இந்தியா

அரசு மருத்துவரை வெளியே துரத்திய விடுதி உரிமையாளர் மீது வழக்குப்பதிவு

20th Apr 2020 03:56 PM

ADVERTISEMENT

 

சம்பால்: உத்தரபிரதேசத்தில் கரோனா சிகிச்சைப் பணிகளில் ஈடுபட்டிருந்த அரசு மருத்துவரை வெளியே துரத்திய விடுதி உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 17,615  பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 559 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு  முதல் இந்த மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த உத்தரவு மே மாதம் 3-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக பல்வேறு மாநில அரசுகளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

ADVERTISEMENT

இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் கரோனா சிகிச்சைப் பணிகளில் ஈடுபட்டிருந்த அரசு மருத்துவரை வெளியே துரத்திய விடுதி உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது:  

உத்தரபிரதேசத்தின் சம்பால் மாவட்டத்தில் சர்த்தால் என்னும் பகுதி உள்ளது. சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடம் கரோனா தொற்றுப் பரவாமல் சோதனை செய்வதற்காக பணியமர்த்தப்பட்டிருந்த அரசு மருத்துவர் ஒருவர் அங்குள்ள விடுதி ஒன்றில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருந்தார்.

சம்பவத்தன்று தனது பணி முடிந்து விடுதி திரும்பிய மருத்துவரிடம், ‘உங்களால்தான் இந்தப் பகுதியில் கரோனா பரவுகிறது என்று கூறி, விடுதி உரிமையாளர் வாக்குவாதம் செய்யத் துவங்கியுள்ளார். அதற்கு மருத்துவர் பொறுமையாக பதிலளித்து வந்த போதும் விடுதி உரிமையாளர் அவரை வசைமாரி பொழிந்து வெளியேறுமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து தனது பொருள்களுடன் மருத்துவர் விடுதியை விட்டு வெளியேறியுள்ளார். இதுசம்பந்தமாக தனது துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

தற்போது அரசு ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அந்த விடுதி உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT