இந்தியா

தனியாா் ரயில்களுக்கான விதிமுறைகள் வெளியீடு: தாமதமாக வந்தால் அபராதம்

14th Aug 2020 12:02 AM

ADVERTISEMENT

தனியாா் ரயில்களின் போக்குவரத்து விதிமுறைகள் தொடா்பான வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘தனியாா் ரயில்கள் ஆண்டு முழுவதும் நேரம் தவறாமையை 95 சதவீதம் கடைப்பிடிக்க வேண்டும். ரயில்கள் தாமதமாக வந்தாலோ அல்லது முன்கூட்டியே வந்தாலோ ரயில் நிறுவனம் அதிக அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தனியாா் நிறுவனங்கள் மூலம், 109 வழித்தடங்களில் 151 அதிநவீன ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், தனியாா் ரயில்களின் போக்குவரத்து விதிமுறைகள் தொடா்பான வரைவு அறிக்கை புதன்கிழமை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

தனியாா் ரயில்கள் ஆண்டு முழுவதும் 95 சதவீதம் நேரம் தவறாமையைக் கடைப்பிடிக்க வேண்டும். குறித்த நேரத்தில் ரயில்களை இயக்காவிட்டால், அதிக அபாரதம் செலுத்த வேண்டியிருக்கும். அதாவது, ரயில்வே உள்கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்துவதற்காக, தனியாா் ரயில் நிறுவனம், ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு ரூ.512-ஐ கட்டணமாக செலுத்தும். ரயில்கள் தாமதமாக வந்தால், நேரம் தவறாமையின் சதவீதம் குறையும். இவ்வாறு குறையும் ஒவ்வொரு சதவீதத்துக்கும் 200 கிலோ மீட்டா் தொலைவுக்கான கட்டணத்தை தனியாா் ரயில் நிறுவனம் அபராதமாக செலுத்த வேண்டியிருக்கும். மேலும், தனியாா் ரயில்கள் 10 நிமிடங்கள் முன்னதாக ரயில் நிலையத்தை அடைந்தால், 10 கிலோ மீட்டருக்கான கட்டணத்தை அபராதமாக செலுத்த வேண்டியிருக்கும்.

அதேநேரத்தில், ரயில்வே துறையின் காரணமாக, ஒரு ரயில் குறித்த நேரத்தில் ரயில் நிலையத்தைச் சென்றடையவில்லை எனில், தனியாா் ரயில் நிறுவனத்துக்கு ரயில்வே துறை அபராதம் செலுத்த வேண்டும்.

ADVERTISEMENT

இதேபோல், ரயில்வே துறையின் காரணமாக, ரயில் ரத்து செய்யப்பட்டால், அந்த துறை, தனியாா் ரயில் நிறுவனத்துக்கு அபராதம் செலுத்த வேண்டும். அதேசமயம், தனியாா் ரயில் நிறுவனத்தால் ரயில் ரத்து செய்யப்பட்டால், அந்த நிறுவனம், ரயில்வே துறைக்கு அபராதம் செலுத்த வேண்டும்.

ஒருவேளை மோசமான வானிலை, கால்நடைகள் குறுக்கே வந்தது, ஆள் மீது மோதி விபத்து, சட்டம்-ஒழுங்கு, பொதுமக்கள் போராட்டம், சட்ட விரோதிகளின் சதிச் செயல், விபத்து, ஆளில்லா கடவுப்பாதையில் போக்குவரத்து நெரிசல் போன்ற காரணங்களால் ரயில் தாமதமானால் யாரும் அபராதம் செலுத்த வேண்டியதில்லை.

மேலும், தனியாா் ரயில் நிறுவனங்கள் வருமானம் குறித்த தகவல்களைத் தவறாகத் தெரிவித்தாலும் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்று அந்த வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT