தொகுதிகள்

ஆம்பூர்: சிறுபான்மை சமுதாயத்தை நம்பும் அரசியல் கட்சிகள்

2nd Mar 2021 06:33 PM | எம். அருண்குமார்

ADVERTISEMENT

தொகுதியின் சிறப்பு: 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தொகுதிக்கு உள்பட்ட ஆம்பூர், தோல் பொருள்கள், ஷூ உற்பத்தி, ஏற்றுமதியில் சிறந்து விளங்குகிறது. தோல் பொருள்கள் ஏற்றுமதியில் அன்னிய செலாவணியை ஈட்டித் தரும் நகரம் என்பதால் ஆம்பூருக்கு ஏற்றுமதி சிறப்பு நகரம் என்ற அந்தஸ்தை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. அன்னிய செலாவணியை ஈட்டுவதால் ஆம்பூர் நகரம் டாலர் ஏரியா எனவும் அழைக்கப்படுகிறது. தோல் பொருள்கள் கண்காட்சிக்கு என ஆம்பூரில் வர்த்தக மையம் துவங்கப்பட்டுள்ளது. அதேபோல ஆம்பூர் என்றால் அனைவரின் நினைவுக்கு வருவது பிரியாணிதான். ஆம்பூர் பிரியாணி தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் புகழ்பெற்றது. மேலும் மல்லிகை பூவுக்கும், விவசாயத்துக்கும் புகழ்பெற்ற ஆம்பூர் பகுதியில் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக் காலத்தில் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை உருவாக்கப்பட்டு அவரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஆம்பூர் வர்த்தக மையம்

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த ஆம்பூர், ஆரம்பத்தில் கடந்த 1957 ஆம் ஆண்டு இரட்டை உறுப்பினர்கள் கொண்ட தொகுதியாக இருந்துள்ளது. அதன்பின் 1962 முதல் 1971 வரை ஆம்பூர் (தனி) தொகுதியாக இருந்தது. தொகுதி மறுசீரமைப்பில் ஆம்பூர் தொகுதி நீக்கப்பட்டு வாணியம்பாடி தொகுதியுடன் இணைக்கப்பட்டது. சுமார் 40 ஆண்டுகளுக்குப் பின் மறுபடியும் கடந்த 2011 தேர்தல் முதல் ஆம்பூர் (பொது) தொகுதியாக மீண்டும் உருவானது.

தொகுதி எல்லை

ஆம்பூர் தொகுதியில் ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட வார்டுகளும், மாதனூர் ஊராட்சி ஒன்றியம் ஆலங்காயம் ஒன்றியத்தைச் சேர்ந்த பகுதிகளும் உள்ளன. தொகுதியில் மொத்தம் 2,36,819 வாக்காளர்கள்  உள்ளனர். இதில் 1,14,905 ஆண் வாக்காளர்களும், 1,21,902 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினம் 12 வாக்காளர்களும் உள்ளனர். வாக்காளர்களில் ஆதிதிராவிடர், முஸ்லிம்கள், நாயுடு, முதலியார், வன்னியர், யாதவர், ரெட்டியார், ராஜூக்கள், நாடார் உள்ளிட்ட பல்வேறு இனத்தவரும் இத்தொகுதியில் வசித்து வருகின்றனர்.

தோல் தொழிற்சாலைகள்

பொதுமக்களின் எதிர்பார்ப்புகள் 

ஆம்பூர் நகராட்சி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி இல்லாதது இப்பகுதி மக்களின் பெரும் குறையாக உள்ளது. ஏ-கஸ்பா பகுதியில் உள்ள ஒரே ஒரு அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். ஆம்பூர் தொகுதியில் அரசு மகளிர் கலைக்கல்லூரி, அரசு பாலிடெக்னிக், அரசு ஐடிஐ ஏற்படுத்தி தரவேண்டும். தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாக இருப்பதால் ஆம்பூர் உள்ள இஎஸ்ஐ மருந்தகத்தை, மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். ஆம்பூரில் உள்ள அரசு மருத்துவமனை தாலுகா அந்தஸ்து பெற்ற மருத்துவமனையாக தரம் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டும் இதுவரை அதற்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை.

ADVERTISEMENT

மேலும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திணறும் ஆம்பூர் பஜார் பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாட்டினரும், அண்டை மாநிலத்தவரும் அடிக்கடி வரும் ஆம்பூரில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கன்டெய்னர் கையாளும் மையம்

மேலும் நகரின் மையப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. தற்போது 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட உள்ள பணிகள் விரைவில் துவங்க உள்ளது. அப்போது ஒரு சில இடங்களில் மேம்பாலம் அமைக்க உள்ளனர். இதனால் வியாபாரிகள் பெருமளவில் பாதிக்கும் நிலை உள்ளது. ஆதலால் இத்திட்டத்தை கைவிட்டு சான்றோர்குப்பம் என்ற இடத்திலிருந்து இருந்து வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதி வரை மாநகரங்களில்  அமைக்கப்பட்டுள்ளதுபோல உயர்மட்ட மேம்பாலம் அமைத்தால் அதன் வழியாக கார், லாரி போன்ற இதர வாகனங்கள் எளிதில் செல்ல வசதியாக இருக்கும். குறிப்பிட்ட இடங்களில் மட்டும் மேம்பாலம் அமைத்துவிட்டால் அனைத்து பேருந்துகளும் ஆம்பூருக்குள் வராமலேயே சென்றுவிடும் நிலை ஏற்படும்.

மேலும் ஆம்பூரைத் தலைமையிடமாக கொண்டு மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் தனியாக ஏற்படுத்த வேண்டும். ஆம்பூரில் மின்மயானம் அமைக்க வேண்டும். ஆம்பூர் கம்பிக்கொல்லை பகுதியில் உள்ள ஆணைமடுகு தடுப்பணையை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும், உயரத்தை அதிகப்படுத்த வேண்டும்.

ஆம்பூர் பெத்லகேம், ரெட்டித்தோப்பு பகுதிகளுக்கு செல்ல ரூ. 30 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் அறிவிப்பு செய்யப்பட்டு  8 ஆண்டுகள் ஆகியும் இதுவரை ஆரம்பக்கட்ட பணிகள்கூட துவக்கப்படாமல் உள்ளது.  

நகரை ஒட்டி ஓடும் பாலாறு தற்போது பாழாகி கிடக்கிறது. பாலாற்றில் கழிவுநீர் கலப்பதும், குப்பைகளைக் கொட்டுவதாலும், முட்செடிகள் வளர்ந்து காடுகள் போல் காட்சி அளிக்கிறது. மேலும் பாலாற்றை ஆக்கிரமிப்பு செய்து, அரசின் நிலத்தையை சிலர் பட்டா போட்டு விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வரும் சட்டப்பேரவைத்தேர்தலில் வெற்றி பெரும் வேட்பாளர் பாலாற்றுக்கு ஒரு நிரந்த தீர்வு ஏற்படுத்த வேண்டும்.

மேலும், மாதனூரை தலைமையிடமாக கொண்டு புதிய காவல் நிலையம் ஏற்படுத்த வேண்டும், அகரம்சேரி - மேல்ஆலத்தூர் இடையே பாலாற்றில் மேம்பாலம் கட்ட வேண்டும். ஆம்பூரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் மலைப்பகுதியில் அமைந்துள்ள நாயக்கனேரியை சுற்றுலாத்தலமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அங்குள்ள வற்றாத ஏரியில் படகு சவாரி ஏற்படுத்த வேண்டும்.

ஆம்பூர் அருகே மின்னூர் பகுதியில் டான்சி தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. அதனால் அதனை புதிய தொழில் பேட்டையாக அறிவித்து அங்கு தொழிற்சாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மின்னூரில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் செல்ல வசதியாக மின்னூர் - வடகரை பாலாற்றில் தரைப்பாலம் கட்ட வேண்டும். மேலும் மின்னூரில் தேசிய நெடுஞ்சாலையை பொதுமக்கள் கடந்து செல்ல மேம்பாலம் கட்ட வேண்டும்.

ஆம்பூர் தொகுதிக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். கிராமப் பகுதிகளுக்கு கூடுதல் பேருந்து வசதி, சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். மிட்டாளத்தில் உள்ள ஊட்டல் கோவில் பகுதியைச் சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும். கிராமப் பகுதியில் கூடுதல் கால்நடை ஆஸ்பத்திரி உருவாக்க வேண்டும். வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் வரை பாலாற்றில் தண்ணீர் வரத்து இல்லை. அதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. எனவே பாலாற்றில் தண்ணீர் வரத்தை உறுதிபடுத்த தென்பெண்ணை - புாலாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

ஆம்பூர் சட்டப்பேரவைத்தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூரில் சட்டப்பேரவை உறுப்பினருக்கான அரசு அலுவலகம் இல்லை. 

வேலூரிலிருந்து திருப்பத்தூர் மாவட்டம் பிரிக்கப்பட்டதில் ஆம்பூர் தொகுதி பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஆம்பூரில் மாவட்ட அளவில் எந்தவித அரசு அலுவலகமும், துறை அலுவலகமும் வரவில்லை. 

திருப்பத்தூர் மாவட்டத்திலேயே தோல் தொழிற்சாலைகள் அதிக எண்ணிக்கையில் இயங்கி வருவதால் ஆம்பூர் தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூர் பகுதியில் மாவட்ட தொழில் மைய அலுவலகம் அமைக்கப்பட வேண்டுமென்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

2016 தேர்தலுக்குப் பிறகு அப்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் ஆர். பாலசுப்பிரமணி முயற்சியால் மாதனூரில் அரசு கலைக் கல்லூரி திறக்கப்பட்டது. மாவட்டம் பிரிப்புக்குப் பிறகு மாதனூரில் இயங்கி வந்த அரசு கலைக் கல்லூரி அகரம் பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது.அதனால் தற்போது வேலூர் மாவட்ட எல்லையில் உள்ளது. கல்லூரி ஆம்பூர் தொகுதியில் இருந்தாலும், வேலூர் மாவட்ட எல்லை பகுதியில் அமைந்துள்ளது. அதன் காரணமாக ஆம்பூர் தொகுதியில் புதிதாக அரசு மகளிர் கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அரசு ஐடிஐ அமைக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
 
இதுவரை நடந்த தேர்தல் முடிவுகள்

1957-(இரட்டைஉறுப்பினர் தொகுதி)
          வி.கே.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.ஆர்.முனிசாமி

1962 - பி.ராஜகோபால்  (காங்) -25,505
           எஸ்.ஆர்.முனிசாமி - 15,979

1967 - எம்.பன்னீர்செல்வம் (திமுக) - 31,554
           பி.ராஜகோபால் (காங்) -  20,947

1971 - எம்.பன்னீர்செல்வம் (திமுக) -  32,937
            எம்.ஆதிமுலம் - 21,449

அதன்பின் ஆம்பூர் தொகுதி நீக்கப்பட்டு வாணியம்பாடி தொகுதியுடன் இணைக்கப்பட்டது. 40 ஆண்டுகளுக்கு பிறகு 2011 ஆம் ஆண்டு மீண்டும் ஆம்பூர் (பொது) தொகுதியாக உருவாக்கப்பட்டது.

2011 - அதிமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி வெற்றி
அ.அஸ்லம்பாஷா (மமக) - 60,361
விஜய்இளஞ்செழியன் (காங்) - 55,270

2016 - ஆர். பாலசுப்பிரமணி - (அதிமுக - தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்) - 79,182
வி.ஆர். நசீர் அஹமத் -  (மனிதநேய மக்கள் கட்சி) - 51,176

2019 - இடைத்தேர்தல் - திமுக வெற்றி
அ.செ. வில்வநாதன் (திமுக) - 96,455
ஜெ. ஜோதிராமலிங்கராஜா (அதிமுக) - 58,688

அதிமுக - திமுக நேரடியாக களம்?

2019 ஆம் ஆண்டில் நடந்த ஆம்பூர் தொகுதிக்கான இடைத் தேர்தலில் அதிமுக  - திமுக நேரடியாக களம் கண்டன. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நேரத்தில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றதால் சிறுபான்மையினரின் வாக்குகள் திமுகவிற்கு கிடைத்தன. ஆம்பூர் தொகுதியில் சிறுபான்மையினரின் வாக்குகளே வெற்றியைத் தீர்மானிக்கும் நிலையில் உள்ளன. அதனால் அரசியல் கட்சியினர் சிறுபான்மை வாக்காளர்களை நம்பியிருக்கின்றனர்.

இந்நிலையில் வரவிருக்கும் தேர்தலில் அதிமுக - திமுகவே கூட நேரடியாக இத்தொகுதியில் களம் காணலாம் என்றும் கூறப்படுகிறது.  ஆனால் அதே நேரத்தில் திமுக கூட்டணியில் ஆம்பூர் தொகுதியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சிகள் கேட்டு வருகின்றன. மேலும் அதிமுக கூட்டணியில் தேமுதிக, புதியநீதி கட்சி ஆகியவை ஆம்பூர் தொகுதியில் போட்டியிட முனைப்பு காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

அதிமுக, திமுக கட்சிகள் ஆம்பூர் தொகுதியை கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்குமா அல்லது மீண்டும் அதிமுக - திமுகவே நேரடியாக களம் காணுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Tags : election 2021
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT