தலையங்கம்

அரிக்கொம்பன் எழுப்பும் கேள்வி!

ஆசிரியர்

 தமிழக - கேரள எல்லையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிந்த அரிக்கொம்பன் யானையை ஒருவழியாக வனத்துறையினர் பிடித்து, திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அணைக்கு மேல்பகுதியில் உள்ள கோதையாறு மேலணைப் பகுதியில் கொண்டு விட்டுள்ளனர். கோதையாறு மேலணைப் பகுதி, யானைகள் நடமாட்டம் மிகுந்த பகுதியாகவும், பசுமையானதாகவும், யானைகளின் தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலும் இருப்பதால் அரிக்கொம்பன் வாழத் தகுந்த இடமாக இருக்கும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
 கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்துக்குட்பட்ட சின்னக்கானல் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் பிறந்த அரிக்கொம்பன், தனது இரண்டு வயதில் தாயை இழந்தது. சின்னக்கானல் வனப்பகுதியில் ஏராளமான சொகுசு பங்களாக்கள் கட்டப்பட்டதால், அதன் வலசைப் பாதை மாறி அரிக்கொம்பன் ஊருக்குள் நுழையும் நிலை உருவானது. சின்னக்கானல் பகுதியில் பொதுமக்கள் பலர் அரிக்கொம்பனால் கொல்லப்பட்டனர்.
 இதையடுத்து, அரிக்கொம்பன் யானையை கேரள வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து, கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி தமிழகத்தையொட்டிய பெரியாறு புலிகள் காப்பக வனத்தில் விட்டுச் சென்றனர். அங்கிருந்து கம்பம் நகருக்குள் நுழைந்த அரிக்கொம்பனால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது.
 கடந்த மாதம் 27-ஆம் தேதி கம்பம் நகரில் புகுந்து தெருக்களில் திரிந்த அரிக்கொம்பன் யானை, அங்கு ஆட்டோ உள்ளிட்ட பொருள்களை சேதப்படுத்தியது. அப்போது, யானையைப் பார்த்த அதிர்ச்சியில் கீழே விழுந்து பலத்த காயமடைந்த பால்ராஜ் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
 அதன்பிறகு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சண்முகாநதி அணையிலிருந்து சின்ன ஓவுலாபுரம் - பெருமாள்மலை அடிவாரத்துக்கு இடம்பெயர்ந்த அரிக்கொம்பனை வனத்துறையினர், கால்நடை மருத்துவர்கள் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். கும்கி யானைகளின் உதவியுடன் அரிக்கொம்பன் லாரியில் ஏற்றப்பட்டு இப்போது திருநெல்வேலி மாவட்ட வனப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.
 இந்தியாவில் மனித - வனவிலங்குகளின் மோதலில் மனிதர்களுக்கும் யானைகளுக்குமான மோதலே அதிகம். பெரும்பாலும் யானைகளின் வாழ்விடத்தைச் சுற்றி குடியிருப்புகளும், வேளாண்மையும் அதிகரித்து வருவதும், வனப்பகுதியில் சொகுசு பங்களாக்கள் உள்ளிட்ட கட்டடங்கள் கட்டப்படுவதால், யானைகளின் வலசைப் பாதை மாறி, அவை ஊருக்குள் வருவதுமே இந்த மோதலுக்குக் காரணங்கள்.
 கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் அரசு தாக்கல் செய்த அறிக்கையின்படி, ஆண்டுதோறும் சராசரியாக பொதுமக்கள் 500 பேர் யானைகளின் தாக்குதலால் உயிரிழக்கின்றனர். 100 யானைகளும் பலியாகின்றன. 2022-க்கு முந்தைய மூன்று ஆண்டுகளில் 307 யானைகள் உயிரிழந்துள்ளன. அவற்றில் 222 யானைகள் மின்சாரம் தாக்கியும், 45 யானைகள் ரயிலில் அடிபட்டும் இறந்துள்ளன.
 29 யானைகள் வேட்டைக்காரர்களாலும், 11 யானைகள் விஷம் வைத்தும் கொல்லப்பட்டுள்ளன.
 ஆசிய யானைகள் அதிகம் வாழும் நாடாக இந்தியா திகழ்கிறது. 13 ஆசிய நாடுகளில் சுமார் 40,000 முதல் 50,000 யானைகள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ள நிலையில், 2017-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்திய வனங்களில் 29,964 யானைகள் உள்ளதாகத் தெரியவந்தது. சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு யூனியனால் அழிந்து வரும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள ஆசிய யானைகளைப் பாதுகாக்கும் பொருட்டும், யானைகள் - மனிதர்கள் மோதலைத் தவிர்ப்பதற்கும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
 யானைகளால் உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் நிவாரண நிதியை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு உயர்த்தியுள்ளது. நீண்டகாலத் தீர்வாக யானைகளின் வழித்தடங்களை மறு ஆய்வு செய்யும் பணியையும் மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பான பணியில் 50 சதவீதத்துக்கும் மேலாக நிறைவு செய்துவிட்டதாக மத்திய சுற்றுச்சூழல் - வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.
 வனப்பகுதியில் வறட்சி ஏற்படும்போது யானைகள், உணவு, தண்ணீரைத் தேடி வனத்தைவிட்டு வெளியேறுகின்றன. குறிப்பாக, அறுவடைப் பருவத்தின்போது வயல்களைத் தேடிவரும் யானைகள், குறுகிய நேரத்தில் மொத்த வயலையும் அழித்துவிடுகின்றன. இதனால் விவசாயிகளுக்கும் பெரும் இழப்பு ஏற்படுகிறது. இதன் விளைவாக யானைகளைத் திட்டமிட்டு கொல்லும் சம்பவங்களும் நடக்கின்றன. இதற்கு உதாரணமாக, 2001-இல் வடகிழக்கு இந்தியா மற்றும் சுமத்ரா வனப்பகுதிகளில் 60 யானைகள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் கூறப்படுகிறது.
 மேலும், யானைகளின் வழக்கமான வழித்தடங்களில் கட்டடங்கள், ரயில் தண்டவாளங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் குறுக்கிடும்போது, யானைகள் வழிமாறி ஊருக்குள் நுழைந்து விடுகின்றன. அரிக்கொம்பன் யானை விஷயத்திலும் இதுதான் நடந்திருக்கிறது. கேரளத்தின் சின்னக்கானலில் பிறந்த அரிக்கொம்பன், தமிழகத்தின் கம்பம், திருநெல்வேலி என அலைக்கழிக்கப்படுவதற்கு மனிதத் தவறினால்தான்.
 மனிதர்களுக்கு இந்தப் பூமியில் வாழ எந்த அளவுக்கு உரிமை இருக்கிறதோ அதே அளவுக்கு அரிக்கொம்பன்களுக்கும் இருக்கிறது என்கிற உண்மையை நாம் எப்போதுதான் உணரப் போகிறோம்?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT