தெரிந்துகொள்ள

தேர்தல் என்றால் இவர்களது பணி அளப்பரியது

1st Apr 2021 10:00 AM

ADVERTISEMENT


அமைதியான, சுதந்திரமான, நேர்மையான தேர்தலுக்கு சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு முக்கியத் தேவையாகும். 

குற்றச்செயல்கள், பணபலம், ஆள்பலம் போன்றவை தேர்தலுக்கு மிகப்பெரிய சவால்கள். எனவே, தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல், தேர்தலுக்குப் பின்பு வரை சட்டம் - ஒழுங்கை பராமரிக்க மாநிலக் காவல்துறையுடன் மத்திய காவல்படையும் ஈடுபடுத்தப்படுகின்றன.

இந்தப் பணியில் மாநில காவல்துறையோடு, மாநில ஆயுத ரிசர்வ் படை, தமிழ்நாடு சிறப்புக் காவல்படை, முன்னாள் ராணுவத்தினர், தேசிய மாணவர் படையினர் ஆகியோர் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவரும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருப்பார்கள். 

ADVERTISEMENT

தேர்தல் அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் தேர்தலில் பயன்படுத்தப்படும் பொருள்களுக்கும் வேட்பாளர்களுக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் முக்கிய நபர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் பணியை மாநில காவல்துறை மேற்கொள்ளும்.

மத்திய ஆயுதக் காவல்படையின் பணி, தேர்தல் நடைபெறும் நாளுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாகத் தொடங்குவது வழக்கம். தேவைப்படும் இடங்களில் முன்கூட்டியே பயன்படுத்தப்படவும் வாய்ப்புண்டு.

இவர்கள் தவிர், ஓய்வு பெற்ற காவலர்கள், தீயணைப்புப் படையினர், ஊர்க்காவல் படையினர், வனத்துறை காவலர்கள், சிறைக் காவலர்கள் ஆகியோரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த சில நிபந்தனைகளுடன் தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கும்.

இவர்கள் வாக்குச்சாவடிக்கு வெளியே கூட்டம் சேராமல் முறைப்படுத்தவது, வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு சரியாக நடைபெறுவதை ஒழுங்குப்படுத்தும் பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஆயுதங்கள் எதுவும் இல்லாமல்தான் இவர்கள் பணியாற்றுவார்கள்.

வாக்குச்சாவடி பாதுகாப்பில் மாநில காவல்துறையும், சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் மத்திய ஆயுத காவல்படையினரும் ஈடுபடுத்தப்படுவார்கள்.

தேர்தல் முடிந்து மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் இடத்தை பாதுகாக்கும் பொறுப்பு மத்திய ஆயுத காவல்படையினரைச் சேரும்.

அதுபோல, வாக்கு எண்ணிக்கையின்போது மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்படும். அது என்ன மூன்றடுக்குப் பாதுகாப்பு என்கிறீர்களா.. மத்திய ஆயுத காவல்படையினர் உள் பகுதியிலும், தமிழ்நாடு சிறப்பு காவல்படையினர் அல்லது ஆயுத ரிசர்வ் படையினர் நடுப்பகுதியிலும், உள்ளூர் காவல்துறையினர் வெளிப்பகுதியிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

ஒவ்வொரு மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு நிலைமையைப் பொருத்து படைகளின் பலம் அதிகரிக்கப்படுவது வழக்கம்.
 

Tags : election police reserve
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT