தொகுதிகள்

நாமக்கல்: வலுவான வேட்பாளரை நிறுத்தினால் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு

27th Feb 2021 02:04 PM | எம். மாரியப்பன்

ADVERTISEMENT

பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில், நரசிம்மர் கோயில், ஒரே பாறையிலான மலைக்கோட்டை, மோகனூர் நவலடியான் கோயில், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை ஆகியவை நாமக்கல் தொகுதியில் உள்ள பிரபல இடங்களாகும். நாமக்கல் ஆஞ்சநேயரைத் தரிசிக்க தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் தினசரி ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். லாரி, கோழிப் பண்ணைத் தொழிலுக்கு பெயர் பெற்ற நகரமாக விளங்குவதால், வெளிமாநிலத்தவர் அதிகம் வந்து செல்லும் பகுதியாகவும் உள்ளது.

வாக்காளர்கள் நிலவரம்: 

ஆண்கள்: 1,24,210
பெண்கள்: 1,32,792
மூன்றாம் பாலினத்தவர்:46
மொத்த வாக்காளர்கள்: 2,57,048
வாக்குச்சாவடிகள்: 388  

நில அமைப்பு: நாமக்கல் தொகுதியின் கிழக்குப் பகுதியில் திருச்சி மாவட்டம், மேற்கு பகுதியில் ஈரோடு மாவட்டம், தெற்கில் கரூர் மாவட்டம், வடக்கில் சேலம் மாவட்டம் ஆகியவை உள்ளன. தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளாக, நாமக்கல் நகராட்சியில் 1 முதல் 39 வார்டுகள் உள்ளன. மோகனூர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகள், சர்க்கார் நாட்டாமங்கலம், அக்ரஹார நாட்டாமங்கலம், கல்யாணி, அனந்தகிருஷ்ணராயசமுத்திரம், கெஜல்நாய்க்கன்பட்டி, பாச்சல், பிடாரிபட்டி, கடந்தப்பட்டி, ராமநாய்க்கன்பட்டி, கதிராநல்லூர், திருமலைப்பட்டி, கண்ணூர்பட்டி, பொடங்கம், தாத்தையங்கார்பட்டி, நவணி, லக்கபுரம், ஏளுர், தத்தாதிரிபுரம், தத்தாதிரிபுரம், கரடிப்பட்டி, கரடிப்பட்டி, தானத்தம்பட்டி, அக்ரஹார உடுப்பம், களங்காணி, காரைக்குறிச்சி, மின்னாம்பள்ளி, பொட்டணம் செல்லப்பம்பட்டி, தாளாம்பாடி, சர்க்கார் உடுப்பம், அணியார், சிலுவம்பட்டி, காதப்பள்ளி.

ADVERTISEMENT

பாப்பிநாய்க்கன்பட்டி, மரூர்பட்டி, வேட்டாம்பாடி, வீசாணம், நல்லிபாளையம் தும்மங்குறிச்சி, எர்ணாபுரம், தளிகை, நரவலூர் தொட்டிபாளையம், திண்டமங்கலம், கீரம்பூர், வள்ளிபுரம், பெரியப்பட்டி, கொண்டிசெட்டிப்பட்டி, நாமக்கல், வகுரம்பட்டி, லத்துவாடி, தொட்டிபட்டி, ராசாம்பாளையம், கோனூர், கீழ்சாத்தம்பூர், தோளுர், அணியாபுரம், பரளி, அரூர், ஆண்டாபுரம், அரசநத்தம், குமரிபாளையம், ஆரியூர், பேட்டைபாளையம், ராசிபாளையம் மற்றும் ஒருவந்தூர் கிராமங்கள் உள்ளன.

தொகுதி நிலவரம்: நாமக்கல் தொகுதியைப் பொருத்தமட்டிலும், 2006 வரை தனித் தொகுதியாக இருந்தது. 2011-இல் இருந்து பொதுத் தொகுதியாக மாற்றம் செய்யப்பட்டது. 2001, 2006 தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கிய, தற்போதைய திருவள்ளூர் மக்களவை உறுப்பினர் ஜெயகுமார் வெற்றி பெற்று இங்கு எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த 2011, 2016 தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்று கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ.வாக உள்ளார். 2011-இல் திமுக கூட்டணியில் கொமதேகவுக்கு நாமக்கல் ஒதுக்கப்பட்டது. அக்கட்சியின் தலைவரான தேவராசன் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அடுத்து 2016-இல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆர்.செழியன் தோல்வியடைந்தார்.

மாவட்டத்தின் தலைநகரமாக உள்ள நாமக்கல்லை, இம்முறை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்காமல் திமுகவே போட்டியிட வேண்டும் என்பது அக்கட்சியினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.          

அதிமுகவில் தற்போதைய எம்எல்ஏவான பாஸ்கருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது. அதேவேளையில் மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த டிஎல்எஸ்.காளியப்பனுக்கும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 

தற்போதைய சூழலில் அவர்களைத் தவிர்த்து செல்வாக்கு மிக்க நபர்கள் அதிமுகவில் இல்லை. பணபலம் மிக்க ஓரிருவர் தவிர மற்றவர்கள் யாரும் போட்டியிட பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. மாவட்டச் செயலாளரும், மின் துறை அமைச்சருமான பி.தங்கமணியின் முடிவுதான் இறுதியானது.

திமுகவைப் பொருத்தவரை, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. ஆனால் திமுகவினர் இதனை விரும்பவில்லை. திமுகவுக்கு நாமக்கல்லை ஒதுக்கும்பட்சத்தில் மாவட்டப் பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், முன்னாள் மத்திய இணை அமைச்சர் செ.காந்திச்செல்வன், மாவட்ட துணை செயலாளர் ராமலிங்கம் ஆகியோர் போட்டியிட ஆர்வம் காட்டுகின்றனர். காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட வாய்ப்பில்லை. இங்கு 1996-க்குப் பின் இங்கு திமுக போட்டியிடவில்லை. 24 ஆண்டுகளுக்குப் பின் இம்முறை போட்டியிட வாய்ப்புள்ளது. 

சமூக  நிலவரம்: இத்தொகுதியில் கவுண்டர், வன்னியர், தாழ்த்தப்பட்டோர், முதலியார் சமூகத்தினர் உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையாக கவுண்டர் சமூகத்தினரும், தாழ்த்தப்பட்டோரும் உள்ளனர்.

கோழிப் பண்ணை மற்றும் அதனை சார்ந்த உப தொழில்கள், சரக்குப் போக்குவரத்து, ஜவ்வரிசி ஆலைகள், லாரி கூண்டு கட்டும் தொழில் நடைபெறுகிறது. இவை தவிர கல்வி நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. இத்தொகுதிக்கு உள்பட்ட காவிரிக் கரையில் அமைந்துள்ள மோகனூரில் கரும்பு, வாழை, நெல் உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகின்றன. இதேபோல் புதுச்சத்திரம் ஒன்றிய பகுதிகளில் மரவள்ளி, சின்ன வெங்காயம், தானிய வகைகள், கீரை வகைகள் அதிகம் பயிரிடப்படுகின்றன.    

நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்: நாமக்கல் தொகுதியில் செலம்ப கவுண்டர் பூங்கா, கொண்டிச்செட்டிப்பட்டி ஏரி பூங்கா போன்றவை உருவாக்கப்பட்டன. இதனால் பொழுதுபோக்கிற்கு மக்கள் வெளியிடங்களை நாடிச் செல்ல வேண்டிய தேவையில்லாமல் போனது. கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் புதிய சாலைகள், சாக்கடைக் கால்வாய்கள் அதிகம் கட்டப்பட்டுள்ளன, அரசு சட்டக் கல்லூரி செயல்பாட்டுக்கு வந்தது. அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி - மருத்துவமனையாக தரம் உயர்வு, புதிய அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. 

நிறைவேற்றப்படாத திட்டங்கள்:

நாமக்கல் நகராட்சி பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்ட நெரிசல் அதிகம் காணப்படுகிறது. முதலைப்பட்டி பகுதியில் இடம் தேர்வு செய்தபோதும் நிலம் கையப்படுத்துவதில் தொடர்ந்து இழுபறி நிலவுவதால் பேருந்து நிலைய இடமாற்றம் கானல் நீராக உள்ளது.

நாமக்கல் முதலைப்பட்டி தொடங்கி சேந்தமங்கலம் சாலை வழியாக துறையூர் சாலை, திருச்சி சாலை, லத்துவாடி, கரூர் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையிலான சுற்றுவட்டச்சாலை திட்டம் அறிவிப்பாக மட்டுமே உள்ளது. அதிலும் நிலம் கையகப்படுத்துவதில் பிரச்னை உள்ளது. கொசவம்பட்டி ஏரி ரூ. 40 கோடியில் புனரமைக்கப்படும் என அறிவித்தபோதும் அதற்கான நடவடிக்கை இன்னும் தொடங்கப்படவில்லை. நாமக்கல் மக்களுக்கு நீராதாரமாக விளங்கிய கொசவம்பட்டி ஏரி குப்பைகள், கழிவுகள் தேங்கும் கூடாரமாக உள்ளது.

தொகுதியின் பிரச்னைகள்:

நகராட்சி பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய வேண்டும். சுற்றுவட்டச் சாலை பணிகளை விரைந்து முடித்தால், நாமக்கல் நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும். கொசவம்பட்டி ஏரியை சீரமைத்து பூங்காவாக மாற்றினால் நகரின் அழகு மேம்படும். 

நாமக்கல்லில் ரயில் நிலையம் இருந்தபோதும் பெரும்பாலான ரயில்கள் இவ்வழியாக இயக்கப்படவில்லை. இதனால் ரயில் நிலையம் பெயரளவுக்கு மட்டுமே உள்ளது. மோகனூர் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்லாததால் அப்பகுதி மக்களும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அரவைக்காக கரும்பு வழங்கிய விவசாயிகள் உரிய நிலுவைத் தொகையைப் பெற முடியாமல் கவலையில் உள்ளனர். நஷ்டத்தில் இருந்து ஆலையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது. 

மக்களின் எதிர்பார்ப்பு:

நாமக்கல்லின் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர், நரசிம்மர் கோயிலை சுற்றுலாத் தலமாக்கி பல்வேறு மாநிலத்தவரும் கோயிலுக்கு வந்து செல்லும் வகையில் விரிவாக்கம் செய்ய வேண்டும். கோழிப் பண்ணை, லாரி கூண்டு கட்டுதல், கனரக வாகனங்கள் இயக்குதல் உள்ளிட்ட தொழில்கள் தவிர பெண்களுக்கான, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்குரிய தொழில்கள் இல்லை.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை அதிகம் கொண்டு வரும் வகையில் சிப்காட் ஒன்று நாமக்கல் தொகுதியில் உருவாக்கப்பட வேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் நீண்ட நாளைய எதிர்பார்ப்பு. முட்டைத் தொழிலுக்கான ஏற்றுமதி மண்டலம் உருவாக்கப்பட வேண்டும். பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்து நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும். தினசரி தடையின்றி காவிரி குடிநீர் கிடைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவசியமாக உள்ளது. 

அரசியல் கட்சிகளின் செல்வாக்கு: 

நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகள் மற்றும் நாமக்கல் ஒன்றியத்தில் 10 கிராம ஊராட்சிகள், மோகனூர், புதுச்சத்திரம் ஒன்றியத்தில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் அதிமுகவுக்கு சாதகமாக உள்ளன. நாமக்கல், மோகனூர், புதுச்சத்திரம் ஒன்றிய பகுதிகளில் திமுக சற்று வளர்ந்து வருகிறது.

அதிமுக எம்எல்ஏ பாஸ்கர் தொகுதியில் ஓரளவு திட்டங்களை செயல்படுத்தியிருந்தாலும், மறைமுகமாக மக்களிடையே அதிருப்தி நிலவுகிறது. மக்களவை உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ், அவ்வப்போது எம்எல்ஏ நிதியில் கட்டப்பட்ட கட்டடங்கள், தரமற்ற சாலைகளை ஆய்வு செய்து அதில் உள்ள குறைபாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டி வருகிறார். இதனால் இருவருக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்ட நிகழ்வுகள் உண்டு. 1996-க்குப் பின் திமுக இத்தொகுதியில் போட்டியிடவில்லை. இந்த முறை அதிமுகவுக்கு எதிராக வலுவான வேட்பாளரை நிறுத்தும்பட்சத்தில் திமுக வெல்ல வாய்ப்புண்டு.

அதிமுக கூட்டணியில் அதிமுகவே போட்டியிடலாம். திமுக கூட்டணியில் திமுக அல்லது கொமதேக போட்டியிடலாம். நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அதிமுகவுடன் கூட்டணி அமையாதபட்சத்தில் தேமுதிக ஆகியவையும் களமிறங்கலாம். இவை தவிர சுயேச்சைகள் எண்ணிக்கை அதிகம் இருக்கும்.

கடந்த தேர்தல்களில் வென்றவர்கள்; 2 ஆம் இடம் பெற்றவர்கள்: 

1962: எஸ். சின்னையன்(காங்கிரஸ்); கே.வி.ராசப்பன்(திமுக)

1967: எம். முத்துசாமி(திமுக) ; வி. ஆர். கருப்ப கவுண்டர்(காங்கிரஸ்)

1971: எம். பழனிவேலன்(திமுக); டாக்டர் கே.காளியப்பன்(காங்கிரஸ் (ஓ))

1977: ஆர். அருணாசலம்(அதிமுக); கே.வேலுசாமி(திமுக)

1980: ஆர். அருணாசலம்(அதிமுக); கே.வேலுசாமி(திமுக)

1984: ஆர். அருணாசலம்(அதிமுக); கே.வேலுசாமி(திமுக)

1989: வி.பி. துரைசாமி (திமுக); எஸ்.ராஜு (அதிமுக. ஜெ)

1991: எஸ். அன்பழகன் (அதிமுக); ஆர்.மாயவன்(திமுக)

1996: கே. வேலுசாமி (திமுக); எஸ்.அன்பழகன் (அதிமுக);

2001: டாக்டர் கே. ஜெயக்குமார் (காங்கிரஸ்); எஸ்.அகிலன் (புதிய தமிழகம்)

2006: கே. ஜெயக்குமார் (காங்கிரஸ்); ஆர்.சாரதா (அதிமுக)

2011 தேர்தல்:

வெற்றி பெற்றவர் - கே.பி.பி.பாஸ்கர்(அதிமுக) - 95,579 (56.34%)

2 ஆம் இடம் - தேவராசன்(கொமதேக) 59724 (35.02%)- வித்தியாசம்-35,855

சத்தியமூர்த்தி(ஐஜேகே) - 2,996 (1.77%),  பழனியப்பன்(பாஜக) - 2168 (1.28%), அர்ஜூனன்(சுயேச்சை) - 1,333 (0.79%).

2016 தேர்தல்:

தேர்தலில் பதிவான வாக்குகள் - 1,94,861.

வெற்றி பெற்றவர் - கே.பி.பி.பாஸ்கர் (அதிமுக) 89,076 (45.81%)

2 ஆம் இடம் - மருத்துவர் ஆர்.செழியன்(காங்கிரஸ்) 75,542 (38.85%)

வெற்றி வித்தியாசம் - 13,534

மாதேஸ்வரன்(கொமதேக) - 10,506, இளங்கோ(தமாகா) - 4,341, ராஜேந்திரன் (பாஜக) - 2,751.

முக்கிய தகவல்கள்:

வரும் தேர்தலில் இளம் வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களிக்க உள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் சுமார் 3 லட்சம் வாக்காளர்கள் தங்களது பெயர்களை பட்டியலில் பதிவு செய்துள்ளனர். நாமக்கல் தொகுதியில் குறைந்தபட்சம் 50,000 இளம் வாக்காளர்கள் வாக்களிக்க வாய்ப்புள்ளது.

திமுகவில் முன்னாள் மத்திய இணையமைச்சர் காந்திச்செல்வனுக்கு வாய்ப்பு வழங்கும்பட்சத்தில் அவரைத் தோற்கடிக்க கட்சிக்குள் உள்ளடி வேலைகள் நடக்க வாய்ப்புள்ளது. மாவட்டப் பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், ஓராண்டுக்கும் மேலாக தொகுதியை பலப்படுத்தும் வேலைகளை தீவிரமாகச் செய்து வருகிறார். இருப்பினும் அவர் அதிமுகவை எதிர்கொள்வது சற்றுச் சிரமம் தான்.             

கொமதேகவுக்கு தொகுதியை ஒதுக்கும்பட்சத்தில் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் போட்டியிடலாம். அவரது ஆதரவாளர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். கொங்கு மண்டலத்தில் உள்ள அக்கட்சியினர் நாமக்கல் தொகுதியில் முகாமிட்டு ஈஸ்வரன் வெற்றிக்கு கடுமையாக பாடுபடுவர். 2019 மக்களவைத் தேர்தலில் நாமக்கல் தொகுதியில் கொமதேக 40 ஆயிரம் வாக்குகளை கூடுதலாகப் பெற்றது கவனிக்கத்தக்கது. 

Tags : election 2021
ADVERTISEMENT
ADVERTISEMENT