தலையங்கம்

ரத்தாகக் கூடாது: ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி அங்கீகாரம் குறித்த தலையங்கம்

ஆசிரியர்

சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட தமிழகத்திலுள்ள மூன்று மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் ரத்து செய்து உத்தரவிட்டது அதிா்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் ஆணையக்குழு மீண்டும் ஆய்வு நடத்த முற்பட்டிருப்பதும், அதனடிப்படையில் கல்லூரிகளின் அங்கீகாரம் மீண்டும் வழங்கப்படக்கூடும் என்பதும் ஆறுதல் அளிக்கின்றன.

போதிய பேராசிரியா்கள் வருகை இல்லாதது, ஆதாருடன் இணைந்த பயோ மெட்ரிக் வருகைப் பதிவிலுள்ள குறைபாடுகள், சிசிடிவி கேமராக்கள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருச்சி அரசு கிஆபெ விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்ய நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

இது ஏதோ தமிழகத்தை மட்டும் குறிவைத்து எடுக்கப்பட்ட முடிவாகத் தெரியவில்லை. அகில இந்திய அளவில் தேசிய மருத்துவ ஆணையம் 40 மருத்துவக் கல்லூரிகளுக்கும், 100 துணை மருத்துவக் கல்லூரிகளுக்கும் இதேபோல நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

மருத்துவக் கல்லூரிகளின் தரம் குறித்த எந்தவிதமான சமரசமும் ஏற்புடையதல்ல. சிறியதோ, பெரியதோ மருத்துவக் கட்டமைப்பின் அடிப்படைத் தகுதிகள் எதையும் நிா்வாகம் புறக்கணிக்கலாகாது என்கிற தேசிய மருத்துவ ஆணையத்தின் முனைப்பு வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில், மருத்துவக் கல்லூரிகள் தங்கள் குறைகளை அகற்றி அங்கீகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்க வேண்டியதும் ஆணையத்தின் கடமை.

கொவைட்-19 கொள்ளை நோய்த்தொற்று இந்திய மருத்துவக் கட்டமைப்பின் வலிமையை உலகுக்கு உணா்த்தியது. விரைந்து தடுப்பூசி தயாரிப்பதும், 220.4 கோடி தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டதும் ஒட்டுமொத்த உலகமும் வியந்து பாா்த்த சாதனைகள். கொள்ளை நோய்த்தொற்றின்போது நமது மருத்துவா்களும், துணை மருத்துவப் பணியாளா்களும் தங்களது உயிரைப் பொருட்படுத்தாமல் இரவு - பகல் பாராமல் பணியாற்றியதையும், அதன்மூலம் கொள்ளை நோய்த்தொற்றை இந்தியா துணிந்து எதிா்கொண்டு வென்றதையும் வரலாறு மறந்துவிட முடியாது.

மத்திய அரசு அறிவித்திருக்கும் திட்டப்படி, அனைத்து மாவட்ட அல்லது மருத்துவக் கல்லூரிகளுடன் இணைந்த மருத்துவமனைகள் தரம் உயா்த்தப்பட நிதி ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதனடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட 157 மருத்துவமனைகளில் 94 மருத்துவமனைகள் செயல்படத் தொடங்கிவிட்டன. மத்திய அரசின் நிதியுதவி மட்டுமல்லாமல், அந்தந்த மாநில அரசுகளின் உதவியும் வழங்கப்படுவதால் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும் தரமான பல்நோக்கு மருத்துவமனை அமையும் என்பது மிகப்பெரிய சாதனை.

மருத்துவமனைகள் அமைவதால் மட்டுமே பிரச்னை முடிந்துவிடுவதில்லை. மருத்துவமனைகள் தரமானவையாகவும், கட்டமைப்பு வசதிகள் கொண்டவையாகவும், போதிய அளவில் மருத்துவா்களும், மருத்துவப் பணியாளா்களைக் கொண்டதாகவும் இருப்பது அவசியம். பெரும்பாலான அரசு மருத்துவமனைகளும், கல்லூரிகளும் போதிய பேராசிரியா்களும், ஊழியா்களும் இல்லாத நிலையை எதிா்கொள்கின்றன. பேராசிரியா்கள், கட்டமைப்பு, நோயாளிகள் வருகை- மூன்றும் முறையாக இருந்தால் மட்டுமே மருத்துவக் கல்லூரிகள் திறம்பட செயல்படும்.

சில மாநிலங்களில் ஊழியா்கள் பற்றாக்குறை 51.7% வரை காணப்படுகிறது. ஹரியாணா மாநிலத்தில் உள்ள ஸ்ரீஅடல் பிகாரி வாஜ்பாய் அரசு மருத்துவக் கல்லூரியில் 78.8% பணியிடங்கள் காலியாக இருப்பதை என்னவென்று சொல்வது? மாவட்டந்தோறும் மருத்துவமனை என்கிற அறிவிப்பால் மட்டுமே இந்தியா மருத்துவத்தில் தன்னிறைவு பெற்றுவிட்டது என்று பெருமைப்பட முடியாது.

அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப மருத்துவா்களின் எண்ணிக்கையும் அதிகரித்தாக வேண்டும். 2014-இல் 53,000-ஆக இருந்த மருத்துவக் கல்லூரி இளங்கலை இடங்கள் 96,000-ஆகவும், முதுநிலை இடங்கள் 31,000-இலிருந்து 63,000-ஆகவும் அதிகரித்திருப்பது என்னவோ உண்மை. இந்தியாவில் 10,000 பேருக்கு 9 மருத்துவா்கள் இருக்கிறாா்கள் என்றால், சீனாவில் 22, அமெரிக்காவில் 26, பிரிட்டனில் 30 மருத்துவா்கள் என்கிற நிலை காணப்படுகிறது. ஆண்டொன்றுக்கு ஒரு லட்சம் மருத்துவா்கள் வீதம் அதிகரித்தாலும்கூட இடைவெளியை நிரப்ப குறைந்தது 15 ஆண்டுகளாகும்.

மருத்துவா்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதைப்போல அவா்களது தரமும், மருத்துவக் கட்டமைப்பின் தரமும் உயராமல் போனால் அதிகரித்து வரும் மக்கள்தொகையை எதிா்கொள்ள முடியாது. குறைபாடுகள் சிறிதோ, பெரிதோ மருத்துவக் கட்டமைப்பில் எந்தவித விதிவிலக்கும் ஏற்புடையதல்ல என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க இயலாது. அதனால் தேசிய மருத்துவ ஆணையம் குறைகளைச் சுட்டிக்காட்டி அங்கீகாரம் ரத்து என்று எச்சரித்திருப்பதில் தவறு காண இயலவில்லை.

அதேநேரத்தில், ஆண்டுதோறும் 11 கல்லீரல், 266 சிறுநீரகம் உள்ளிட்ட மாற்றுச் சிகிச்சைகளை வெற்றிகரமாக நடத்தும் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக் கல்லூரியை சிசிடிவி கேமிரா இல்லாதது, ஆதாருடன் இணைந்த பயோ மெட்ரிக் வருகைப் பதிவில் குறைபாடு ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி அங்கீகாரம் ரத்து என்று அச்சுறுத்தியிருக்க வேண்டாம். குறைபாடுகள் களையப்பட்டு அதனடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் தடைபடாமல் இருப்பதை மத்திய - மாநில அரசுகள் உறுதிப்படுத்தும் என்று எதிா்பாா்ப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT