தொகுதிகள்

பூம்புகார்: வெற்றி - தோல்வியை நிர்ணயிக்கும் வன்னியர் சமூகத்தினர்

வி.ஜவகர்


தொகுதியின் சிறப்புகள்

கவிச்சக்ரவர்த்தி கம்பர் அவதரித்த தேரழுந்தூரை உள்ளடக்கிய தொகுதி, சிலப்பதிகார கதாபாத்திரங்களான கோவலன் - கண்ணகி, மாதவி ஆகியோர் வாழ்ந்த பகுதி, கர்நாடகத்தையும், தமிழகத்தையும் வாழ்விக்கும் காவிரி கடல் புகும் பகுதி, முற்காலச் சோழர்களின் தலைநகராக விளங்கிய பகுதி, பண்டையத் தமிழர் நாகரிகத்தின் தொல்லியல் எச்சங்களின் தொகுப்பாக விளங்கும் பகுதி, தில்லையாடி வள்ளியம்மையின் பூர்வீகமான தில்லையாடியை உள்ளடக்கிய பகுதி, நவகிரக கேது பகவானுக்குரிய பரிகாரத் தலமான கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி கோயில், திருக்கடையூர் அருள்மிகு அபிராமி சமேத அருள்மிகு அமிர்தகடேசுவரர் கோயில் என பல்வேறு ஆன்மிகத் தலங்களையும், தமிழை அச்சேற்றிய சீகன் பால்குவால் நிர்மானிக்கப்பட்ட தரங்கம்பாடி புதிய எருசலேம் தேவாலயம் அமைந்துள்ள பகுதி,  தமிழகத்தின் பன்னாட்டு வாணிபச் சான்றாக உள்ள தரங்கம்பாடி டேனீஷ் கோட்டை அமைந்துள்ள பகுதி என எண்ணற்ற சிறப்புகளைக் கொண்டது மயிலாடுதுறை மாவட்டத்துக்கு உள்பட்ட பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதி.

நில அமைப்பு

தொகுதிகள் மறுவரையறையின்போது குத்தாலம் சட்டப்பேரவைத் தொகுதி தகுதி நீக்கம் செய்யப்பட்டு, அத்தொகுதியின் பெரும்பாலான பகுதிகள் பூம்புகார் தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. தற்போது, செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 57 ஊராட்சிகள், குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 40 ஊராட்சிகள், சீர்காழி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 3 ஊராட்சிகள் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சிப் பகுதிகளை உள்ளடக்கியதாக உள்ளது பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதி. மயிலாடுதுறை மாவட்டத்தில் நகராட்சிப் பகுதிகள் கொண்டிராத ஒரே தொகுதி இது.

இத்தொகுதியின் கிழக்குத் திசை வங்கக் கடலால் வரையறுக்கப்பட்டுள்ளது. தெற்கே காரைக்கால் மாவட்டமும், நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதியும் வரையறுத்துள்ளன. மேற்கே திருவிடைமருதூர் சட்டப்பேரவைத் தொகுதியாலும், வடக்கே மயிலாடுதுறை மற்றும் சீர்காழி சட்டப்பேரவைத் தொகுதிகளாலும் இத்தொகுதியின் எல்லை  வரையறுக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் எண்ணிக்கை: ஆண்கள் - 1,35,862. பெண்கள்- 1,39,713. இதரர்- 7. மொத்தம் - 2,75,582.

பூம்புகார் சிலப்பதிகார கலைக்கூடம்.

சாதி, தொழில் அமைப்பு

பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதியில் விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில் பிரதான தொழில்களாக உள்ளன. இங்கு சுமார் 28 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி நடைபெறுகிறது. இதைத்தவிர, உளுந்து, பயிர், பருத்தி, நிலக்கடலை விவசாயமும் இங்கு முக்கியத்துவம் பெற்றுள்ளன.

பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் பூம்புகார், வானகிரி, புதுப்பட்டினம், தரங்கம்பாடி, சின்னங்குடி, சந்திரபாடி உள்ளிட்ட 13 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு 1,809 பைபர் படகுகள் மற்றும் 188 விசைப் படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மீன்பிடித் தொழில் சார்ந்த துணைத் தொழில்கள் மூலம் இங்கு பல ஆயிரம் பேர் வேலைவாய்ப்புப் பெறுகின்றனர்.

இத்தொகுதியில் வன்னியர்கள், இஸ்லாமியர்கள், மீனவர்கள், தலித்துகள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வசிக்கின்றனர். மற்ற சமூகத்தினர் பரவலாக உள்ளனர்.

கடந்த தேர்தல்களில் வென்றவர்கள், 2 ஆம் இடம் பெற்றவர்கள்

1977- எஸ்.கணேசன் (திமுக) : பாரதிமோகன் (மார்க்சிஸ்ட்)
1980- என்.விஜயபாலன் (அதிமுக) : கணேசன் (திமுக)
1984- என்.விஜயபாலன் (அதிமுக) : ஜமால் மொய்தீன் (திமுக)
1989- எம்.முகம்மது சித்திக் (திமுக) : ராஜமன்னார் (அதிமுக)
1991- எம்.பூராசாமி (அதிமுக) : முகமது சித்திக் (திமுக)
1996- ஜி.மோகனதாசன் (திமுக) : விஜயபாலன் (அதிமுக)
2001- என்.ரெங்கநாதன் (அதிமுக) : எம். முகமது சித்திக் (திமுக)
2006- கே.பெரியசாமி (பா.ம.க) : எம். முகமது சித்திக் (திமுக)
2011- எஸ்.பவுன்ராஜ் (அதிமுக) : கே. அகோரம் (பாமக)
2016- எஸ்.பவுன்ராஜ் (அதிமுக) : ஏ.எம். ஷாஜஹான் (இ.யூ.மு.லீ.)

இத்தொகுதியில் 6 முறை வென்று அதிக முறை வென்ற கட்சியாக உள்ளது அதிமுக. இதற்கடுத்த நிலையில், திமுக 3 முறையும், பாமக 1 முறையும் வென்றுள்ளன.  

தொகுதியின் பிரச்னைகள்

இத்தொகுதியில் உள்ள தரங்கம்பாடி, சந்திரப்பாடி, சின்னமேடு உள்ளிட்ட மீனவக்  கிராமங்களில் கடலரிப்பு காரணமாக கடல்நீர் உள்வாங்குவது மீனவர்களுக்கு முக்கிய பிரச்னையாக உள்ளது. அதேபோல சுருக்குமடி வலை பிரச்னை இத்தொகுதியில் தீர்க்கப்படாத பெரும் பிரச்னையாக உள்ளது. விளைநிலங்களில் பதிக்கப்படும் எண்ணெய்க் குழாய்கள், மயிலாடுதுறை புதைசாக்கடை கழிவுகள் சத்தியவான் வாய்க்காலில் விடப்படுவது, விழுப்புரம் - நாகை நான்கு வழிச் சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு அரசு அறிவித்தத் தொகையில் 10 இல் ஒரு பங்கு தொகையை மட்டும் வழங்கியதால் ஏற்பட்டுள்ள அதிருப்தி போன்ற பிரச்னைகள் இங்கு உள்ளன.

மக்களின் கோரிக்கைகள்

மயிலாடுதுறை - தரங்கம்பாடி இடையே 1926 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டு செயல்பட்டு வந்த ரயில் போக்குவரத்து சேவையை 1986 ஆம் ஆண்டு மத்திய அரசு முன்னறிவிப்பின்றி நிறுத்தியது. பொதுமக்களின் கோரிக்கையைடுத்து மத்திய அரசு 2016-17 ரயில்வே பட்ஜெட்டில் மயிலாடுதுறை - தரங்கம்பாடி இடையே ரயில் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கு ரூ. 117 கோடியில் திட்ட அறிவிப்பை வெளியிட்டது. ஆனால், அதற்கான நிதி ஒதுக்காததால் இதுவரை அந்தத் திட்டம் முடங்கியே உள்ளது. இத்திட்டத்தை மீண்டும் துவங்க வேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது. 

போட்டியிட வாய்ப்புள்ள கட்சிகள்

கடந்த இரு சட்டப்பேரவைத் தேர்தல்களில் தொடர்ந்து இத்தொகுதியில் வென்று வரும் அதிமுக, இத்தொகுதியில் மீண்டும் நேரடியாக களம் காணவே அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இத்தொகுதியில் இருமுறை வென்ற சட்டப்பேரவை உறுப்பினரான எஸ். பவுன்ராஜூக்கு, அதிமுகவின் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பதவி அண்மையில் வழங்கப்பட்டதன் மூலம், இத்தொகுதி அதிமுக தலைமையின் கவனத்தை ஈர்த்துள்ளதாகக் கருதப்படுகிறது.

அதேநேரத்தில், வன்னியர் வாக்கு நிறைந்த தொகுதி என்ற அடிப்படையிலும், பாமக ஏற்கெனவே ஒருமுறை வென்ற தொகுதி என்ற அடிப்படையிலும் இத்தொகுதியை அதிமுக அணியில் பாமக கேட்டுப்பெறும் என்ற நம்பிக்கை பாமக நிர்வாகிகளிடம் உள்ளது. அதிமுக கூட்டணியில் இத்தொகுதியின் மீது பாஜகவுக்கு ஒரு கவனம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

திமுகவைப் பொருத்தவரை கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் இத்தொகுதியில் நேரடியாக களம் காண்பதைத் தவிர்த்து வருகிறது. இதனால், இங்கு நேரடியாக களம் காணும் வாய்ப்பைப் பெற வேண்டும் என்பது திமுகவினரின் விருப்பமாக உள்ளது. இங்கு, இஸ்லாமியர்களின் வாக்குகள் கணிசமாக இருப்பதால், திமுக அணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும், மனிதநேய மக்கள் கட்சியும் இத்தொகுதியைக் கேட்டுப் பெறுவதில் முனைப்புடன் உள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT