தொகுதிகள்

கள்ளக்குறிச்சி(தனி): தொகுதியை மீண்டும் அதிமுக தக்கவைக்குமா?

எஸ். முரளி

தொகுதி சிறப்புகள்

விழுப்புரத்தில் இருந்து புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தலைநகர தொகுதி என்ற அந்தஸ்தை கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி பெற்றுள்ளது. இத்தொகுதி 1951 முதல் 1971 வரை இருந்த நிலையில் பின்னர் தொகுதி வரையரைக்குப்பின் காணாமல் போனது. இப்போது 2008-இல் நடந்த தொகுதி மறுசீரமைப்புக்குப்பிறகு மீண்டும் கள்ளக்குறிச்சி தொகுதி உருவானது.

கள்ளக்குறிச்சி தொகுதிக்குள் கோமுகி அணை உள்ளது. இப் பகுதியில் விவசாயிகள் நெல், மணிலா, கரும்பு, மரவள்ளிக்கிழங்கு, பருத்தி, மக்காச்சோளம், அதிக அளவில் பயிர் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.   மழை பெய்யவில்லை என்றால் விவசாயிகள் பெரும் பாதிப்படைந்து விடுவார்கள். இப் பகுதியில் அதிக அளவில் அரிசி ஆலைகள் இம் மாவட்டத்தை பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளன. இப் பகுதியில் தொழிற்சாலைகள் ஏதும் இல்லை.

இம் மாவட்டத்தை சிறப்பு சேர்க்கும் வகையில் சோழ பாண்டிய மற்றும் விஜயநகர பேரரசர்கள் ஆட்சி செய்துள்ளனர். அந்த சமயத்தில் கட்டப்பட்ட சிறப்பு வாய்ந்த கோயில்களை இந்த பகுதியில் காணலாம். சிறுவங்கூர் வரதராஜ பெருமாள் கோயில் சுவற்றில் கல்லக்குறிச்சி என கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.

தொகுதியின் பகுதிகள்: இத்தொகுதியில் கள்ளக்குறிச்சி நகராட்சி, தியாகதுருகம்  பேரூராட்சி என நகர் புற பகுதிகள் உள்ளன. கள்ளக்குறிச்சி வட்டம்(பகுதி) அதையூர் ஊராட்சி, குன்னியூர், மேல்வழி, தென்னேரிக்குப்பம், திம்மலை, வடதொரசலூர், சிறுவங்கூர், க.மாமனந்தல், சடையம்பட்டு, மட்டிகைக்குறிச்சி, நல்லாத்தூர், குதிரைச்சந்தல், காரணூர், பெருவங்கூர், நீலமங்கலம், மாடூர், வீரசோழபுரம், பிரிதிவிமங்கலம், விளக்கூர், சின்னமாம்பட்டு, வாழவந்தான்குப்பம்,

சிறுநாகலூர், பொறையூர், சிறுவால், தியாகை, சித்தலூர், விருகாவூர் ஊராட்சி, முடியனூர், மடம், குரூர், நிறைமதி, தென்கீரனூர், தச்சூர், உலகங்காத்தான், நமசிவாயபுரம், பங்காரம், இந்திலி, பொற்படாக்குறிச்சி, விளம்பார், மலைகோட்டாலம், கனங்கூர், பொரசக்குறிச்சி, நாகலூர், வடபூண்டி, வேங்கைவாடி, குடியாநல்லூர், சோமநாதபுரம், நின்னையூர், கோட்டையூர், கள்ளக்குறிச்சி வட்டம், சித்தாத்தூர், குருபீடபுரம், குண்டலூர், கச்சகுடி, எறஞ்சி ஊராட்சி, கூத்தகுடி ஊராட்சி, உடையநாச்சி, கொங்கராயபாளையம்,

கண்டாச்சிமங்கலம், வரஞ்சரம், வேலகுறிச்சி, சித்தேரி, சாத்தனூர்(பி),  வானவரெட்டி, தென்தொரசலூர், கனியாமூர்,  மூங்கில்பாடி,  எலவடி,  பூசப்பாடி,  தென்பொன்பரப்பி,  மேல்நாரியப்பனூர்,  ராயப்பனூர்,  எ.வாசுதேவனூர், அம்மையகரம், பூண்டி, தோட்டப்பாடி, ராயர் பாளையம், பெத்தானூர், சிறுவத்தூர், வரதப்பனூர், புக்கிரவாரி, சிறுமங்கலம், கீழ்நாரியப்பனூர், சு.ஒகையூர் ஊராட்சி, ஈயனூர், அசகளத்தூர் ஊராட்சி, மகரூர்,பெருமங்கலம், நல்லசேவிபுரம், ஈரியூர், கருங்குழி, அம்மகளத்தூர் ஊராட்சி, உலகியநல்லூர், நாட்டார்மங்கலம், தென்சிறுவளூர், இசாந்தை, நைனார் பாளையம், பெத்தாசமுத்திரம், தத்தாரிபுரம், காளசமுத்திரம், தாகம்தீர்த்தபுரம், குரால்,வி.அலம்பலம், வி.கிருஷ்ணாபுரம், கீழ்குப்பம், அனுமனந்தல், செம்பாக்குறிச்சி, கருந்தாலங்குறிச்சி, வீரபயங்கரம், பாக்கம்பாடி, கூகையூர் மற்றும் வி.மாமந்தூர்  உள்ளிட்ட கிராமப் பகுதிகள் இத்தொகுதிக்குள் உள்ளன.

மக்கள் பிரச்னைகள்

கள்ளக்குறிச்சி நகரம் பெரும் கூட்ட நெரிசலில் சிக்கி தவித்து வருகிறது.  மக்கள் அவசரமாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமானால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.   அலுவலகம், பள்ளி நேரங்களில் நகரை கடப்பது மிக கஷ்டமாக இருப்பதாக மக்கள்  எண்ணுகின்றனர்.   எனவே,   கூட்ட நெரிசல் குறைக்க   வட்டச் சாலை அமைக்க  வேண்டும்.  நகரில் பாதாள சாக்கடை திட்டமும்  இதுவரை நிறைவேற்றப்படாதது மக்களிடம் அதிருப்தியை  ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி - சின்னசேலம் ரயில்வே பணி தொடங்கப்பட்டு ஆமை வேகத்தில் செயல்பட்டு வருகின்றன. இம் மாவட்டத்தை தமிழகத்தில் 34-ஆவது மாவட்டமாக அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சட்டப்பேரவையில்  110 விதியின் கீழ் அறிவித்து அடிக்கல்லை நாட்டி  தொடங்கிவைத்தார். மாவட்டம் தொடங்கி வைத்த நாளிலேயே மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் என அறிவித்து பணிகளும் நடைபெற்று வருகின்றன.

தொகுதி விவரம்

கள்ளக்குறிச்சி பேரவைத் தொகுதி கடந்த 1952-ம் ஆண்டு இரட்டைமுறை வாக்கெடுப்பில் பொது தொகுதியாக அறிவிக்கப்பட்டது. 1967-ல் கள்ளக்குறிச்சி பொது தொகுதியாக மாறியது. அதன் பின் 1977-இல் கள்ளக்குறிச்சி தொகுதி நீக்கப்பட்டு சின்னசேலம் தொகுதியாக மாற்றப்பட்டது. மீண்டும் 2008-இல் நடைபெற்ற சட்டப் பேரவை தொகுதி மறு சீரமைப்பில் கள்ளக்குறிச்சி தனி தொகுதியாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு 2011 முதல் கள்ளக்குறிச்சி தொகுதியாக தொடர்கிறது.

வேட்பாளர் விவரம்

ஆண்கள்: 1,41,681
பெண்கள்: 1,43,953 
மூன்றாம் பாலினத்தவர்: 56
மொத்தம் : 2,85,690

மொத்தம் 416 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த தேர்தல்கள்

இத்தொகுதியில் 1962, 1967, 1971 என மூன்று முறை திமுகவும், 2011, 2016 என இருமுறை அதிமுகவும் 1951, 1957 என இருமுறை சுயேச்சைகளும் வெற்றி பெற்றுள்ளனர்.

கடந்த   2016 பேரவைத்   தேர்தலில்  அதிமுக   வேட்பாளர் அ.பிரபு 90,108, திமுக வேட்பாளர் பி.காமராஜ் 86,004, மக்கள் நலக் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் செந்தமிழ்செல்வி 9,736 வாக்குகள் பெற்றிருந்தனர். அதிமுக வேட்பாளர் 4,104 வாக்குகள் பெற்றார்.

போட்டியிட வாய்ப்புள்ள கட்சிகள்

இப்போது தொகுதியை கேட்டு எம்.எல்.ஏ. அ.பிரபு,  முன்னாள் எம்.எல்.ஏ. க.அழகுவேலு பாபு, முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் ப.தங்கபாண்டியன், முன்னாள் மாவட்டக்குழு  உறுப்பினர் மணி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளர் பா.செந்தில் உள்ளிட்டோர்   அதிமுகவில்    வாய்ப்பு கேட்டு விருப்ப மனு அளித்துள்ளனர்.     

அதே போல திமுக சார்பில் எறஞ்சி கிராமத்தைச், சேர்ந்த பாரத ஸ்டேட் வங்கியின் மேலாளர் பழனிசாமி,  கடந்த முறை தோல்வியுற்ற கமாராஜ், சின்னசேலத்தைச் சேர்ந்த பெரியசாமி, மடம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் உள்ளிட்ட பலர் களத்தில் உள்ளனர்.

எம்.எல்.ஏ. அ.பிரபுவை பொருத்தவரை கள்ளக்குறிச்சி மாவட்ட உதயம், மருத்துவக்கல்லூரி உருவாக்கியது, கள்ளக்குறிச்சி நகரில் பேருந்து நிலையம், கழிவுநீர் கால்வாய்,  தியாகதுருகம் தீயணைப்பு நிலையம், கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம், மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை நிறைவேற்றி உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. மேலும் சட்டப் பேரவை கூட்டத் தொடரில் 31 ஆயிரம் கேள்விகளை எழுப்பியவர் என பேரவைத் தலைவர் தனபாலால் பாராட்டு தெரிவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடர்ந்தால் இத்தொகுதியை தேமுதிகவும் கேட்கக்கூடும்.   ஆனால்,    கடந்த முறை வெற்றி பெற்ற கள்ளக்குறிச்சி தொகுதியை அதிமுக விட்டுக்கொடுக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான். அதிமுக கூட்டணியில் பாமக  இருப்பதும்,  தேமுதிக நீடித்தாலும்  அந்த அணிக்கு கூடுதல் பலம்.

கணிசமான வாக்கு வங்கி வைத்திருக்கும் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் ஒரே அணியில் இருப்பது திமுகவுக்குவும் பலம்.  இத்தொகுதியில் அதிமுக - திமுக இடையே கடும் போட்டி உருவாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேரவைத் தலைவா் உத்தரவை எதிா்த்து வழக்கு: மனுதாரா் விளக்கமளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

மகாராஷ்டிர வங்கி நிகர லாபம் 45% உயா்வு

ஆசிய யு20 தடகளம்: இந்தியாவுக்கு 7 பதக்கம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT