இந்தியா

காஷ்மீர் நிலவரம்: குலாம் நபி ஆஸாத் நேரில் ஆய்வு

22nd Sep 2019 03:03 AM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து, அங்கு நிலவும் சூழலை காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான குலாம் நபி ஆஸாத் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை ரத்து செய்து மத்திய அரசு கடந்த மாதம் நடவடிக்கை மேற்கொண்டது. மேலும், ஜம்மு-காஷ்மீரை இரண்டாகப் பிரித்து, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக்கவும் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டம் அடுத்த மாதம் 31-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளால் எவ்வித பிரச்னைகளும் நிகழாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஜம்மு-காஷ்மீரில் கடும் கட்டுப்பாடுகளும், தடைகளும் விதிக்கப்பட்டன. காஷ்மீரின் முக்கிய அரசியல் தலைவர்கள் சிலர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், காஷ்மீரின் நிலவரத்தை பார்வையிடச் சென்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஸ்ரீநகர் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். காஷ்மீர் நிலவரத்தை பார்வையிடச் சென்ற குலாம் நபி ஆஸாத் 3 முறை திருப்பி அனுப்பப்பட்டார். அதையடுத்து, காஷ்மீர் செல்வதற்கு அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் ஆஸாத் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, காஷ்மீரின் ஸ்ரீநகர், பாராமுல்லா, அனந்த்நாக், ஜம்மு ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் மக்களைச் சந்திப்பதற்கும், கள நிலவரத்தை ஆய்வு செய்வதற்கும் ஆஸாத்துக்கு அனுமதி வழங்கியது.   

ADVERTISEMENT

அதையடுத்து, காஷ்மீருக்கு  4 நாள் பயணமாக குலாம் நபி ஆஸாத் வெள்ளிக்கிழமை சென்றார். ஸ்ரீநகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த அவர், இரண்டாவது நாளாக அங்குள்ள மருத்துவமனைகளுக்கு சனிக்கிழமை சென்று நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். அதையடுத்து அங்குள்ள சுற்றுலா அலுவலகத்துக்கு சென்று கள நிலவரத்தை விசாரித்தார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT