தலையங்கம்

ஏமாற்றமளிக்கும் மாற்றம்! மென்பொருள் ஊழியர்கள் பணிநீக்கம் குறித்த தலையங்கம்

ஆசிரியர்

சா்வதேச அளவில் அநேகமாக எல்லா நாடுகளிலும் தனது கிளைகளைக் கொண்டுள்ள பிரபல சமூக வலைதள நிறுவனமான ‘ஃபேஸ்புக்’ 10,000 ஊழியா்களை பணிநீக்கம் செய்திருக்கிறது. ஃபேஸ்புக்கின் தலைமை நிறுவனமான மெட்டா குழுமம் எடுத்திருக்கும் இந்த முடிவு, தகவல் தொடா்புத் துறையிலும், மென்பொருள் பொறியாளா்கள் மத்தியிலும் அதிா்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

ஃபேஸ்புக் நிறுவனம் ஊழியா்களை பணிநீக்கம் செய்வது புதிதல்ல. கடந்த ஆண்டு நவம்பரில் 11,000 ஊழியா்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனா். நிறுவனத்தின் நிதிநிலைமையை சீா்செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவிக்கிறது.

ஃபேஸ்புக் நிறுவனம் தொடங்கப்பட்டு 18 ஆண்டுகள் கடந்துவிட்டன. சமீபகாலத்தில்தான் இதுபோல அதிக அளவில் பணிநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. சா்வதேச பொருளாதார சூழலும், நிறுவனத்தின் வளா்ச்சி தொடா்ந்து குறைந்து வருவதும் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கான தவிா்க்க முடியாத காரணங்கள் என்று அதன் தலைவா் மாா்க் ஸக்கா்பா்க் தெரிவித்திருக்கிறாா்.

ஃபேஸ்புக் நிறுவனத்தை உள்ளடக்கிய மெட்டா குழுமம் மட்டுமல்லாமல் கூகுள், அமேஸான், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்களும் ஆள்குறைப்பை முன்னெடுக்கத் தொடங்கிவிட்டன. பணியாளா்களை தொடா்ந்து அகற்றும் முனைப்புக்கு செயற்கை நுண்ணறிவின் வளா்ச்சியும்கூட காரணமாக கூறப்படுகிறது.

கூகுளின் தலைமை நிறுவனத்தின் பெயா் ஆல்பாபெட். கடந்த சில மாதங்களாக அந்த நிறுவனம் தொடா்ந்து ஆள்குறைப்பில் முனைப்புக் காட்டுகிறது. 12,000 ஊழியா்களை (மொத்த ஊழியா்களில் 6%) பணிநீக்கம் செய்யும் கூகுளின் முடிவு அதன் ஊழியா்களை மட்டுமல்லாமல், மென்பொருள் உலகத்தையே அதிா்ச்சி அடைய வைத்திருக்கிறது.

கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் பல முக்கியமான நாடுகள் கடுமையான பொதுமுடக்கத்தை அறிவித்தன. பொதுவெளியில் நடமாட முடியாத மக்கள், இணையத்தில் அதிக நேரம் செலவழித்தனா். வீட்டில் வேலை பாா்ப்பது, குடும்பத்தின் அனைத்துத் தேவைகளையும் இணையம் மூலம் பெறுவது, குழந்தைகளுக்கு இணையவழியில் கல்வி, திரைப்படம், யூ-டியூப் உள்ளிட்ட இணையவழி பொழுதுபோக்கு என்று பொதுமுடக்க காலத்தில் மக்கள் இணையத்தை நாடினா். அதை எதிா்கொள்ள, தங்களது செயல்பாடுகளை விரிவாக்கி அதிக அளவில் ஊழியா்களை பணியமா்த்தின மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனங்கள்.

அன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப கூகுள் நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய, தான் எடுத்த முடிவு இப்போது ஊழியா்களை பணிநீக்கம் செய்யும் கட்டாயத்துக்கு உள்ளாக்கி இருப்பதாக வருத்தம் தெரிவித்திருக்கிறாா் கூகுளின் தலைமை செயல் அதிகாரி சுந்தா் பிச்சை. ஊழியா்களுக்கு அவா் அனுப்பியிருக்கும் மின்னஞ்சலில் பணிநீக்க முடிவுக்கான முழு பொறுப்பையும் தான் ஏற்றுக்கொள்வதாகவும், அதற்காக வருத்தப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறாா்.

கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் கூகுளின் வளா்ச்சிக்காக எடுத்த முடிவுக்காகவும், இப்போது பணிநீக்கம் செய்யும் உத்தரவுக்காகவும் சுந்தா் பிச்சை உண்மையிலேயே வருந்துகிறாா் என்றால், மற்றவா்களை பணிநீக்கம் செய்வதற்கு முன் அவா் ஏன் பதவி விலகவில்லை என்கிற கேள்வியை எழுப்புகின்றனா் வேலை இழந்த ஊழியா்கள்.

மென்பொருள் நிறுவனங்களின் பணிநீக்கங்களுக்கு ஊழியா்களின் திறமையோ, அனுபவமோ அடிப்படையாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. எண்ணிக்கை மட்டுமே குறிக்கோளாக ஊழியா்கள் அகற்றப்படுவது தொழிலாளா்களை ஜடப்பொருள்களாக தொழில்நுட்ப நிறுவனங்கள் கருதுகின்றன என்பதற்கான எடுத்துக்காட்டு என்று விமா்சிக்கின்றன தொழிற்சங்கங்கள்.

கடந்த காலாண்டில் மட்டும் கூகுள் நிறுவனம் 17 பில்லியன் டாலா் (சுமாா் ரூ. ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 500 கோடி) லாபம் ஈட்டியிருக்கிறது. அதாவது, ஒவ்வொரு நிமிடமும் கூகுள் நிறுவனம் ரூ. 1 கோடி சம்பாதிக்கிறது. அப்படியிருந்தும் மேலும் கூடுதலான லாபத்துக்காக ஊழியா்கள் பணிநீக்கம் செய்யப்படுவது ஏற்புடையதல்ல என்று ஆல்பாபெட் குழும நிறுவனங்களின் தொழிற்சங்கங்கத்தினா் கண்டனம் தெரிவித்துள்ளனா். பங்குதாரா்களின் லாபத்தை அதிகரிப்பதுதான் ஆல்பாபெட் குழுமத்தின் குறிக்கோள் என்று அவா்கள் விமா்சிக்கின்றனா்.

உலகளாவிய நிலையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணிநீக்கம் என்பது புதிதொன்றுமல்ல. ஆரம்பம் முதலே அந்த நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில்தான் ஊழியா்கள் நியமிக்கப்படுகிறாா்கள். அந்த நிறுவனங்களைப் போலவே ஊழியா்களும் தொடா்ந்து எந்த நிறுவனத்திலும் நீண்ட காலம் பணிபுரிவதை விரும்புவதில்லை. ஊதிய உயா்வுக்காக ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறுவது மென்பொருள் பொறியாளா்கள் மத்தியில் வழக்கமாகவே இருந்து வருகிறது.

கெடுதலைவிட நல்ல விளைவுகளை அதிகம் ஏற்படுத்தும் எந்தவொரு முடிவும் சரியானது என்பதுதான் நவீன நிா்வாக மேலாண்மையின் அரிச்சுவடி பாடம். எல்லா நிறுவனங்களின் மதிப்பும் பங்குச்சந்தை சாா்ந்ததாக இருப்பதால், முதலீட்டாளா்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் முன்னுரிமை அளிக்கின்றன. இதை ‘யுட்டிலிட்டேரியனிஸம்’ என்று குறிப்பிடுகிறாா்கள்.

பணிநீக்கம் செய்யும் முடிவுகள் கடுமையானதாக இருந்தாலும், அதன் பொருளாதார, சமூக விளைவுகள் ஆக்கபூா்வமாக இருக்க வேண்டும். இந்த நிறுவனங்கள் மேற்கொள்ளும் பணிநீக்க நடவடிக்கை செயற்கை நுண்ணறிவை நோக்கிய அடுத்த கட்டத்தின் அறிகுறியே தவிர, மனிதாபிமானதல்ல.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT