தொகுதிகள்

மடத்துக்குளம்: அதிமுக - திமுக நேரடிப் போட்டி

வி.கே. ராஜமா​ணிக்கம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம் சட்டப்பேரவைத் தொகுதி, உடுமலைப்பேட்டை தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்டு கடந்த 2011 இல் புதிதாக உருவாக்கப்பட்டதாகும். இந்தத் தொகுதி முழுவதும் கிராமப்புறங்களை உள்ளடக்கியது. திருமூர்த்தி மலை, அமராவதி அணைக்கட்டுப் பகுதிகளை உள்ளடக்கிய தொகுதி.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

இந்தத் தொகுதியில் உடுமலைப்பேட்டை வட்டத்தில் உள்ள 35 ஊராட்சிகள், ஒரு பேரூராட்சி, மடத்துக்குளம் வட்டத்தில் உள்ள 11 ஊராட்சிகள், 4 பேரூராட்சிகள், உடுமலை, அமராவதி வனச் சரகங்களுக்குள்பட்ட 17 மலைக் கிராமங்கள் அடங்கியுள்ளன.

உடுமலைப்பேட்டை வட்டம் (பகுதி)

செல்லப்பம்பாளையம், புங்கமுத்தூர், உடுக்கம்பாளையம், பெரியபாப்பனூத்து, சின்னப்பாப்பனூத்து, பாப்பன்குளம், ஆண்டிகவுண்டனூர், தும்பாளப்பட்டி, வடக்கு போதிநத்தம், ஆர்.வேலூர், பெரிய வாளவாடி, சர்க்கார்புதூர், தின்னம்பட்டி, தேவனூர்புதூர், ராவணபுரம், எரிசினம்பட்டி, கொடுங்கியம், ஜிலோபநாய்க்கன்பாளையம், அரசூர், ரெட்டிபாளையம், சின்னவாளவாடி, தெற்கு பூதிநத்தம், போதிகவுண்டந்தாசரபட்டி, கொழுமம், எலயமுத்தூர், குருவப்பநாய்க்கனூர், ஆலம்பாளையம், பள்ளப்பாளையம், மொடக்குப்பட்டி, தீபாளப்பட்டி, கிருஷ்ணபுரம், வலயபாளையம், ஜல்லிப்பட்டி, லிங்கமாவூர், வெங்கிட்டாபுரம், சின்னகுமாரபாளையம், குறிச்சிக்கோடை, மனுப்பட்டி, கல்லாபுரம், காரத்தொழுவு, துங்காவி, தாந்தோணி, முக்கூடுஜல்லிப்பட்டி, வென்சப்பட்டி, மைவாடி, ஜோத்தம்பட்டி, கடத்தூர், சோழமாதேவி, வேடப்பட்டி, கணபதிபாளையம், பூலாங்கிணர், அந்தியூர், ராகல்பாவி, கண்ணம்மநாய்க்கனூர், குறள்குட்டை, போடிபட்டி.

அமராவதி (காப்புக்காடு), ஆனைமலை (காப்புக்காடு), குதிரையார், குக்கல் (காப்புக்காடு), கஞ்சம்பட்டி (காப்புக்காடு), கொமாரலிங்கம் (பேரூராட்சி), தளி (பேரூராட்சி), கணியூர் (பேரூராட்சி), கணக்கம்பாளையம் (சென்சஸ் டவுன்). 

வாக்காளர் விவரம்

ஆண்கள் - 1,30,335, பெண்கள் - 1,24,068, மூன்றாம் பாலினத்தவர் - 15 ,மொத்தம் - 2,44,418.

சமூக, பொருளாதார நிலவரம்

அமராவதி அணை அமைந்திருப்பதால் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் வேளாண்மை அதைச்  சார்ந்த தொழில்களே முக்கியத் தொழிலாக உள்ளன. இதுபோக பல்வேறு கிராமங்களில் நெசவு, கயிறு தொழிற்சாலைகளும் உள்ளன. கோழிப்பண்ணைகள், பட்டுக் கூடு உற்பத்திக் கூடங்கள், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காற்றாலைகளும் உள்ளன. புகழ்பெற்ற திருமூர்த்தி மலை அமணலிகேஸ்வரர் கோயில், அமராவதி ஆற்றை ஒட்டியுள்ள கிராமங்களில் பிரசித்தி பெற்ற 9 சிவன் கோயில்கள் உள்ளன. தமிழகத்தில் இயங்கி வரும் ஒரே ராணுவப் பள்ளியும் இந்தத் தொகுதியில்தான் உள்ளது. இந்தத் தொகுதியில் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். அடுத்ததாக நாயுடுகள், அருந்ததியினர், பாண்டிய வேளாளர் ஜாதியினர் வசிக்கின்றனர்.

இதுவரை வெற்றி பெற்ற கட்சிகள்

கடந்த 2011 இல் தொகுதி முதன்முதலாக உருவானபோது நடந்த பொதுத் தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.சண்முகவேலு வெற்றி பெற்றார். அதன் பிறகு 2016 இல் நடந்த தேர்தலில் திமுகவைச் சேர்ந்த இரா.ஜெயராமகிருஷ்ணன் அதிமுகவிடம் இருந்து இந்த தொகுதியைப் பெற்றார்.

2016 தேர்தல் நிலவரம்

இரா.ஜெயராம கிருஷ்ணன் (திமுக) - 76,619
கே.மனோகரன் (அதிமுக) - 74,952
வித்தியாசம் - 1,667.

கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

மடத்துக்குளம் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் அடிப்படை வசதிகள் தவிர்த்து பெரிய திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. எதிர்க்கட்சி வரிசையில் திமுக எம்எல்ஏ இருந்ததால் இந்த நிலை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதுவரை தீர்க்கப்படாத பிரச்னைகள்

அமராவதி அணையில் இருந்து வீணாக வெளியேறும் தண்ணீரை சேமித்து வைக்க அப்பர் அமராவதி அணை ஒன்றை கட்ட வேண்டும், தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

விளை பொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்காத சூழ்நிலையில் குளிர்பதனக் கிடங்கில் அவற்றைச் சேமித்து சேமித்து வைக்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இப்பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட வேண்டும். கோயில்களை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் இருந்து வருகின்றன. மலைவாழ் மக்கள் வாழும் செட்டில்மெண்டுகளில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும், மலைவாழ் மக்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாக்குரிமை வழங்க வேண்டும் என்பதும் நீண்ட கால கோரிக்கைகளாக உள்ளன. அதேபோல் மடத்துக்குளம் தொகுதிக்குள்பட்ட பகுதியில் ஒரு தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்பதும் நிறைவேற்றப்படாத கோரிக்கையாகவே இருந்து வருகிறது. 

போட்டியிட வாய்ப்புள்ள கட்சிகள்

இந்தத் தொகுதியில் 2021 தேர்தலில் அதிமுகவும் திமுகவும் மீண்டும் நேரடியாகவே போட்டியிடும் என்று கூறப்படுகிறது. திமுகவைப் பொருத்தவரை தற்போதைய எம்.எல்.ஏ ஜெயராமகிருஷ்ணனே மீண்டும் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. அதிமுகவில், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரான சி.மகேந்திரன் போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பலமான இரு வேட்பாளர்கள் மோதுவதால் இந்த முறையும் போட்டி கடுமையாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT