தொகுதிகள்

மண்ணச்சநல்லூர்: கூட்டணி கட்சிகள் போட்டியிட வாய்ப்பில்லை

ஜி.செல்லமுத்து

தொகுதி அறிமுகம்:

திருச்சி மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் வடக்கு கரையையொட்டி அமைந்துள்ளது மண்ணச்சநல்லூர் தொகுதி. இந்த தொகுதியில்தான் தமிழகத்தின் புகழ்பெற்ற அம்மன் திருத்தலங்களில் முக்கியமான இடத்தை வகிக்கும் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. 2008 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்பில் முசிறி தொகுதியில் இருந்த சில பகுதிகளைப் பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதி இது.

இந்த தொகுதியில் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் அனைத்து கிராம ஊராட்சிகள், முசிறி ஊராட்சி ஒன்றியத்தின் பெரும்பாலான பகுதிகள் என 33 ஊராட்சிகளும்,  மண்ணச்சநல்லூர் மற்றும் எஸ்.கண்ணனூர் என்ற 2 பேரூராட்சிகள் இந்த தொகுதியில் இடம்பெற்றுள்ளன.

கடந்த தேர்தல்கள்: 

கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தத் தொகுதியில் நடைபெற்ற முதல் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் டி.பி. பூனாட்சியும், திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் என். செல்வராஜூம் களம் கண்டனர். இதில் அதிமுக வேட்பாளர் டி.பி. பூனாட்சி வெற்றி பெற்று கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சராக இருந்தார். 2016-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில்  எம்.பரமேஸ்வரியும், திமுக சார்பில் எஸ்.கணேசனும் களம் கண்டனர். இதில், பரமேஸ்வரி வெற்றி பெற்று 2 ஆவது முறையாக இத்தொகுதியை அதிமுக கைப்பற்றி தக்க வைத்துக் கொண்டது.

தொகுதியின் தேவையும், நிறைவேறியதும்:

அதிமுகவின் தொகுதியாக இருந்தாலும் போதிய வளர்ச்சிப் பணிகளை முறையாக நிறைவேற்றப்படவில்லை என பரவலாக குற்றச்சாட்டு உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் விபத்து மற்றும் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த மண்ணச்சநல்லூர்-துறையூர் இடையில் புறவழிச்சாலை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது மட்டுமே ஆறுதலை அளிக்கிறது.

நகர்புறப் பகுதிகளில் புதை சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பிடும்படியாக வேறு ஏதும் நிறைவேற்றப்படவில்லை என்கின்றனர் தொகுதி மக்கள்.

திருப்பைஞ்சீலி பகுதியில் செயற்கை வைரம் பட்டைத் தீட்டும் தொழில் குடிசைத் தொழிலாக ஒரு காலத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்த தொழில் நலிவடைந்து வருகிறது. இதை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவில்லை. மேலும் இப்பகுதிகளின் பிரதானத் தொழிலாக இருக்கும் 50க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகளுக்கு சீரான மின்சாரம் வழங்காததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே இப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. 

ஸ்ரீரங்கம்- நொச்சியம் இடையே கொள்ளிடம் ஆற்றில் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என்பதே இத்தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

சமயபுரம் கோயில் கோபுரம்

யாருக்கு போட்டியிட வாய்ப்பு?

மண்ணச்சநல்லூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு கூட்டணி கட்சிகளுக்கு அளிக்கப்படவில்லை என்பது மட்டுமே இப்போதைக்கு உறுதியாகி உள்ளது. அதிமுக, திமுக என இரு துருவங்களும் களம் காணும் இத்தொகுதியில் போட்டியிட கீழ்நிலை தொண்டர் முதல் மாவட்டப் பொறுப்பு வரை உள்ள பலரும் ஆர்வமுடன் உள்ளனர். கட்சித் தலைமை யாரை சுட்டிக்காட்டுகிறதோ அவருக்கே வாய்ப்பு என்பது அதிமுக, திமுக என இரு கட்சியிலும் எழுதப்பட்டுள்ள சட்டம். வேட்பாளர்கள் அறிவிப்புக்கு பிறகே களம் காணும் நபர் குறித்து தெரிய வரும். கடந்த இரு தேர்தலிலும், தோல்வியுற்ற திமுக இந்த முறை வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பிலும், மூன்றாவது முறையாக தொகுதியை தக்க வைக்க அதிமுகவும் தங்களது பலத்தைக் காட்டி வருகின்றன.

தற்போதைய வாக்காளர்கள்: ஆண்- 1,17,640,  பெண்- 1,25,601 மூன்றாம் பாலினம்- 31, மொத்தம் 2,43, 272.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT