தொகுதிகள்

விக்கிரவாண்டி: தொகுதியை மீண்டும் தன்வசம் தக்க வைக்குமா அதிமுக?

3rd Mar 2021 03:18 PM | கி. சுரேஷ்குமார்

ADVERTISEMENT

தொகுதியின் சிறப்புகள்

விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒன்று விக்கிரவாண்டி. கிராமப் பகுதிகளை உள்ளடக்கிய பகுதியாகும். விவசாயமே பிரதான தொழிலாகும். அரிசி ஆலைகள் அதிக அளவில் கொண்ட பகுதியாகும். மேலும், நெல், கரும்பு போன்ற பயிர்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால், தனியார் கரும்பு சர்க்கரை ஆலையும் அங்கு அமைந்துள்ளது.

தொகுதி அமைப்பு

விக்கிரவாண்டி தொகுதியில் விக்கிரவாண்டி பேரூராட்சி, நல்லாபாளையம், கடயம், கருவாட்சி, சின்னப்பநாயக்கன்பாளையம், பனமலை, சங்கீதமங்கலம்,நங்காத்தூர் நகர், செஞ்சிபுதூர், குன்னத்தூர், திருநந்திபுரம், பிடாரிப்பட்டு, எண்ணாயிரம், பிரம்மதேசம், எஸ்.கொளப்பாக்கம், முட்டத்தூர், சலவனூர், வெள்ளையாம்பட்டு, குணிர்கணை, உடையாநத்தம், வெங்கமூர், அனுமந்தபுரம், திருக்குணம், அன்னியூர், பெருங்கலாம்பூண்டி, கன்னந்தல், கலியாணம்பூண்டி, அரசலாபுரம், மண்டகப்பட்டு, ஈச்சங்குப்பம், எசாலம், தென்பேர், நந்திவாடி, நேஊர், மேல் காரணை, போரூர், அத்தியூர், திருக்கை, வெள்ளேரிப்பட்டு, சித்தேரி, ஏழுசெம்பொன், கொரலூர், வெங்கயாகுப்பம், நரசிங்கனுர், சின்னடச்சூர், கொங்கராம்பூண்டி, சாலை, குத்தாம்பூண்டி, மேல்கொண்டை, ஆசூர், வேம்பி, கஞ்சனூர், வேலியந்தல், பூண்டி, ஒலகலாம்பூண்டி, பூங்குணம், குண்டலப்புலியூர், குன்னத்தூர், தாங்கல், சிறுவாலை, செம்மேடு, கக்கனூர், அரியலூர், திருக்கை, வீரமூர், அரும்புலி, ஆதனூர், கஸ்பாகாரணை, தும்பூர், கொட்டியாம்பூண்டி, சாத்தனூர், ஆவுடையார்பட்டு, ரெட்டிக்குப்பம், பிள்ளையார்குப்பம், கயத்தூர், வெட்டுக்காடு, தொரவி, பணப்பாக்கம் பாப்பனப்பட்டு, ஒரத்தூர், சூரப்பட்டு, வாழப்பட்டு, கெடார், பள்ளியந்தூர், கோளிப்பட்டு, மல்லிகாபட்டு, காங்கியனூர், அகரம், சித்தாமூர், வெங்கந்தூர், அசரக்குப்பம், சொழகனூர், தென்னமாதேவி, அய்யூர் அகரம், முண்டியம்பாக்கம், பனையபுரம், ராதாபுரம், மதுரப்பாக்கம், செய்யாத்துவிண்ணான், சிறுவள்ளிக்குப்பம், கப்பியாம்புலியூர், வடகுச்சிப்பாளையம், திருவாமாத்தூர், சோழாம்பூண்டி, அரியூர், குப்பம், மாம்பழப்பட்டு, கல்பட்டு, சிறுவாக்கூர், கருங்காலிப்பட்டு, காணை, வைலாமூர், எடப்பாளையம், ஆலாத்தூர், வீராட்டிக்குப்பம், வாக்கூர், பகண்டை, தென்னவராயம்பட்டு மற்றும் மூங்கில்பட்டு ஆகிய கிராமங்கள் உள்ளன. முழுக்க முழுக்க கிராமங்களை உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கிய தொகுதியாகும்.

சமூக நிலவரம்:  மாவட்டத்திலேயே அதிக அளவில் வன்னியர் சமூகத்தினரைக் கொண்ட தொகுதியாகும். 35 சதவீத வன்னியர், 30 சதவீத ஆதிதிராவிடர், 5 சதவீதம் உடையார் மற்றும் பிற சமூகத்தினர் 30 சதவீதம் உள்ளனர்.

வாக்காளர் விவரம்: 1 லட்சத்து15 ஆயிரத்து 608 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 18 ஆயிரத்து 268 பெண் வாக்காளர்களும், 25 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 33 ஆயிரத்து 901 வாக்காளர்கள் உள்ளனர்.

ADVERTISEMENT

கடந்த தேர்தல்கள்

மறுசீரமைப்புக்குப் பிறகு கடந்த 2011 ஆம் ஆண்டில் புதிய சட்டப்பேரவைத் தொகுதியாக விக்கிரவாண்டி உருவாக்கப்பட்டது. 2011 மற்றும் 2016 ஆகிய இரண்டு சட்டப்பேரவை பொதுத் தேர்தல்களையும், 2019-இல் இடைத் தேர்தலையும் சந்தித்துள்ளது. 

2011 ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட மாக்ர்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.ராமமூர்த்தி, திமுக வேட்பாளர் கு.ராதாமணியைவிட 14,897 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

இதன்பிறகு, 2016 ஆம் ஆண்டில் திமுக- அதிமுக நேரடியாக மோதியது. இதே தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கு.ராதாமணி அதிமுக வேட்பாளர் ஆர்.வேலுவைவிட 6,912 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதன்பிறகு உடல் நலக்குறைவால் சட்டப்பேரவை உறுப்பினர் ராதாமணி கடந்த 2019-ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இதையடுத்து, அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், திமுக வசம் இருந்த தொகுதியை தங்கள் கைப்பற்றியாக வேண்டும் என்ற முனைப்புடன் அதிமுக களம் இறங்கியது. இதனால் திமுக -  அதிமுக இடையே மீண்டும் நேரடி போட்டி உருவானது. இதில், அதிமுக வேட்பாளர் ஆர். முத்தமிழச்செல்வன் திமுக வேட்பாளர் நா.புகழேந்தியைவிட 44,924 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

நிறைவேறியதும், நிறைவேறாததும்

தொகுதியில் பெரிய அளவில் தொழில் வாய்ப்புகள் கிடையாது. விவசாய கூலி வேலைக்கே செல்கின்றனர். இத்தொகுதி தொடர்ந்து பின்தங்கிய பகுதியாகவே இருந்து வருகிறது. புதுவை மாநில எல்லையையொட்டி அமைந்துள்ளதால் புதுவை மாநிலத்துக்கு வேலைக்குச் செல்கின்றனர்.

சர்க்கரை ஆலைக்கு வெட்டி அனுப்பப்படும் கரும்புக்கு உரிய நேரத்தில் பணத்தைக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருவது விவசாயிகளுக்கு பெரும் சுமையாக இருந்து வருகிறது. கரும்பு ஆலையுடன் பேச்சுவார்த்தை நடத்தி கரும்புக்கான தொகையை உரிய நேரத்தில் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை.

விக்கிரவாண்டி பகுதியில் இடைத்தேர்தலில் அதிமுக தரப்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் பெருமளவு செயல்படுத்தப்படுள்ளன. குறிப்பாக இந்த பகுதியில் குடிநீர் பிரச்னை இருந்து வந்தது. தற்போது அடிக்கல் நாட்டப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மற்றும் கூட்டு குடிநீர்த் திட்டத்தில் விக்கிரவாண்டி பேரூராட்சி, காணை, விக்கிரவாண்டி ஒன்றியப் பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளது. கிராமப்புறச் சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. தீயணைப்பு நிலையம் கொண்டு வரப்பட்டுள்ளது. விக்கிரவாண்டியில் நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி மக்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு புறவழிச்சாலையைக் கடந்து வருவதால், வடக்கு புறவழிச்சாலை பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வெகுநாள்களாக இருந்து வருகிறது. ஆனால், இதுவரையில் அது நிறைவேற்றப்படவில்லை. இந்த பகுதியில் அரசு கலைக் கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையம், அரசு பாலிடெக்னிக் கல்லூரி போன்ற அரசு கல்வி நிலையங்கள் எதுவும் இல்லை. தொழிற்சாலைகளை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

போட்டியிட வாய்ப்பு

திமுகவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட இந்த தொகுதியை மீண்டும் தங்கள் கைக்குள்ளேயே வைத்துக்கொள்ள வேண்டும் என்று அதிமுக நினைக்கிறது. அதே நேரத்தில் இந்த தொகுதியில் தங்களின் வெற்றி தொடர வேண்டும் என்றும் திமுக நினைக்கிறது. இருப்பினும், வன்னியர்கள் வாக்கு வங்கி அதிகம் உள்ள தொகுதி என்பதால், இந்த தொகுதியை தங்கள் கேட்டுப்பெற வேண்டும் என்று பாமக திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, 2016 ஆம் ஆண்டு தனித்து போட்டியிட்ட பாமக 40 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது.

அதன்பிறகு, இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு தெரிவித்ததால், அதிமுக 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று, வெற்றி பெற முடிந்தது. இதனால், பாமக தங்களுக்கு இத்தொகுதியை ஒதுக்க கேட்கின்றனர்.

பாமக தரப்பில் மாநில துணைப் பொதுச் செயலாளர் சிவக்குமார், பாமக விழுப்புரம் மாவட்டச் செயலாளர் புகழேந்தி ஆகியோர் இங்கு போட்டியிட திட்டமிட்டுள்ளனர். ஆனால், அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்படுமா என்பது கேள்விக்குறியே?

ஏனெனில், தங்கள் வெற்றி பெற்ற தொகுதியை தொடர்ந்து தக்க வைக்க அதிமுக விரும்புகிறது. அதே நேரத்தில் விழுப்புரத்தில் போட்டியிடத் திட்டமிட்டுள்ள அமைச்சர் சி.வி.சண்முகம், கடைசி நேரத்தில் தொகுதி மாற வேண்டிய நிலை ஏற்பட்டால் விக்கிரவாண்டி தொகுதிக்கு மாறவும் வாய்ப்புள்ளது. இதனால், அங்கும் அமைச்சரின் தரப்பில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. விழுப்புரத்துக்கு அடுத்ததாக, விக்கிரவாண்டி தொகுதியிலும் வேலையைத் தொடங்கிவிட்டார்கள்.

திமுக தரப்பில் மாவட்டச் செயலாளராக இருந்து வரும் நா.புகழேந்தி இந்த தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர் என்பதால், மீண்டும் இங்கு போட்டியிட வாய்ப்புள்ளது. அதேபோன்று, திமுக விவசாய அணி மாநிலத் துணைச் செயலாளர் அன்னியூர் சிவாவுக்கு கட்சி மேலிடத்தில் அதிக தொடர்பு உள்ளதால் இத்தொகுதியில் போட்டியிட அவரும் காய்களை நகர்த்தி வருகிறார்.

Tags : election 2021
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT