இந்தியா

வன்முறையை நோக்கி வழிநடத்துவது தலைமைப் பண்பா? ராணுவத் தலைமை தளபதி கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு!

26th Dec 2019 05:18 PM

ADVERTISEMENT


வன்முறையை நோக்கி வழிநடத்துவது தலைமைப் பண்பு கிடையாது என்ற ராணுவத் தலைமை தளபதி விபின் ராவத்தின் கருத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.

தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய ராணுவத் தலைமை தளபதி விபின் ராவத்,

"மக்களைத் தவறான திசையில் வழிநடத்துபவர்கள் தலைவர்கள் அல்ல. நிறைய பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை நாம் பார்க்கிறோம். நமது நகரங்களில் அவர்கள் ஒரு பெரும் கூட்டத்தை வன்முறையை கையில் எடுக்கும் வகையில் வழிநடத்துகின்றனர். இது தலைமைப் பண்பு கிடையாது" என்றார்.

இந்நிலையில், இவருடையக் கருத்தை அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான ஒவைஸி விமரிசித்துள்ளார். இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய ஒவைஸி, "அனைவருக்கும் போராடுவதற்கான உரிமை உள்ளது. நெருக்கடி நிலை காலகட்டத்தில் பிரதமரே போராட்டத்தில் ஈடுபட்டதாகக் குறிப்பிடுகிறார். போராட்டங்களின்போது வன்முறை ஏற்பட்டால், அதைக் கட்டுப்படுத்துவதற்குப் போலீஸ் இருக்கிறது. இதில் ஏன் ராணுவம் தலையிட வேண்டும்? இதுபோன்ற கருத்துகளைப் பேசுவதன்மூலம் மோடி அரசை அவர் குறைத்து மதிப்பிடுகிறார்" என்றார்.

ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் திக்விஜய் சிங் ராணுவத் தலைமை தளபதியின் கருத்தை விமரிசிக்கும் வகையில் டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில்,

"உங்களது கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். அதேசமயம், தலைவர்கள் தம்மைப் பின்பற்றுவர்களை வகுப்புவாத வன்முறை மூலம் இனப்படுகொலையைச் செய்ய அனுமதிக்க மாட்டார்கள். இதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?" என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT