தொகுதிகள்

விழுப்புரம்: மீண்டும் சி.வி.சண்முகம், க.பொன்முடி மோதுவார்களா?

ஜெபலின்ஜான்

விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், திமுக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி மீண்டும் நேரடியாக போட்டியிடுவார்களா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

தமிழகத்தின் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான விழுப்புரம் மாவட்டத்தின் தலைநகராக அமைந்துள்ளது விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதி (தொகுதி எண்: 74).

தொகுதிக்குள்பட்ட பகுதிகள்

விழுப்புரம் நகராட்சி,  வளவனூர் பேரூராட்சி என குறைந்த அளவு நகர பகுதிகளே இத்தொகுதிக்குள் உள்ளன. விழுப்புரம் வட்டத்துக்குள்பட்ட அய்யன்கோவில்பட்டு, காகுப்பம், பொய்யப்பாக்கம், மாதிரிமங்கலம், செங்காடு, வடுகநாதன்குப்பம், மேல்பாதி, மகாராஜபுரம், எருமந்தாங்கல், சாலை அகரம், கோலியனூர், கல்லப்பட்டு, பெத்துரெட்டிக்குப்பம், இளங்காடு, வி.புதூர், 

முதலியார்குப்பம், குமுளம், மனக்குப்பம், மலராஜம்குப்பம், குடுமியாங்குப்பம், நரையூர், பனங்குப்பம், தொடந்தனூர், பானாம்பட்டு, வி.மருதூர், பூந்தோட்டம், நன்னாடு, வேடம்பட்டும் பெரும்பாக்கம், கோனூர், தேனி, வெண்மணியாத்தூர், கொத்தமங்கலம், வெங்கடேசபுரம், சட்டிப்பட்டு, ஒருகோடி, தோக்கவாடி, கொண்டங்கி, வழுதரெட்டி, சாலமேடு, ஆனங்கூர், நன்னட்டாம்பாளையம், மலவராயனூர், சாலையாம்பாளையம் (கிழக்கு), 

கெங்கராம்பாளையம், அர்பிசம்பாளையம், வெங்கடாத்திரி அகரம், பில்லூர், காவணிப்பாக்கம், குளத்தூர், கண்டமானடி, கண்டம்பாக்கம், கப்பூர், மரகதபுரம், கண்டியமடை, பெடாகம், அரியலூர் (விழுப்புரம்), சித்தாத்தூர் (திருக்கை), அத்தியூர் (திருவடி), வேலியாம்பாக்கம், கொங்கரகொண்டான், தளவானூர் (திருவடி), திருப்பாச்சனூர், சேர்ந்தனூர், பஞ்சமாதேவி, சிறுவந்தாடு, மோட்சகுளம், பரசுரெட்டிப்பாளையம், பூவரடன்குப்பம், அரசமங்கலம், தென் குச்சிப்பாளையம், கள்ளிப்பட்டு, மற்றும் வடவாம்பலம் ஆகிய கிராம பகுதிகள் தான் இத்தொகுதிக்குள் அதிகம் உள்ளன.

வாக்காளர் விவரம்

ஆண்கள்: 1,27,445
பெண்கள்: 1,33,463 
மூன்றாம் பாலித்தவர்: 63
மொத்தம்: 2,60,970

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 பேரவைத் தொகுதிகளில் இங்கு தான் அதிக வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

விழுப்புரம் தொகுதியில் வெற்றி பெறும் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வுக்கு அமைச்சர் பதவி கிடைப்பது கடந்த 1996 முதல் வழக்கமான நடைமுறையாகவே இருந்து வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட திண்டிவனம் தொகுதியில் 2001, 2006 பேரவைத் தேர்தல்களில் திண்டிவனம் தொகுதியில் வெற்றிப்பெற்ற அமைச்சர் சி.வி.சண்முகம், திண்டிவனம் தனித்தொகுதியாக மாறியதால் 2011-இல் விழுப்புரம் தொகுதிக்கு மாறினார். 

1996,  2001,  2006 என மூன்று முறை வெற்றிப்பெற்ற முன்னாள் அமைச்சர் க.பொன்முடியை,  2011 பேரவைத் தேர்தலில் 12,097 வாக்குகள் வித்தியாசத்தில் சண்முகம் தோற்கடித்தார்.  அதிமுக-தேமுதிக கூட்டணியில் சண்முகத்துக்கு 90,304 (52.18 சதவீதம்) வாக்குகளும்,  திமுக, பாமக, விசிக  கூட்டணியில் பொன்முடிக்கு 78,207 (45.19 சதவீதம்) வாக்குகளும் கிடைத்தன.

2011-இல் தோல்வி அடைந்ததால் முன்னாள் அமைச்சர் பொன்முடி, விழுப்புரத்தில் இருந்து இடம்மாறி திருக்கோவிலூர் தொகுதிக்குச் சென்றார்.  இருப்பினும் விழுப்புரம் தொகுதியிலேயே அமைச்சர் சண்முகம் போட்டியிட்டு, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் அமீர் அப்பாஸை 22,291 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். சண்முகத்துக்கு 69,421 (36.27 சதவீதம்),  திமுக கூட்டணி வேட்பாளர் அமீர் அப்பாஸுக்கு 47,130 (24.94 சதவீதம்),  தனித்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளர் பி.பழனிவேலுக்கு 36,456 வாக்குகளும் (19.29 சதவீதம்),  தேமுதிக வேட்பாளர் எல்.வெங்கடேசனுக்கு 24,907 வாக்குகளும் (13.18 சதவீதம்) கிடைத்தன.

திமுகவில் 1996, 2001,  2006  என மூன்று முறை வெற்றி பெற்ற 1996,  2006  என இருமுறை கருணாநிதி அமைச்சரவையில் உயர் கல்வி மற்றும் கனரக தொழிற்சாலைகள் துறை அமைச்சராக பதவி வகித்தார்.  2011 பேரவைத் தேர்தலில் இத்தொகுதியில் அமைச்சர் சி.வி.சண்முகத்திடம்,  பொன்முடி 12,097 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.  இதையடுத்து இத்தொகுதியில் இருந்து திருக்கோவிலூர் தொகுதிக்கு மாறிய பொன்முடி 2016 தேர்தலில் அங்கு வெற்றிபெற்றார்.

விழுப்புரம் தொகுதியில் 2011,  2016 என இரு முறை வெற்றிபெற்ற அமைச்சர் சண்முகம் ஜெயலலிதா,  எடப்பாடி பழனிசாமி அமைச்சரவைகளில் வணிகவரி, பத்திரப்பதிவு, பள்ளிக் கல்வி, சட்டத்துறை என முக்கிய அமைச்சர் அந்தஸ்தில் இருந்து வருகிறார்.  இத்தொகுதி விஐபி அந்தஸ்தை பெற்றாலும் இங்கு இன்னும் பொதுமக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வளர்ச்சித் திட்டப் பணிகள் வரவில்லை என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நிறைவேற்றப்பட்ட பணிகள்

குறிப்பாக திமுக ஆட்சி காலத்தில் அரசு மருத்துவக் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி உள்ளிட்டவற்றை பொன்முடி கொண்டுவந்தார். இப்போது அதிமுக ஆட்சி காலத்தில் சண்முகம்,   அரசு சட்டக் கல்லூரி, அரசு மகளிர் கல்லூரி,  அரசு கல்வியியல் கல்லூரி ஆகியவற்றை கொண்டுவந்துள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கும் தினத்தில் ஜெயலிலதா பெயரில் பல்கலை. உருவாக்க அடிக்கல் நாட்டப்பட்டது.

மேலும்,  தேர்தல் தேதி அறிவிக்க இருந்த ஒரு வாரத்துக்கு முன்பு கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மரக்காணத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதன் மூலம் விழுப்புரம் நகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் குடிநீர்ப் பற்றாக்குறை கிராமங்கள் பயன்பெறும்.

நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள்

இருப்பினும் விழுப்புரம் நகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட 6 கிராமங்களை கொண்ட பகுதிகளில் அதாவது 6 வார்டுகளில் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இது இத்தொகுதி மக்களின் 10 ஆண்டு கால கோரிக்கை ஆகும். மேலும் விழுப்புரத்தில் தொழிற்சாலைகள் ஏதும் இல்லாததால் வேலைவாய்ப்புக்காக இங்குள்ள இளைஞர்கள் சென்னை அல்லது புதுச்சேரிக்கு இடம்பெயர வேண்டிய நிலை உள்ளது. எனவே,  விழுப்புரம் தொகுதிக்குள்பட்ட பகுதியில் அரசு தொழிற்பேட்டை, பொதுத்துறை ஆலைகள் அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை.

விழுப்புரம் நகரைச் சுற்றி சென்னை சாலை,  கடலூர் சாலை,  புதுச்சேரி சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் வெளிவட்ட சுற்றுச்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருகின்றனர். தமிழகத்தின் முக்கியமான விழுப்புரம் ரயில் நிலையத்தை மேலும் விரிவாக்கம் செய்து கூடுதல் ரயில் வசதி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இத்தொகுதியில் வன்னியர்கள் 30 சதவீதம்,  ஆதிதிராவிடர்கள்  20 சதவீதம், முதலியார்கள்15 சதவீதம்,  உடையார்கள் 10 சதவீதம்,  இஸ்லாமியர்கள்  8 சதவீதம் மற்றும் பிற சமூக வாக்குகள் உள்ளன. அதிமுக கூட்டணியில் பாமக இருப்பது அதிமுகவுக்கு மிகப்பெரிய பலம். அதேநேரத்தில் பாமகவுக்கு எதிராக பிற சமூக வாக்குகள் ஒன்று திரள்வதை தடுத்து நிறுத்துவதை பொருத்து தான் அதிமுகவின் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படும்.  திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இருப்பது திமுவுக்குவுக்கும் பலம் சேர்க்கும்.

கடந்த தேர்தல்கள்

இங்கு,  1962, 1967, 1971,  1980,  1989,  1996,  2001,  2006 என 8 முறை திமுகவும், 1977,  1984,  1991,  2011,  2016 என 5 முறை அதிமுகவும்,  1952-இல் சுயேச்சையும், 1957-இல் காங்கிரஸ் கட்சியும் தலா ஒரு முறை பெற்றுள்ளது.  60 ஆண்டுகளாக இத்தொகுதியில் திராவிட  கட்சிகளே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. 

அதிமுகவை பொருத்தவரை இத்தொகுதியில் மீண்டும் சி.வி.சண்முகம் போட்டியிடுவது உறுதி. முதல்கட்ட அதிமுக வேட்பாளர் பட்டியலில் சண்முகம் இடம் பெற்றுள்ளார்.

போட்டியிட வாய்ப்புள்ள கட்சிகள்

கடந்த முறை கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டது.  இந்த முறை இத்தொகுதியில் திமுக போட்டியிடுவது உறுதி என்ற தகவல் வெளியாகியுள்ளது.  ஆனால்,  திமுகவில் போட்டியிடுவது யார் என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது.

திமுகவுக்கு வியூக ஆலோசனை தெரிவித்து வரும் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் குழு அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில் வலுவான,  முன்னாள் அமைச்சர்கள் அல்லது திமுக மாவட்டச் செயலர்கள் தான் போட்டியிட வேண்டும் என திமுக தலைமைக்கு பரிந்துரைத்துள்ளது.

அதை திமுக தலைமை பரிசீலனை செய்தால் திருக்கோவிலுரை கைவிட்டு மீண்டும் விழுப்புரம் தொகுதியில் பொன்முடி போட்டியிட வேண்டியிருக்கும். அவ்வாறு போட்டியிட்டால் மீண்டும் சி.வி.சண்முகம் - க.பொன்முடி இடையே கடும் போட்டி உருவாகும்.

மேலும் அதிமுகவில் இருந்து விலகி அண்மையில் திமுகவில் இணைந்த முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக செயலராக பதவி வகித்தவருமான இரா.லெட்சுமணனும் களம் இறங்கக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

விழுப்புரம் தொகுதியில் மூன்று முறை வெற்றிப்பெற்றுள்ள பொன்முடி உடையார் சமூகத்தை சேர்ந்தவர். இத்தொகுதியில் வன்னியர்கள் கணிசமாக இருப்பதால் வன்னியரான சண்முகத்துக்கு எதிராக திமுக சார்பிலும் வன்னியர் சமூகத்தை சேர்ந்த லெட்சுமணனை களம் இறக்கினால் போட்டி வலுவாக இருக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது.

சண்முகத்துக்கு எதிராக திமுக சார்பில் பொன்முடி அல்லது லெட்சுமணன் களம் இறங்கினால் சுவாரசியமான போட்டியாக மாறக்கூடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

கொலை செய்யப்பட்ட நேஹாவின் பெற்றோரிடம் முதல்வா் ஆறுதல்

கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று முதல்கட்டத் தோ்தல்: 247 வேட்பாளா்கள் போட்டி

அதிமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT