இந்தியா

முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் ஜாமீன் மனு மீது செப். 25-இல் தீர்ப்பு

22nd Sep 2019 01:10 AM

ADVERTISEMENT

கருப்புப் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கர்நாடக முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே.சிவகுமாரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வரும் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஹவாலா முறையில் கோடிக்கணக்கில் பணப் பரிமாற்றம் செய்ததாகவும், வரி ஏய்ப்பு செய்ததாகவும், சிவகுமாருக்கு எதிராக வருமான வரித் துறை கடந்த ஆண்டு வழக்குப்பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதனடிப்படையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிவகுமார் மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது. 
இந்நிலையில், அமலாக்கத் துறையினரால் கடந்த 3-ஆம் தேதி சிவகுமார் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளார்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி தில்லி நீதிமன்றத்தில் சிவகுமார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சிறப்பு நீதிபதி அஜய் குமார் முன் சனிக்கிழமை நடைபெற்றது. 
அப்போது, அமலாக்கத் துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்  கே.எம். நடராஜும், அரசு சிறப்பு வழக்குரைஞர்களும்  வாதாடினர். அவர்கள் கூறுகையில், "வாங்கிய சொத்துகளுக்கு சிவகுமாரிடம் முறையான ஆதாரங்கள் இல்லை. அவரது சகோதரர் பெயரில் 27 சொத்துகள் உள்ளன. அதில் 10 சொத்துகள் ரொக்கமாக கொடுத்து வாங்கப்பட்டுள்ளன. அதற்கான நிதி எங்கிருந்து கிடைத்தது என்பதற்கு ஆதாரம் இல்லை. மிகப்பெரிய பொருளாதார ஊழலில் சிவகுமார் ஈடுபட்டுள்ளார். இந்த மாதிரியான செயல்களால், நாட்டின் பொருளாதாரமே தடுமாறும் நிலை ஏற்படும். அவர் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணப்பரிவர்த்தனை ரசீதுகள் திரும்பப் பெறப்பட்டன. அவர் சமூகத்தில் செல்வாக்கு உள்ள நபர். அவரை ஜாமீனில் விட்டால், எளிதாக ஆதாரங்களை அழித்து விடுவார். அதனால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது' என்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவகுமார் தரப்பு வழக்குரைஞர்கள் பேசுகையில், "இந்த வழக்கில் சிவகுமார் எவ்வித தவறும் செய்யவில்லை. தேவையற்ற தகவல்களை கூறி, நீதிமன்றத்தை அமலாக்கத்துறை திசைதிருப்புகிறது. சிவகுமார் பெயரில் 20 வங்கிக் கணக்குகள் மட்டுமே உள்ளன. ஆனால் 317 வங்கிக் கணக்குகள் உள்ளதாக அமலாக்கத் துறை கூறுகிறது. அதற்கான ஆதாரத்தை அமலாக்கத் துறை சமர்ப்பித்தால், அவர்கள் கூறுவதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். அவரது வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 40 லட்சம் ரூபாயால் நாட்டின் பொருளாதார நிலை அடியோடு மாறும் என்று அனைத்தையும் அமலாக்கத் துறை மிகைப்படுத்திக் கூறுகிறது. ஜாமீனில் வெளியே விட்டால், வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விடுவர் என்று அமலாக்கத் துறை கற்பனை செய்துகொண்டு ஜாமீன் தர எதிர்ப்பு தெரிவிக்கிறது. இதுபோலவே, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வழக்கிலும் அரசுதரப்பினர் நடந்து கொள்கின்றனர்' என்றனர்.
இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி அஜய் குமார், இந்த மனு மீதான தீர்ப்பை வரும் 25-ஆம் தேதி வழங்குவதாக கூறி வழக்கை ஒத்திவைத்தார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT