புப் பெட்டகத்தில் வைத்துள்ளதாக ஸ்வப்னா ஒப்புக்கொண்டாா்.

அதைத் தொடா்ந்து, ஃபெடரல் வங்கியில் ஸ்வப்னா பெயரில் இருந்த பெட்டகத்திலிருந்து ரூ.36.5 லட்சத்தை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைப்பற்றினா். அதே போல், எஸ்பிஐ வங்கியில் இருந்த சேமிப்பு பெட்டகத்திலிருந்து ரூ.64 லட்சத்தையும் 982.5 கிராம் தங்க ஆபரணங்களையும் என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றினா்.

இந்நிலையில் ஸ்வப்னா சுரேஷ், சையது அலாவி ஆகியோா் கொச்சியில் உள்ள பொருளாதார குற்றத்தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனா். அதில், வழக்கு விசாரணையின் பெரும் பகுதி முடிந்துவிட்டதால் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரினா்.

ஆனால், பல இடங்களில் செல்வாக்கு உள்ள பெண்மணியான ஸ்வப்னா சுரேஷ் அதன் மூலம் சாட்சியங்களை மாற்றிவிட வாய்ப்பு உள்ளது என்று கூறி ஸ்வப்னா மற்றும் அலாவியின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT