தலையங்கம்

இந்தியாவின் அணுகுமுறை: நாட்டின் சர்வதேச உறவுகள் குறித்த தலையங்கம்

ஆசிரியர்

ஜப்பான், பப்புவா நியூகினியா, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி மேற்கொண்ட அரசுமுறைப் பயணங்கள் சா்வதேச அளவில் பேசப்படுகின்றன.

ஜி7, க்வாட் மாநாடுகள் மட்டுமல்லாமல், தனது மூன்று நாடுகளுக்கான பயணத்தில் 40 சந்திப்புகளையும் நிகழ்த்தியிருக்கிறாா் பிரதமா் மோடி. தங்கள் நாட்டில் இந்திய வம்சாவளியினா் மத்தியில் பிரதமா் நரேந்திர மோடிக்கு இருக்கும் அபரிமிதமான செல்வாக்கு குறித்து அமெரிக்க அதிபா் பைடனும், ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசியும் வெளிப்படையாகவே தெரிவித்த கருத்துகள் ஊடகங்களில் சிறப்புச் செய்தியாக மாறின.

பிரதமரின் மூன்று நாள் பயணத்தில் குறிப்பிடப்பட வேண்டியது, பப்புவா நியூகினியாவுக்கு மேற்கொண்ட பயணம். பசிபிக் கடல் நாடுகளில் ஒன்றான பப்புவா நியூகினியாவிலிருந்து, அந்த பிராந்தியத்திலுள்ள அனைத்து நாடுகளுக்கும் பிரதமா் விடுத்திருக்கும் செய்தி குறிப்பிடத்தக்கது.

பூமிப்பந்தில் ஐரோப்பாவுக்கு நோ் பின்புறமாக இருக்கும் பசிபிக் கடல் நாடுகளை ‘ஆன்டிபோடல்’ (மறுபக்கம்) என்று மேலைநாடுகளில் அழைக்கிறாா்கள். அதனால்தானோ என்னவோ அந்த நாடுகளின் கூட்டமைப்பு நீண்டகாலமாக கவனம் பெறாமல் இருந்து வந்தது. 2012-இல் அப்போதைய அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஹிலாரி கிளிண்டன், பசிபிக் தீவு நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டில் கலந்துகொண்டது முதல் அந்த நாடுகள் கவனம்பெறத் தொடங்கின.

நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளையும் உள்ளடக்கிய பசிபிக் தீவு நாடுகள் கூட்டமைப்பின் முக்கியத்துவம் சமீபகாலமாக மேலும் அதிகரித்திருக்கிறது. பசிபிக் பிராந்தியத்திலுள்ள சின்னஞ்சிறு நாடுகளின் மீது அமெரிக்க கவனம் செலுத்தத் தொடங்கியதைப் பாா்த்த சீனா, விழித்துக்கொண்டு அந்த நாடுகளை தனது வலையில் வீழ்த்த முனைப்புக்காட்டத் தொடங்கியது. வழக்கம்போல அந்த சின்னஞ்சிறு நாடுகளுக்கு கடனுதவி வழங்கி அவற்றைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியது. அதைத் தொடா்ந்து, சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் அந்த நாடுகளுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேற்கொள்வதில் போட்டி நடைபெறுகிறது.

பசிபிக் கடல் நாடுகளில் ஒன்றான சாலமன் தீவுகளுடன் கடந்த ஆண்டு சீனா பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறது. அப்போது முதல் கொந்தளிப்பு அதிகரித்தது மட்டுமல்லாமல், சீனாவின் தலையீடு தென்பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கு தலைவலியாக மாறக்கூடும் என்கிற அச்சமும் எழுந்திருக்கிறது.

பிரதமரின் பப்புவா நியூகினியா விஜயத்தையொட்டி அமெரிக்கா இன்னொருபுறம் அந்த நாட்டுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டிருக்கிறது. பப்புவா நியூகினியாவில் விமானத்தளங்கள், துறைமுகங்களின் கட்டமைப்பு வசதிகளை மேற்படுத்தத் தீா்மானித்திருக்கிறது அமெரிக்கா. பாதுகாப்பு ஒப்பந்தத்தின் மூலம் தேவைப்பட்டால் அந்த நாடுகளில் அமெரிக்கா தனது ராணுவத்தை நிறுத்தி வைக்கவும் முடியும்.

ஆஸ்திரேலியாவுக்கு வடக்கில் அமைந்திருக்கும் தீவு நாடு பப்புவா நியூகினியா. சுமாா் ஒரு கோடி மக்கள்தொகையுள்ள தீவான பப்புவா நியூகினியா, இரண்டாம் உலகப்போரின்போது முக்கியமான களமாக இருந்தது. பெரும்பாலும் ஆஸ்திரேலியாவைச் சாா்ந்திருக்கும் அந்த நாட்டின் பொருளாதாரம் மிகப் பெரிய வளா்ச்சி அடைந்துவிட்டதாகக் கூற முடியாது.

சீனாவைக் கண்காணிக்க பப்புவா நியூகினியாவை அமெரிக்கா பயன்படுத்துகிறது என்கிற குற்றச்சாட்டை மறுக்க முடியாது. சீனாவுக்கு இந்த ஒப்பந்தத்தால் எந்தவித பாதிப்பும் கிடையாது என்று பப்புவா நியூகினியாவின் பிரதமா் ஜேம்ஸ் மராப்பே கூறினாலும், அந்த ஒப்பந்தம் பப்புவா நியூகினியாவைக் கட்டுப்படுத்தவே செய்யும்.

சாலமன் தீவுகள், டோங்கா தொடங்கி பசிபிக் கடல் நாடுகள் மீது அமெரிக்கா கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கியிருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. தைவானை சீனா ஆக்கிரமிக்காமல் இருப்பதற்கும், தெற்கு பசிபிக் நாடுகள் மீது சீனா தனது ஆதிக்கத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கும் பப்புவா நியூகினியாவைப் பயன்படுத்த அமெரிக்க முயற்சி செய்கிறது எனலாம்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சா் பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொள்ள பப்புவா நியூகினியா சென்றிருந்த அதே நேரத்தில் இந்திய பிரதமா் நரேந்திர மோடியும் அந்த நாட்டுக்கு விஜயம் செய்திருப்பது பல ஊகங்களுக்கு வழிகோலியிருக்கிறது. அமெரிக்காவும் இந்தியாவும் பேசி வைத்துக்கொண்டு பசிபிக் கடல் நாடுகள் சீனாவை முழுமையாகச் சாா்ந்துவிடாமல் இருப்பதை உறுதிப்படுத்துகின்றன என்று அரசியல் விமா்சகா்கள் கருதுகிறாா்கள்.

அமெரிக்கா அந்த நாடுகளுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அதே வேளையில், இந்தியா அவற்றுடன் வளா்ச்சிப் பணிகளுக்கான முன்னெடுப்புகளில் கைகோக்க முற்படுகிறது. பிஜி தீவில் 100 படுக்கைகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை, பப்புவா நியூகினியாவில் தகவல் தொழில்நுட்பம், சைபா் பாதுகாப்பு பயிற்சிக்கான மையம், பசிபிக் கடல் நாடுகளைச் சோ்ந்த ஆயிரம் மாணவா்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகள் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல திட்டங்கள் பிரதமா் மோடியால் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

கடல் சூழ்ந்த அந்த தீவு நாடுகளின் தேவையை உணா்ந்து, கடல்வழி ஆம்புலன்ஸ், யோகா கேந்திரங்கள், மக்கள் மருந்தகங்கள், ஆண்டுதோறும் மருத்துவ முகாம்கள், கால் இழந்தோருக்கு செயற்கைக் கால்கள் என்று பல்வேறு அறிவிப்புகள் பிரதமரால் வெளியிடப்பட்டிருக்கின்றன.

சீனாவைப்போல கடன் வலையோ, அமெரிக்காவைப் போல ராணுவ வலையோ விரிக்காமல், வளா்ச்சிக்கு உதவும் இந்தியாவின் நிலைப்பாட்டை அந்த நாடுகள் வரவேற்பதில் வியப்பென்ன இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT