இந்தியா

கடைசி நேரத்தில் சந்திராயன்-2ல் கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சற்று சீரியஸான பிரச்னையாம்

ENS


பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சந்திரயான் - 2 விண்கலம் விண்ணில் ஏவப்படுவதற்கு சற்று முன் தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால், கவுன்டவுன் நிறுத்தப்பட்டது.

அதிக எடையை விண்ணுக்குத் தாங்கிச் செல்லும் திறன் கொண்டதுடன் முழுவதும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3-எம்1 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலம் இன்று அதிகாலை விண்ணில் செலுத்தப்பட இருந்தது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்திலிருந்து இன்று அதிகாலை 2.51 மணிக்கு ராக்கெட் ஏவப்பட  இருந்தது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக மேற்கொண்டு வந்தனர்.

விண்ணில் ஏவப்படுவதற்கான பணிகளை, ஒவ்வொரு நாளும் புகைப்படத்துடன் இஸ்ரோ வெளியிட்டு வந்தது. விண்கலத்தை விண்ணுக்கு எடுத்துச் செல்லவிருந்த ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட், கடந்த சனிக்கிழமையன்று ராக்கெட் ஏவுதளத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அத்துடன், கடைசிக் கட்ட ஆய்வுகளை திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். அடுத்த ஓரிரு நாள்களில் ராக்கெட்டை ஏவுவதற்கான கவுன்ட்-டவுனையும் விஞ்ஞானிகள் தொடங்கினர்.

ஆனால், விண்கலம் விண்ணில் ஏவப்பட 56 நிமிடங்களே இருந்த நிலையில், விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, விண்ணில் ஏவும் பணி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, கவுன்டவுனும் நிறுத்தப்பட்டது.

முதற்கட்டமாக, வால்வு பகுதியில் எரிபொருள் கசிவு கண்டுபிடிக்கப்பட்டதே விண்கலம் விண்ணில் ஏவும் பணி நிறுத்தப்படக் காரணம் என்று கூறப்படுகிறது. அடுத்து விண்ணில் ஏவும் பணி எப்போது நடைபெறும் என்ற தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் தொழில்நுட்பக் கோளாறு சற்று சிக்கலான விஷயம் என்று மட்டும் கூறப்படுகிறது.

சந்திரயான்-1 விண்கலம்: இஸ்ரோ முதலில் நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-1 விண்கலத்தை கடந்த 2008 அக்டோபர் 22-ஆம் தேதி விண்ணுக்கு அனுப்பியது. நிலவின் வடதுருவத்தில் தரையிறங்கி 312 நாள்கள் ஆய்வை மேற்கொண்ட இந்த விண்கலம், நிலவின் பரப்பில் பனிக்கட்டி  வடிவில் தண்ணீர் இருப்பதை உறுதிப்படுத்தி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது.

மேலும், மெக்னீஷியம்,  அலுமினியம், சிலிக்கான் போன்ற தாதுக்களும் நிலவின் பரப்பில் படிமங்களாக இருப்பதையும் சந்திரயான்-1  கண்டறிந்தது. சந்திரயான் விண்கலம் பி.எஸ்.எல்.வி.-சி11 ராக்கெட் மூலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது. அதன் அடுத்தகட்டமாக தற்போது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலம் அனுப்பப்படுகிறது. இது மொத்தம் 14 நாள்கள் மட்டுமே நிலவில் ஆய்வை மேற்கொள்ளும்.

சந்திரயான் -2 திட்டத்தின்படி நிலாவை சுற்றி வலம் வந்து ஆய்வு செய்யும் 2,379 கிலோ எடைகொண்ட (ஆர்பிட்டர்) விண்கலம், நிலாவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் 1,471 கிலோ எடைகொண்ட (லேண்டர்) கலம், நிலாவின் தரையில் 500 மீட்டர் வரை ஊர்ந்து சென்று ஆய்வு செய்யும் 27 கிலோ எடைகொண்ட (ரோவர்) கலம் என மூன்று அமைப்புகள் இடம் பெற்றிருக்கும்.

இந்த மூன்றிலும் அதிநவீன கேமராக்கள், எக்ஸ் ரே கருவிகள், வெப்ப நிலையை ஆய்வு செய்யும் கருவிகள், லேசர் தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடிய கருவிகள் என 13 வகையான கருவிகள் இணைக்கப்பட்டிருக்கும். இதில், ரோவர் பகுதி லேண்டர் அமைப்புக்குள்ளும், லேண்டர் ஆர்பிட்டருக்குள்ளும் வைக்கப்பட்டு ராக்கெட்டுக்குள் நிலைநிறுத்தப்பட்டிருக்கும்.

விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்ட பின்னர், திட்டமிட்ட சுற்றுவட்டப்பாதையில் சுமார் 45 நாள்கள் பயணித்து,  செப்டம்பர் மாதம் 6-ஆம் தேதி நிலவின் தென் துருவத்தை அடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.  நிலவின் தென் துருவத்திலுள்ள இரண்டு மிகப் பெரிய பாறைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் விண்கலத்தை தரையிறக்குவதற்கு இஸ்ரோ முடிவு செய்துள்ளது.

இந்த விண்கலத்துடன் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் "ரெட்ரோ ரிப்ளெக்டர்' என்ற கருவியையும் சந்திரயான் -2 நிலாவுக்கு கொண்டு செல்ல உள்ளது. 

 ரூ.603 கோடியிலான இந்த திட்டத்தால் பயன் என்ன?: 
நிலவில் சந்திரயான்-1 விண்கலம் கண்டறிந்தவற்றிலிருந்து, அடுத்தகட்ட ஆய்வை மேற்கொள்வதற்காக, சந்திரயான்-2 விண்கலம் அனுப்பப்படுகிறது. இது முதன்முறையாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆய்வை மேற்கொள்ள உள்ளது. நிலவின் தென் துருவத்திலும் தண்ணீர் இருக்கிறதா என்பது குறித்த அடிப்படை ஆய்வுகள் இந்தத் திட்டத்தில் மேற்கொள்ளப்படும் என்பதோடு, குறிப்பாக சூரிய குடும்பத்தின் வரலாறு குறித்து புரிந்துகொள்வதற்கான தகவல்களைப் பெறுவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம்.

நிலவில் மனிதர்களின் குடியிருப்புக்கு சாத்தியமான இடங்களில் ஒன்றாக தென்துருவம் கருதப்படுகிறது. இதற்கான சாத்தியக்கூறுகளையும் இந்த ஆய்வு நமக்குத் தர உள்ளது. அதன் மூலம், நிலவில் மனிதன் வாழ முடியுமா என்பது குறித்து உலகம்  முழுவதும் நடைபெற்று வரும் பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு இந்த சந்திரயான்-2 திட்டம் முன்மாதிரியாக விளங்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர் இஸ்ரோ விஞ்ஞானிகள்.

மேலும், இந்தத் திட்டத்தின் வெற்றி விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும். விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்துக்கும் இந்த வெற்றி பேருதவியாக இருக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

உலக அளவில் 4-ஆவது நாடு!    
சந்திரயான்-2 திட்டத்தில், புதிய முயற்சியை இஸ்ரோ மேற்கொள்ள உள்ளது. அதாவது, நிலவின் பரப்பில் தரையிறக்கப்படும் லேண்டர் கலத்தை, நிதானமாகவும் மெதுவாகவும் தரையிறக்கும் முயற்சிதான் அது.

இதுவரை அமெரிக்கா, சீனா, இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இதுபோன்று நிலவின் பரப்பில் ஆய்வுக் கலன்களை மெதுவாக தரையிறக்கும் முயற்சியை 38 முறை மேற்கொண்டுள்ளன. அதில் பாதிக்கு பாதி என்ற அளவில் மட்டுமே வெற்றிபெற்றிருக்கின்றன. அதிலும் அமெரிக்கா உள்பட மூன்று நாடுகள் மட்டுமே இதுவரை இந்த முயற்சியில் வெற்றி பெற்றுள்ளன. 

இப்போது, முதன்முறையாக மெதுவாக தரையிறக்கும் முயற்சியை இந்தியா மேற்கொள்ள உள்ளது. இதில் வெற்றி கிடைத்தால், உலக அளவில் நிலவின் தரையில் மெதுவாக ஆய்வுக் கலத்தை இறக்கிய நான்காவது நாடு என்ற பெருமை இந்தியாவுக்குக் கிடைக்கும். அத்துடன், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்துக்கும் இது உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

SCROLL FOR NEXT