தற்போதைய சூழ்நிலையில் தமிழக அரசால் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாது என்று திமுக தரப்பு வழக்கறிஞர் வில்சன் கூறினார்.
தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகி, வேட்புமனுத் தாக்கல் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், வார்டு வரையறை, இட ஒதுக்கீடு பணிகள் முறையாக நடைபெறவில்லை என்றும் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கு இன்று நீதிபதி எஸ்.ஏ.பாப்டே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஊராட்சி தலைவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளுக்கான தேர்தலை நடத்த நீதிபதி உத்தரவிட்டார்.
2011 மக்கள் தொகை அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு
இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக தரப்பு வழக்கறிஞர் வில்சன், 'முறையாக வார்டு வரையறை பணிகள் முடிந்த பின்னரே தேர்தல் நடத்தப்பட வேண்டும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3 மாதங்களுக்குள் வார்டு வரையறை பணிகளை முழுவதும் முடித்தபிறகு தேர்தலை நடத்த நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. உச்ச நீதிமன்றம் கூறியுள்ளபடி, தற்போதைய சூழலில் தமிழக அரசால் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாது' என்று கூறினார்.