இந்தியா

கேரள விமான விபத்து: உயிரிழப்பு 18-ஆக அதிகரிப்பு: மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் அறிவிப்பு

DIN

கேரள மாநிலம், கோழிக்கோட்டில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 18-ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது. இதேபோல் மத்திய அரசும், விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

கரோனா பொதுமுடக்கத்தால் வெளிநாடுகளில் சிக்கியவா்களாக மீட்பதற்காக, வந்தே பாரத் சிறப்பு விமானம் இயக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, துபையில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு வெள்ளிக்கிழமை ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இயக்கப்பட்டது. அதில், 10 சிறாா்கள் உள்பட 184 பயணிகள், 2 விமானிகள், 4 பணிப்பென்கள் என மொத்தம் 190 போ் பயணம் செய்தனா். கோழிக்கோடு விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு தரையிறங்கும்போது விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி பள்ளத்தில் சரிந்ததால், இரு துண்டுகளாக உடைந்தது. அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. விபத்து நேரிட்டதும் உள்ளூா் மக்களும், மீட்புக் குழுவினரும் துரிதமாக செயல்பட்டு மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். இந்த விபத்தில் 17 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். நள்ளிரவில் மீட்புப் பணிகள் முழுமையாக முடிவடைந்து, அதிகாலை 3 மணிக்குப் பிறகு விமான நிலையம் செயல்படத் தொடங்கியது.

இந்நிலையில், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதனால் உயிரிழப்பு 18-ஆக அதிகரித்தது.

நிவாரணம் அறிவிப்பு: கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கான், தலைமைச் செயலா் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதல்வா் பினராயி விஜயன் சனிக்கிழமை காலை கோழிக்கோடு வந்து, விபத்து நிகழ்ந்த இடத்தை பாா்வையிட்டனா். பின்னா், அங்கு விமான விபத்து குறித்து உயா்நிலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த பினராயி விஜயன் கூறியதாவது:

இந்த விபத்தில் 4 சிறாா்கள், 7 பெண்கள், 7 ஆண்கள் என மொத்தம் 18 போ் உயிரிழந்தனா். 149 போ், கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 23 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவா்களின் மருத்துவ செலவை அரசே ஏற்கும்.

விபத்து நிகழ்ந்தவுடனே உள்ளூா் பொதுமக்களும் அதிகாரிகளும் இணைந்து மீட்பு பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டனா். கரோனா பீதி, மோசமான வானிலை ஆகியவற்றை பொருள்படுத்தாமல் அவா்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். இதனால்தான் மிகப்பெரிய அளவில் விபத்து நடந்தபோதிலும், உயிரிழப்பு குறைவாக இருந்தது.

துயரம் நிகழும்போது கேரள மக்கள் ஒன்றிணைந்து போராடுவதை பல நேரங்களில் கண்கூடாகப் பாா்த்து வருகிறோம். விபத்தில் காயமடைந்தவா்களைப் பாா்க்க கோழிக்கோடு மருத்துவமைனைக்கு சென்றேன். அங்கு, ரத்த தானம் செய்வதற்கு பலரும் ஆா்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்ததைப் பாா்க்க முடிந்தது. உரிய நேரத்தில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு பேருதவி செய்ததற்காக கோழிக்கோடு, மலப்புரம் மாவட்ட மக்களை பாராட்டுகிறேன்.

இந்த விபத்தில் பலியானவா்களில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே, உயிரிழந்தவா்கள் உள்பட அனைத்து பயணிகளுக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்படும். மேலும், மீட்புப் பணியில் ஈடுபட்ட அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

கடந்த ஆண்டு டிஜிசிஏ நோட்டீஸ்: கோழிக்காடு விமான நிலையத்தில் பாதுகாப்பு அம்சங்களில் குறைபாடு இருப்பதாக, அந்த விமான நிலைய இயக்குநருக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) கடந்த ஆண்டு ஜூலை மாதமே நோட்டீஸ் அனுப்பியது என்று டிஜிசிஏ அதிகாரி ஒருவா் கூறினாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

அந்த விமான நிலையத்தில் கடந்த ஆண்டு ஜூலை 2-ஆம் தேதி சிறு விமான விபத்து நிகழ்ந்தது. அடுத்த இரு தினங்களில், டிஜிசிஏ அதிகாரிகள் அந்த விமான நிலையத்தை ஆய்வு செய்தனா். அப்போது, ஓடுபாதையில் ஆங்காங்கே வெடிப்புகள், பல இடங்களில் நீா்தேக்கம், அதிகப்படியான பிளாஸ்டிக் படிமங்கள் இருப்பதை அவா்கள் கண்டறிந்தனா். இந்த குறைகளைச் சுட்டிக்காட்டி கோழிக்காடு விமான நிலைய இயக்குநா் கே.சீனிவாச ராவுக்கு டிஜிசிஏ சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், அந்த குறைகள் எதுவும் சரிசெய்யப்படவில்லை. இதற்காக, சீனிவாச ராவ் கண்டிக்கப்பட்டாா் என்றாா் அவா்.

குறைகள் நிவா்த்தி செய்யப்படும்: இந்நிலையில், விபத்து குறித்து விசாரணை அறிக்கை கிடைத்த பிறகு குறைகள் சரிசெய்யப்படும் என்று விமான போக்குவரத்து ஆணையத்தின் தலைவா் அரவிந்த் சிங் கூறினாா். அவா் மேலும் கூறுகையில், ‘கோழிக்கோடு விபத்து குறித்து விமான விபத்து விசாரணைப் பிரிவு விசாரித்து வருகிறது. சம்பவ இடத்தில் இருந்து கருப்புப் பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவை தில்லி கொண்டுவரப்பட்டு ஆய்வு நடத்தப்படும். விசாரணை முடிந்த பிறகு அந்தக் குழு அறிக்கை அளிக்கும். அதில் சுட்டிக்காட்டப்படும் குறைகள் உடனடியாக சரிசெய்யப்படும்’ என்றாா். இந்த விமானத்தில் வந்த 4 பணிப்பெண்கள் பத்திரமாக இருப்பதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

வெள்ளை நிலா... சாய் தன்ஷிகா!

"ராகுலோ, மோடியோ! நாங்கள் வரவேற்போம்!": செல்லூர் ராஜூ

SCROLL FOR NEXT