தமிழ்நாடு

வெளிநாடுகளிலிருந்து வரும் வாட்ஸ்-ஆப் அழைப்புகள்: பின்னணி என்ன?

11th May 2023 01:15 PM

ADVERTISEMENT

மோசடி மின்னஞ்சல், மோசடி குறுந்தகவல்கள், செல்லிடபேசி அழைப்புகளைத் தொடர்ந்து, தற்போது வெளிநாட்டு எண்களிலிருந்து வாட்ஸ்-ஆப்களில் தொடர்ந்து அழைப்புகள் வந்தவண்ணம் இருப்பது மக்களை கவலையடையச் செய்கிறது.

ஒரு பக்கம் பண மோசடி என்று பயமுறுத்தும் சைபர் கிரைம் குற்றவாளிகளுக்கு இடையே, இவ்வாறு இடைநில்லாமல் தொடர்ந்து வாட்ஸ்-ஆப்களில் வெளிநாட்டு எண்களிலிருந்து வரும் அழைப்புகள் மக்களை அச்சமடையவும் செய்துள்ளது.

+84 (வியத்நாம்), மொராக்கோவின் +212, இந்தோனேசியாவின் +62 என வெளிநாட்டு எண்களின் பின்கோடுடன் தொடங்கும் எண்களிலிருந்து தொடர்ச்சியாக மூன்று நான்கு வாட்ஸ்-ஆப் அழைப்புகள் வந்தவண்ணம் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பலரும் புகார்களை முன்வைத்துள்ளனர்.

எனினும் இதுவரை யாரும் இதுபற்றி காவல்நிலையத்தில் புகார் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

சில முறை அழைப்புகளை எடுத்தாலும், யாரும் பேசுவதில்லை, பிளாங்க் கால்களாகவே இருப்பதாகவும், அந்த அழைப்புகளின் புரொஃபைல் படங்கள் பெரும்பாலும் பெண்களின் படங்களாகவோ அல்லது படங்கள் இல்லாமலோ இருப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் தங்களது இன்னலை பகிர்ந்திருப்பவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சிலருக்கு ஒவ்வொரு நாளும் இதுபோன்ற அழைப்புகள் வருவதாகவும், சிலருக்கு ஒரே எண்ணிலிருந்து தொடர்ச்சியாக அழைப்புகள் வருவதாகவும் கூறுகிறார்கள்.

இது குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் கூறுகையில், இந்த எண்கள் எல்லாம், உண்மையாக பயன்படுத்துபவர்களின் எண்கள் அல்ல என்றும், அவற்றை மாஸ்க் செய்து மோசடியாளர்கள் பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். அதேவேளையில், இதுபோன்று வாட்ஸ்-ஆப் அழைப்புகளின் பின்னனி என்ன என்பது இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், இதுபோன்ற அழைப்புகள் அண்டை மாநிலங்களிலும் வருவதால், காவல்துறையினர் இது குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், அதில் இந்த எண்களை பிளாக் செய்து வாட்ஸ்-ஆப்பிலேயே ரிப்போர்ட் செய்யுமாறும், ஒரு எண்ணுக்கு அதிகாமான ரிப்போர்ட் மெசேஜ்கள் வரும் போது வாட்ஸ்-ஆப் அது குறித்து நடவடிக்கை எடுக்கும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

Tags : whatsapp
ADVERTISEMENT
ADVERTISEMENT