தலையங்கம்

துணிச்சலான முயற்சி! | உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் புதிய நடைமுறை குறித்த தலையங்கம்

ஆசிரியர்

நீதித்துறை குறித்து பல விமர்சனங்கள் இருந்தாலும்கூட, ஓர் அடிப்படை உண்மையை நாம் மறந்துவிடக் கூடாது. அரசியல் கட்சிகளின் மீதும், ஆட்சி நிர்வாகத்தில் இருக்கும் அமைச்சர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், அதிகாரிகள் மீதும், பரவலாக ஊடகங்கள் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து வருகிறார்கள். அந்த நிலையில், இப்போதும்கூட மக்களுக்கும், ஜனநாயகத்துக்கும் இருக்கும் ஒரே நம்பிக்கையாக நீதித்துறை மட்டுமே தென்படுகிறது.
நீதித்துறையில் பல குறைபாடுகள், நீதியரசர்கள் மீதான தனிப்பட்ட விமர்சனங்கள் இருந்தாலும்கூட அரசமைப்புச் சட்டத்துக்கும் ஜனநாயகத்துக்கும் இருக்கும் ஒரே அரணாகவும் நம்பிக்கையாகவும் நீதித்துறை மட்டுமே காட்சியளிக்கிறது. அதன் மீதான நம்பிக்கையைக் குலைக்கும் விதத்திலும், களங்கப்படுத்தும் விதத்திலும் முன்னெடுக்கப்படும் செயல்பாடுகள் அந்த கடைசி நம்பிக்கையையும் சிதைத்துவிடக் கூடும்.
தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பு எதுவாக இருந்தாலும் அதைப் பயன்படுத்தி தங்களின் நீண்டநாள் திட்டங்களையும், கனவுகளையும் நிறைவேற்றிக் கொள்பவர்கள்தான் அறிவாளிகள். அந்த வகையில் தற்போது உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகத் திகழும் உதய் உமேஷ் லலித், தனக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தி நீதித்துறை நடவடிக்கைகளில் புதியதொரு திருப்பத்தை ஏற்படுத்த முற்பட்டிருக்கிறார்.
உச்சநீதிமன்றத்தின் 49-ஆவது தலைமை நீதிபதியாக இருக்கும் யு.யு. லலித், 74 நாள்கள் மட்டுமே அந்தப் பதவியை வகிக்க இருக்கிறார். நவம்பர் 8-ஆம் தேதி 65 வயதை அடையும் அவர், பணி ஓய்வு பெற்றுவிடுவார். அதற்குள் தனக்குக் கிடைத்த வாய்ப்பில் அவர் மேற்கொண்டிருக்கும் முயற்சிகள், காலத்துடன் அவர் நடத்தும் போட்டி.
பதவியேற்ற அடுத்த நாளே 25 அரசியல் சாசன அமர்வுகளை அறிவித்தது துணிச்சலான முடிவு. அது மட்டுமல்லாமல் வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன் மூன்று நாள்களும் 15 இரண்டு நீதிபதிகள் அமர்வு செயல்படும் என்றும் அவர் அறிவித்து நடைமுறைப்படுத்தி இருப்பதை வியப்புடன் பார்க்கத் தோன்றுகிறது.
வழக்குரைஞராக இருந்து நேரடியாக நீதிபதி நியமனம் பெற்றவர் இப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி யு.யு. லலித். அதனால், வழக்குரைஞர்களின் பிரச்னைகளை நன்றாக உணர்ந்தவர் என்பதை அவரது செயல்பாடுகள் பிரதிபலிக்கின்றன.
வழக்குகள் பதிவு செய்யப்படுவதிலும், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதிலும், பிணைகள் தொடர்பான முறையீடுகள் உடனடியாக பரிசீலனைக்கு வருவதிலும் வெளிப்படைத்தன்மை ஏற்படுத்தப்படும் என்று வழக்குரைஞர்களுக்கு அவர் உத்தரவாதம் வழங்கியிருக்கிறார். 71,000-க்கும் அதிகமான வழக்குகள் தேங்கிக் கிடக்கும் நிலையில், அமர்வுகளை அறிவித்து வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு தனது குறுகிய பதவிக்காலத்தில் அவர் முன்னெடுத்திருக்கும் முயற்சிகள் முன்மாதிரியானவை.
அமெரிக்க உச்சநீதிமன்றம், ஆண்டொன்றுக்கு 70 அரசியல் சாசன வழக்குகளை ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரிக்கிறது. அதுபோல இந்தியா செயல்பட முடியாது. ஏனென்றால், நமது நீதிமன்றங்களில் அரசியல் சாசன பிரச்னைகள் மட்டுமல்லாமல், சாமானியர்களின் பல்வேறு கோரிக்கைகளையும் விசாரிக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதனால்தான் இரண்டு நீதிபதிகள் அமர்வை உருவாக்கி விரைந்து வழக்குகளை விசாரிக்கப் பணித்திருக்கிறார் தலைமை நீதிபதி.
மிக முக்கியமான சட்ட பிரச்னைகளைக் குறைந்தது ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்க வேண்டும் என்று அரசியல் சாசனத்தின் பிரிவு 145(3) கூறுகிறது. மூன்று நீதிபதிகள் அமர்வில் கருத்து வேறுபாடுகள் இருந்தால், அந்தத் தீர்ப்பும் ஐந்து நீதிபதிகள் அமர்வுக்கு அனுப்பப்பட வேண்டும். சமீபகாலமாக அரசியல் சாசன அமர்வுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. முந்தைய தலைமை நீதிபதி என்.வி. ரமணாவின் பதவிக் காலத்தில் அரசியல் சாசன அமர்வு எதுவுமே அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திரம் அடைந்த முதல் 10 ஆண்டுகளில் ஏறத்தாழ 15% வழக்குகளை அரசியல் சாசன அமர்வுகள் விசாரித்தன. 1960-களில் ஆண்டொன்றுக்கு 130 அரசியல் சாசன அமர்வுகள் தீர்ப்பு வழங்கின. சமீப காலங்களில் ஆண்டொன்றுக்கு 0.1% அளவில்தான் அரசியல் சாசன அமர்வுகள் செயல்படுகின்றன.
விடுதலை பெற்ற முதல் அரைநூற்றாண்டு காலத்தில் பல்வேறு அரசியல் சாசன பிரச்னைகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதில் நியாயம் இருக்கிறது. அப்போது உச்சநீதிமன்றத்தை அணுகினர். அந்த முன்மாதிரித் தீர்ப்புகள் இருப்பதால் இப்போது அதுபோன்ற அமர்வுகளின் தேவை குறைந்திருக்கக் கூடும்.
அரசின் தடுப்புக்காவல் சட்டத்துக்கு எதிராக கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே. கோபாலன் தொடுத்த வழக்குதான் முதலாவது அரசியல் சாசன அமர்வால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிமன்ற விசாரணையில் இருந்து அரசு கொண்டுவரும் சட்டங்களுக்கு விலக்களிக்க ஒன்பதாவது ஷெட்யூலை அன்றே ஜவாஹர்லால் நேரு அரசு கொண்டுவந்தது என்பதையும் குறிப்பிட வேண்டும்.
தனது முழு பலமான 34 நீதிபதிகளுடன் உச்சநீதிமன்றம் நாள்தோறும் மாலை நான்கு மணிவரை செயல்படுமானால், பெரும்பாலான அரசியல் சாசன வழக்குகளுக்கு விரைவில் தீர்வுகாண முடியும். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் புதிய நடைமுறை நீதிபதிகளுக்கு பணிச்சுமையை அதிகரித்திருக்கிறது என்பது உண்மை. ஆனால், அவரது துணிச்சலான இந்த முயற்சி உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றங்களிலும் தொடருமானால், தேங்கிக் கிடக்கும் வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காண முடியும் என்பது அதைவிட உண்மை.





 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

SCROLL FOR NEXT