தொகுதிகள்

சேந்தமங்கலம்(தனி): பழங்குடியின தொகுதியில் அதிமுக கரம் ஓங்குகிறது?

எம்.மாரியப்பன்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம், பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட தனித் தொகுதியாகும்.

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான கொல்லிமலை இந்தத் தொகுதியில் அமைந்துள்ளது. மேலும், ஆண்டுதோறும் கூடும் பேளுக்குறிச்சி சந்தை இத்தொகுதியில் உள்ளது. மூன்று மாதங்கள் வரை அனைத்து மளிகைப் பொருள்களும் கிடைக்கும் வகையிலான சந்தை, புதன் சந்தை, நகரில் வாரந்தோறும் நடைபெறும் மாட்டுச்சந்தை ஆகியவையும் சிறப்புமிக்கவை. இச்சந்தைகளுக்கு பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வருவர்.

நில அமைப்பு:

சேந்தமங்கலம் தொகுதியின் கிழக்குப் பகுதியில் துறையூர் தொகுதியும், வடக்கில் கெங்கவல்லி தொகுதியும், மேற்கில் நாமக்கல் தொகுதியும், தெற்கில் கரூர் தொகுதியும் உள்ளன.

தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளாக சேந்தமங்கலம் வட்டம், கொல்லிமலை வட்டம், நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் இரு கிராமங்கள், மோகனூர் ஒன்றியத்தில் புதுப்பட்டி, வளையப்பட்டி கிராமங்கள், நாமக்கல் ஒன்றியத்தில் வசந்தபுரம் கிராமம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.   

வாக்காளர்கள் விவரம்:

ஆண்கள்: 1,18,702
பெண்கள்: 1,23,842
மூன்றாம் பாலினத்தவர்:   25
மொத்தம்: 2,42,569
வாக்குச்சாவடிகள்:  358  

சமூக நிலவரம்:

சேந்தமங்கலம் தொகுதியில் பழங்குடியினர், கொங்கு வேளாளக் கவுண்டர், தாழ்த்தப்பட்டோர், வன்னியர் சமூகத்தினர் அதிக அளவில் உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையாக பழங்குடியின சமூகத்தினரும், தாழ்த்தப்பட்டோரும் உள்ளனர்.

கோழிப்பண்ணை, ஜவ்வரிசி ஆலை, விவசாயம், விசைத்தறி மற்றும் சார்ந்த உப தொழில்கள், சரக்குப் போக்குவரத்து ஆகியவை பிரதானத் தொழில்கள். இத்தொகுதிக்கு உள்பட்ட கொல்லிமலையில், பலா, அன்னாசி, மிளகு, காபி, மரவள்ளி, வாழை, நெல் உள்ளிட்டவை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இத்தொகுதிக்கு உள்பட்ட நாமகிரிப்பேட்டை, புதுச்சத்திரம் ஒன்றியப் பகுதிகளில் சிறுதானிய வகைகள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன.    

கடந்த தேர்தல்கள் நிலவரம்:

1957: டி.சிவஞானம் பிள்ளை (காங்கிரஸ்) 23,749 
          சோமசுந்தர கவுண்டர் (சுயேச்சை) 16,959

1962: வி.ஆர்.பெரியண்ணன் (திமுக) 27,728 
          தியாகராஜ செட்டியார்(காங்கிரஸ்) 24,205

1967: ஏ.செல்லக் கவுண்டர் (காங்கிரஸ்) 31,308 
           எஸ்.டி.துரைசாமி (மார்க்சிஸ்ட்) 30,537

1971: சின்ன வேலப்ப கவுண்டர் (திமுக) 34,507 
           எஸ்.வெள்ளைய கவுண்டர் (ஸ்தாபன காங்கிரஸ்) 21,452

1977: வி.சின்னசாமி (அதிமுக) 28,731 
          எஸ்.வாதம கவுண்டர் (காங்கிரஸ்) 13,881

1980: எஸ்.சிவபிரகாசம் (அதிமுக) 37,577 
          எஸ்.வாதம கவுண்டர் (காங்கிரஸ்) 30,543

1984: எஸ்.சிவபிரகாசம் (அதிமுக) 54,129 
          கலாவதி (திமுக) 26,277

1989: கே.சின்னசாமி (அதிமுக} ஜெ அணி) 36,489 
          சி.அழகப்பன் (திமுக) 31,452

1991: கே.சின்னசாமி (அதிமுக) 72,877 
          எஸ்.சிவபிரகாசம் (அபுததமுக) 17,316

1996: சி.சந்திரசேகரன் (திமுக) 58,673 
          கலாவதி (அதிமுக) 38,748

2001: கே.கலாவதி (அதிமுக) 61,312 
          சின்னுமதி சந்திரசேகரன் (திமுக) 43,497

2006: கே.பொன்னுசாமி (திமுக) 64, 506 
          பி.சந்திரன் (அதிமுக) 47,972

2011: ஆர்.சாந்தி (தேமுதிக)  76,637 
          பொன்னுசாமி (திமுக) 68,132

2016:  சி.சந்திரசேகரன் (அதிமுக)  91,339 
           பொன்னுசாமி (திமுக) 79,006
            சத்யா (தேமுதிக) 5, 609
            சின்னுசாமி (கொமதேக) 4,014
            சுசீலா (பாமக) 2,447

அரசியல் கட்சிகளின் செல்வாக்கு:

கொல்லிமலையில் 14 ஊராட்சிகள் உள்ளன. இங்கு அதிமுக, திமுகவுக்கு சரிசமமாக வாக்கு வங்கி உள்ளது. அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாதிக்குப் பாதி ஊராட்சிகளை இரு கட்சிகளின் ஆதரவாளர்கள் பிடித்தனர்.

நாமக்கல், நாமகிரிப்பேட்டை, மோகனூர், எருமப்பட்டி ஆகிய ஒன்றியங்களில் 50-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகள் அதிமுகவுக்கு சாதகமாக உள்ளன. உள்ளாட்சித் தேர்தலில் சேந்தமங்கலம் ஒன்றியக் குழுத் தலைவர் பதவியை திமுக பிடித்துள்ளதால், சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுகவை வெற்றிபெறச் செய்வதற்கான நடவடிக்கைகளில் அக்கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அதிமுக எம்எல்ஏ சி.சந்திரசேகரன் தொகுதியில் அதிக அளவில் திட்டங்களைச் செயல்படுத்தியிருந்தாலும், கட்சிக்குள் இருக்கும் அதிருப்தியால் மீண்டும் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இரண்டு முறை தொடர் தோல்வி கண்ட திமுக, இம்முறை பெண் வேட்பாளரை நிறுத்தினால் வெற்றி பெற  வாய்ப்புள்ளது.

நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்:

கொல்லிமலைக்குச் செல்ல ஏற்கெனவே காரவள்ளி, முள்ளுக்குறிச்சி பகுதியில் சாலை வசதி இருந்தபோதும், வனத்துறை அனுமதியுடன் சேலம் மாவட்டம் தம்மம்பட்டி வழியாக மூன்றாவது மாற்றுச் சாலையும், திருப்புளிநாடு வழியாக நான்காவது மாற்றுச் சாலையும் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.   

கொல்லிமலையில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், புதிய பழச்சந்தை, சேந்தமங்கலத்தில் அரசு கலைக் கல்லூரி கட்டடம், புதிய பேருந்து நிலையம், வட்டாட்சியர் அலுவலகக் கட்டடம், மலைப்பகுதிகளுக்கு பேருந்துப் போக்குவரத்து வசதி, சாலை விரிவாக்கம், அரசின் திட்டங்கள் ஆகியவை உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டுள்ளன. கொல்லிமலை நீர்மின் நிலைய கட்டுமானப் பணியும் நடைபெற்று வருகிறது. 

நிறைவேற்றப்படாத திட்டங்கள்:

கொல்லிமலை ஆகாய கங்கை அருவிக்குச் செல்ல ரோப் கார் வசதி, சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படை வசதிகள், தீயணைப்பு நிலையத்துக்குச் சொந்த கட்டடம் ஆகிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. 

பேளுக்குறிச்சி பகுதியில் உயரமான சாலையால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனைச் சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.

கொல்லிமலையில் அரசு மருத்துவமனை இருந்தபோதும் பிரேதப் பரிசோதனைக்காக இறந்தவர்கள் உடலை நாமக்கல் அல்லது சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரும் நிலை உள்ளது. கொல்லிமலையில் பிரேதப் பரிசோதனைக் கூடம் ஏற்படுத்த வேண்டும்.

கொல்லிமலைக்குச் செல்லும் பிரதான சாலையான காளப்பநாயக்கன்பட்டி-காரவள்ளி சாலையில் அதிக ளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் சுற்றுலா வாகனங்கள் செல்ல முடியாமல் தவிக்கின்றன. இந்தச் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.           

இதர தேவைகள்:

நாமக்கல்- ராசிபுரத்தை இணைக்கும் வகையிலான இருவழிச் சாலை, நான்கு வழிச்சாலையாக மாற்றம் செய்யப்படுகிறது. இதற்கான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்தச் சாலை பயன்பாட்டுக்கு வந்தால் சேந்தமங்கலம் நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும். கொல்லிமலை சுற்றுலாத் தலத்தை ஏற்காடு, உதகைக்கு நிகராக மேம்படுத்தினால் வேலைவாய்ப்பு அதிகம் கிடைக்கும். அரசு கூட்டுறவு ஜவ்வரிசி ஆலை இத்தொகுதியில் உருவாக்கப்பட வேண்டும்.

தொகுதி நிலவரம்:

சேந்தமங்கலம் தொகுதியை பொருத்தமட்டிலும், பழங்குடியினர் தனித் தொகுதியாக உள்ளது. கடந்த 2011 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக வேட்பாளர் சாந்தி வெற்றி பெற்றார். 2016 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சி.சந்திரசேகரன் வெற்றி பெற்றார். 2011, 2016-இல் முன்னாள்  எம்எல்ஏவான பொன்னுசாமி திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். வரும் தேர்தலில் திமுக கூட்டணியில் திமுகவே போட்டியிட வாய்ப்பு அதிகம் உள்ளது.

அதிமுகவைப் பொருத்தவரை கூட்டணி கட்சிகளுக்கு இத்தொகுதியை ஒதுக்கலாமா என்ற யோசனை உள்ளது. மீண்டும் அதிமுக போட்டியிட வேண்டும் என்பது அக்கட்சியினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அதிமுகவில் சிட்டிங் எம்எல்ஏவான சந்திரசேகரனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கக் கூடாது என்று முன்னாள் ஒன்றியத் தலைவர், ஊராட்சித் தலைவர்கள் சிலர் அமைச்சர் தரப்புக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இங்கு மின்துறை அமைச்சர் பி.தங்கமணியின் முடிவே இறுதியானது.

திமுகவைப் பொருத்தவரை இரண்டு முறை தோல்வியைத் தழுவிய பொன்னுசாமிக்கு மாற்றாக பெண் ஒருவரை களமிறக்க அக்கட்சி முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. கொல்லிமலை ஊராட்சி தலைவர் ஒருவரின் பெயர் அடிபடுகிறது.  இத்தொகுதியில் அதிமுகவின் கரம் ஓங்கி இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழக சிறைகளில் 3 ஆண்டுகளில் 102 கைதிகள் உயிரிழப்பு!

காலமானாா் பாஜக முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன்

பிசானத்தூா்- புதுநகா் இணைப்புச் சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

பொக்லைன் மீது அரசுப் பேருந்து மோதியதில் 12 பயணிகள் காயம்

க. பரமத்தியில் குடிநீா் திட்டப்பணிகள் ஆய்வு

SCROLL FOR NEXT