தொகுதிகள்

கிணத்துக்கடவு: தொகுதியைப் பெற முயற்சிக்கும் பாஜக

என்.ஆர்.மகேஷ்குமார்

கோவை மாவட்டத்தில் வேளாண்மையும், தொழிற்சாலைகளும் நிறைந்த தொகுதியாக கிணத்துக்கடவு உள்ளது. அதேபோல் கோவை மாவட்டத்தில் அதிகப்படியான நகரங்களையும், கிராமங்களையும் உள்ளடக்கிய தொகுதியும் இதுவாகும் கடந்த 1967 முதல் தேர்தலை சந்தித்து வருகிறது. முன்னாள் அமைச்சர்கள் மு.கண்ணப்பன், செ.தாமோதரன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ள தொகுதி.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

கோவை மாநகராட்சியின் 94 முதல் 100 ஆவது வார்டு வரையிலான 7 வார்டுகள், கிணத்துக்கடவு, மதுக்கரை, வெள்ளலூர், எட்டிமடை, திருமலையாம்பாளையம், ஒத்தக்கால்மண்டபம், செட்டிபாளையம் ஆகிய 7 பேரூராட்சிகள் இந்தத் தொகுதியில் உள்ளன.

குறிச்சி நகராட்சி, கிணத்துக்கடவு வட்டத்துக்குள்பட்ட சொலவம்பாளையம், வடபுதூர், கல்லாபுரம், சிங்கையன்புதூர், சொக்கனூர், நெ.10.முத்தூர், கோடங்கிபாளையம் ஊராட்சிகள்.

தொண்டாமுத்தூர் வட்டத்துக்குள்பட்ட மாதம்பட்டி, தீத்திபாளையம், பேரூர் செட்டிபாளையம் ஊராட்சிகள்.

மதுக்கரை ஒன்றியத்திற்குள்பட்ட மாவுத்தம்பதி, பிச்சனூர், பாலத்துறை, தம்பாகவுண்டன்பாளையம், கருஞ்சாமிகவுண்டன்பாளையம், சீரப்பாளையம், மலுமிச்சம்பட்டி, மைலேரிபாளையம், நாச்சிபாளையம், அரிசிபாளையம், வழுக்குப்பாறை ஆகிய ஊராட்சிகள்.

வாக்காளர் விவரம்

ஆண்கள் - 1,59,148
பெண்கள் - 1,64,955
மூன்றாம் பாலினத்தவர் - 42
மொத்தம் - 3,24,145.

தொழில், சமூக நிலவரம்

கிணத்துக்கடவு தொகுதியில் வேளாண்மை முக்கியத் தொழிலாக உள்ளது. தக்காளி, தென்னை விவசாயம், காய்கறி ஆயிரகணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் தக்காளி, பச்சை மிளகாய், கத்திரிக்காய், தட்டைப்பயிறு போன்றவற்றை கேரளம், கர்நாடகம், ஆந்திர மாநில வியாபாரிகள், உள்ளூர் வியாபாரிகள் கிணத்துக்கடவு, நாச்சிபாளையம் தினசரி காய்கறி சந்தைகள் மொத்தமாக கொள்முதல் செய்கின்றனர்.

கோவையின் முக்கிய தொழிற்பேட்டை குறிச்சி பகுதியில் அமைந்துள்ளது. இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செயல்படும் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் மூலம் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகள் வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஏராளமானோர் வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர்.

கிணத்துக்கடவு தொகுதியில் கிராமப்புறங்களில் கொங்கு வேளாள கவுண்டர்கள் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். இதைத் தவிர செட்டியார், இஸ்லாமியர்கள், நாடார்கள், பட்டியல் இனத்தவர்கள் குறிப்பிடத்தகுந்த அளவில் வசிக்கின்றனர்.

கடந்த தேர்தல்கள்

கிணத்துக்கடவு தொகுதியில் இதுவரை நடைபெற்றுள்ள 12 தேர்தல்களில் 8 முறை அதிமுகவும், 4 முறை திமுகவும் வெற்றி பெற்றுள்ளன.

1967 - கண்ணப்பன் (திமுக)
1971 - கண்ணப்பன் (திமுக)
1977 - கே.வி.கந்தசாமி (அதிமுக)
1980 - கே.வி.கந்தசாமி (அதிமுக)
1984 -  கே.வி.கந்தசாமி (அதிமுக)
1989  - கந்தசாமி (திமுக)
1991 - என்.எஸ்.பழனிச்சாமி (அதிமுக)
1996  - சண்முகம் (திமுக)
2001 - செ.தாமோதரன் (அதிமுக)
2006 - செ.தாமோதரன் (அதிமுக)
2011 - செ.தாமோதரன் (அதிமுக)
2016 - எட்டிமடை அ.சண்முகம் (அதிமுக)

2016 தேர்தல் நிலவரம்

எட்டிமடை அ.சண்முகம் (அதிமுக) - 89,042
குறிச்சி என்.பிரபாகரன் (திமுக) - 87,710
வித்தியாசம் - 1,332

கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்றுள்ள பணிகள்

பொள்ளாச்சி- கோவை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. கிணத்துக்கடவு, மதுக்கரையில் அரசு மருத்துவமனைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. குறிச்சி- குனியமுத்தூர் குடிநீர் திட்ட விரிவாக்கப் பணிகள் நடைபெற்றுள்ளன. குறிச்சி பகுதியில் புதை சாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. கோவை மாநகர மக்களுக்கான புதிய பேருந்து நிலையம் வெள்ளலூரில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தீர்க்கப்படாத பிரச்னைகள்

பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு வட்டம் பிரிக்கப்பட்ட பிறகு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வட்டாட்சியர் அலுவலகம் திறக்கப்படாமல் உள்ளது. தீயணைப்பு நிலையம் விரிவாக்கப்படவில்லை. அரசுப் போக்குவரத்துக்கழக அலுவலகம் கிணத்துக்கடவில் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு தொடர்ந்து அதே நிலையிலேயே உள்ளது. பொள்ளாச்சி- கோவை நான்கு வழிச்சாலைக்காக அகற்றப்பட்ட நிழற்குடைகள் மீண்டும் அமைக்கப்படவில்லை. வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பிரச்னை தொடர் கதையாகி வருகிறது. இதற்கு நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை.

போட்டியிட வாய்ப்புள்ள கட்சிகள்

அதிமுக, திமுக ஆகிய இரண்டு திராவிடக் கட்சிகளைத் தவிர வேறு எந்த கட்சியும் வெற்றி பெறாத தொகுதிகளில் ஒன்றாக கிணத்துக்கடவு உள்ளது. அத்துடன் அதிமுக அதிக முறை வெற்றி பெற்றிருப்பதால், அக்கட்சிக்கு சாதகமான தொகுதிகளில் ஒன்று என்றழைக்கப்படுகிறது. அதிமுகவினரைப் பொருத்தவரை அந்த கட்சியே மீண்டும் போட்டியிட வேண்டும் என்று கூறுகின்றனர்.

ஆனால் அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜக இந்தத் தொகுதியை கேட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இந்தத் தொகுதியில் பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை அதிமுகவே போட்டியிடுமானால் தற்போதைய எம்எல்ஏவான எட்டிமடை அ. சண்முகத்துக்கே வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.

திமுக கூட்டணியைப் பொருத்தவரை திமுகவே நேரடியாக போட்டியிட உள்ளது. கோவை கிழக்கு மாவட்டச் செயலர் மருதமலை சேனாதிபதி, ஏற்கெனவே கடந்த முறை போட்டியிட்டு 1,332 வாக்குகள் வித்தியாசத்தில் வாய்ப்பைத் தவறவிட்ட குறிச்சி என்.பிரபாகரன், மதுக்கரை ராஜசேகர், முகமது யாசின், சாதிக் அலி போன்றவர்கள் வாய்ப்பு கேட்டு வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT