தொகுதிகள்

கடையநல்லூர்: மும்முனைப் போட்டியில் வெற்றி யாருக்கு?

வி.குமாரமுருகன்

தொகுதியின் சிறப்புகள்

நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் அருள்மிகு திருமலைக்குமார சுவாமி திருக்கோயிலை தனது எல்லைக்குள் கொண்டுள்ள கடையநல்லூர் தொகுதியில் விவசாயமே பிரதானத் தொழிலாக உள்ளது. 

கருப்பாநதி அணை மற்றும் அடவிநயினார் அணை மூலம் விவசாயம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக இத்தொகுதியில் தென்னை மரங்கள் அதிமாக உள்ளதால், தேங்காய் கூந்தலில் இருந்து நார் தயாரிக்கும் தொழிற்கூடங்கள் மட்டும் இத்தொகுதியில் உள்ளன. 

தொகுதியின் எல்லை

தொகுதியில் கடையநல்லூர், செங்கோட்டை ஆகிய 2 வட்டங்கள் உள்ளன. கடையநல்லூர், செங்கோட்டை என 2 நகராட்சிகள் உள்ளன. அச்சன்புதூர், வடகரை, புதூர், சாம்பவர்வடகரை, ஆய்க்குடி, பண்பொழி ஆகிய பேரூராட்சிகளும், கடையநல்லூர், செங்கோட்டை, தெனகாசி ஆகிய ஒன்றியங்களிலுள்ள பகுதிகளும் உள்ளன.

கருப்பாநதி அணை

வாக்காளர் விவரம்: கடையநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதியில்2 லட்சத்து 88 ஆயிரத்து 909 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர் (ஆண் - 1,43,484, பெண்-1,45,416, மூன்றாம் பாலினத்தவர்-9). இத்தொகுதியில மொத்தம் 411 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.

சமூக நிலவரம்: தொகுதியில் இஸ்லாமியர்கள் அதிகளவில் உள்ள நிலையில், தேவேந்திர குல வேளாளர், தேவர் இன மக்களும் கணிசமாக உள்ளனர். அதற்கு அடுத்த படியாக சேனைத் தலைவர், யாதவர்,நாடார் இன வாக்குகள் உள்ளன.

கடந்த தேர்தல்களில் வென்றவர்கள்

1977ல் நடைபெற்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் ரசாக் வெற்றி பெற்றார். 1980ல் திமுக ஆதரவு பெற்ற முஸ்லிம் லீக் வேட்பாளர் சாகுல்ஹமீது வெற்றி பெற்றார். 1984ல் அதிமுக வேட்பாளர் பெருமாள் கடையநல்லூர் தொகுதியில் வெற்றி பெற்றார். 1989ல் திமுக வேட்பாளர் சம்சுதீன் (எ) கதிரவன் பெற்றி வாகை சூடினார்.

1991ல் அதிமுக வேட்பாளர் நாகூர்மீரான் வெற்றி பெற்றார். 1996ல் திமுக வேட்பாளர் நயினாமுகமது வென்றார். 2001ல் அதிமுக வேட்பாளர் சுப்பையா பாண்டியன் வெற்றிக்கனி பறித்தார். 2006ல் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பீட்டர் அல்போன்ஸ் வெற்றி பெற்றார். 2011 தேர்தலில் அதிமுக வேட்பாளர் செந்தூர்பாண்டியன் வெற்றி பெற்றார். 2016 தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் முகமது அபூபக்கர் வெற்றி பெற்றார்.

1977 முதல் 2016 வரை ஒவ்வொரு தேர்தலிலும் அதிமுக கூட்டணி அல்லது திமுக கூட்டணிக் கட்சிகள் மாறி, மாறி வெற்றி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

2011 தேர்தலில் அதிமுக வேட்பாளர் செந்தூர்பாண்டியன் 80,794 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் பீட்டர் அல்போன்ஸ் 64,708 வாக்குகளும், எஸ்டிபிஐ வேட்பாளர் முகமதுமுபாரக் 6,649 வாக்குகளும், பாஜக வேட்பாளர் பாண்டித்துரை 3,233 வாக்குகளும் பெற்றனர்.

கடந்த தேர்தலில் முகமது அபூபக்கர்(முஸ்லிம் லீக்) 70,763 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் சேகதாவூது 69,569 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் கோதை மாரியப்பன் 15,858 வாக்குகளும், பாஜக வேட்பாளர் கதிர்வேலு 14,286 வாக்குகளும், எஸ்டிபிஐ வேட்பாளர் ஜாபர்அலி உஸ்மானி 5,993 வாக்குகளும் பெற்றனர்.

மக்களின் எதிர்பார்ப்புகள்

தேங்காய் கூந்தலில் இருந்து நார் தயாரிக்கும் தொழிற்கூடங்கள் அதிகம் இருப்பதால் தென்னை சார்ந்த தொழிற்சாலைகளையும், தேங்காய் சார்ந்த மதிப்புக் கூட்டுப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளையும் இத்தொகுதியில் நிறுவினால் பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஒரு காலத்தில் நெசவுத் தொழிலுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற கடையநல்லூரில் தற்போது நெசவுக் கூடங்களே இல்லை. இங்குள்ளவர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளுக்குச் சென்று பணியாற்றி வருகி்ன்றனர். எனவே, தொகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட வேண்டும். 

அதேநேரத்தில் கடையநல்லூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தனி வட்டம், அரசுக் கல்லூரி, அரசு ஐடிஐ போன்றவை மறைந்த அமைச்சர் செந்தூர்பாண்டியனின் முயற்சியால் கடையநல்லூருக்கு கிடைத்ததை அதிமுகவினர் சாதனைகளாக கருதுகின்றனர்.

சமூக, அரசியல் நிலவரம்

வரவிருக்கும் தேர்தலில், அதிமுக சார்பில் தென்காசி வடக்கு மாவட்டச் செயலராக இருந்து வரும் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பாவிற்கே சீட் கொடுக்கப்பட வேண்டும் என அதிமுக தொண்டர்கள் தெரிவித்து வருகின்றனர். ஏற்கெனவே இவர் தொகுதி மக்களுக்கு மிகவும் பரிச்சயமானவர் என்பது கூடுதல் சிறப்பாக இருக்கும் என்கின்றனர் அதிமுகவினர். இருந்த போதிலும், நெடுவயல் ஆடிட்டர் நாராயணன், கடையநல்லூர் நகர அதிமுக செயலர் எம்.கே.முருகன், முன்னாள் நகர செயலர் கிட்டுராஜா, ஒன்றியச் செயலர்கள் செல்லப்பன், முத்துப்பாண்டி, சுந்தரையா உள்ளிட்ட ஏராளமானோர் விருப்ப மனுவை அளிக்கவுள்ளனர். 

கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலகம் ஊருக்கு வெளிப்புறம் அமையவிருந்தது. முஸ்லிம் லீக் எம்எல்ஏ முகமதுஅபூபக்கரின் முயற்சியால்தான் நகரப் பகுதிக்கு வந்ததாகவும், கரோனா நோய்த்தொற்று காலத்தில் கட்சி பேதமின்றி வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வர முடியாமல் தவித்தவர்களை தமிழகத்திற்கு அழைத்து வர பெருமுயற்சி எடுத்தவர் முகமதுஅபூபக்கர் என அவரின் சாதனைகளை பட்டியலிடுகின்றனர் முஸ்லிம் லீக் கட்சியினர். எனவே முகமதுஅபூபக்கர்தான் மீண்டும் கடையநல்லூரில் களம் காண வேண்டும் என முஸ்லிம் லீக் கட்சியினர் மட்டுமின்றி கூட்டணி கட்சியினரும் விரும்புவதாக கூறப்படுகிறது. யாரும் எளிதில் சந்தித்து பேச முடியும் என்பது அவரது சிறப்பம்சம் என்கின்றனர் கட்சியினர். இருந்தாலும் திமுக சார்பில் அய்யாத்துரை பாண்டியன், கடையநல்லூர் நகர திமுக செயலர் சேகனா உள்ளிட்டோரும் விருப்ப மனு அளித்துள்ளனர்.

இதற்கிடையே, தேவர் மற்றும் இஸ்லாமிய சமுதாய வாக்குகள் கணிசமாக உள்ள நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் இத்தொகுதியில் கணிசமான வாக்குகளை பெறும் என்கின்றனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளராக அதன் மாவட்டச் செயலர் பொய்கை மாரியப்பன் களம் இறங்குவதாவும் கூறப்படுகிறது. இவர், மறைந்த அமைச்சர் செந்தூர் பாண்டியனின் தீவிர விசுவாசியாக இருந்தவர்.

இம்முறை பாஜக, தேமுதிக போன்ற கட்சிகள் அதிமுகவுடன் இணைந்துள்ள நிலையில், அதிமுக கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளை விட சுமார் 25,000 வாக்குகள் வரை கூடுதலாக பெறும் என்கின்றனர் அதிமுகவினர். மேலும், தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்ற அறிவிப்பு, அந்த சமூக மக்களின் வாக்குகளையும் அதிமுகவிற்கு பெற்று தரும் நிலையும் உள்ளது. அதே சமயம், தென்மாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கியை பெற்றுள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பெறும் வாக்குகள் அதிமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். கடையநல்லூர் தொகுதியைப் பொருத்தவரை எக்கட்சிக்கும் வெற்றி எளிதானதல்ல என்றே சொல்லலாம்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT