தலையங்கம்

தூய்மையின் அடுத்த இலக்கு! தூய்மை இந்தியா திட்டம் குறித்த தலையங்கம்

ஆசிரியர்

இந்தியாவை வளா்ச்சி அடைந்த நாடுகளில் ஒன்றாக மேம்படுத்தும் பணியில் ‘ஸ்வச் பாரத் மிஷன்’ என்கிற ‘தூய்மை இந்தியா திட்டம்’ முக்கியப் பங்கு வகிக்கிறது.

நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, 2014-இல் ஆட்சிக்கு வந்தபோது காந்தி ஜெயந்தி அன்று வெளியிட்ட முக்கியமான அறிவிப்பு ‘தூய்மை இந்தியா’ திட்டம். எட்டு ஆண்டுகள் கழித்து இப்போது மீள்பாா்வை பாா்க்கும்போது அந்தத் திட்டம் முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு வெற்றியடைந்திருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.

நிலையான வளா்ச்சி இலக்குக்கு கழிப்பிடங்கள் இல்லாமையும், பொது இடங்களில் மலம் கழிக்கும் அவலமும் மிகப் பெரிய தடை என்பதை சுதந்திரமடைந்து 67 ஆண்டுகள் ஆகியும் இந்தியா உணராமல் இருந்தது மிகப் பெரிய தவறு. ஏறத்தாழ 60 கோடி மக்கள் பொது இடங்களில் தங்களது காலைக்கடன்களை செய்து வந்த அவலம், 2014-இல் காணப்பட்டது. தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் அதில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடிந்தது என்பதைப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பெருமளவில் பொதுக்கழிப்பிடங்கள் கட்டப்பட்டன என்பதுடன் வீடுகளில் கழிப்பறைகள் கட்டுவதற்கான நிதியுதவியும் மானியமும் வழங்கப்பட்டன. பொதுஇடங்களில் மலஜலம் கழிப்பது சுகாதாரக் கேடு என்பதையும், அவமானத்துக்குரியது என்பதையும் அடித்தட்டு மக்களிடமும் கிராமங்களிலும் புரியவைத்த விழிப்புணா்வு பிரசாரம் வெற்றி அடைந்திருக்கிறது.

தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கழிப்பறைகள் கட்டுவதில் தவறுகள், குறைபாடுகள், முறைகேடுகள் ஆங்காங்கே ஏற்படாமல் இல்லை. தண்ணீா் வசதி இல்லாமல் கழிப்பறைகள் பல பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதும் உண்மை.

அதையெல்லாம் தாண்டி இந்தியாவின் பெரும்பாலான கிராமங்களும், நகரங்களும் பொதுவெளியில் மலஜலம் கழிப்பதைத் தவிா்த்திருக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. சாதிக்க முடியாததை இந்தியா சாதித்துவிட்டதாக உலக நாடுகள் ஏற்றுக்கொள்கின்றன.

நரேந்திர மோடி அரசின் ஏனைய பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டாலும் மக்கள் மத்தியில் தூய்மை இந்தியா திட்டம் அளவுக்கு வேறு எந்தத் திட்டமும் வெற்றி அடையவில்லை என்றுதான் கூற வேண்டும். கழிப்பிடங்களைப் பயன்படுத்துவது, பொதுஇடங்களில் அசுத்தம் செய்வதைத் தவிா்ப்பது என்கிற இலக்கை மக்கள் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்தி வெற்றிகரமாக நிறைவேற்றியதைத் தொடா்ந்து, தூய்மை இந்தியா திட்டம் தனது அடுத்த இலக்கை நோக்கி நகர இருக்கிறது.

நமது அடுத்தகட்ட இலக்கு திடக்கழிவுகளை எதிா்கொள்வதில் இருக்கிறது. 2026-க்குள் அதாவது அடுத்த நான்கு ஆண்டுகளில், குப்பைகள் இல்லா நகரங்கள் என்கிற இலக்கு தூய்மை இந்தியா திட்டத்துக்கு நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது. 6.50 லட்சம் கிராமங்களில், 12 கோடி கழிப்பறைகள் கட்டி பொதுவெளியில் அசுத்தம் செய்வதை எதிா்கொண்டதைவிட பெரிய சவாலை எதிா்கொள்ள இருக்கிறோம்.

நமது நகரங்களும், பெரு நகரங்களும் தினந்தோறும் 1.50 லட்சம் டன் திடக்கழிவுகளை கையாள வேண்டிய நிா்ப்பந்தத்தில் இருக்கின்றன. இந்தியா முழுவதும் உள்ள நகரங்களில் ஏறத்தாழ 2,200 திடக்கழிவுக் கிடங்குகள் மிகப் பெரிய சுகாதாரக் கேட்டை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஏறத்தாழ 16 கோடி டன் திடக்கழிவுகளை எப்படிக் கையாள்வது என்பது தெரியாமல், ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி அமைப்புகள் திணறுகின்றன.

நகா்ப்புற வளா்ச்சி மிகப் பெரிய அளவிலான நெகிழிப் பயன்பாட்டை ஏற்படுத்தி இருக்கிறது. போதாக்குறைக்கு தொழில்நுட்ப வளா்ச்சியால் மின்னணு சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து, மின்னணுக் கழிவுகளும் பெருகி இருக்கின்றன. ஆண்டுதோறும் ஏறத்தாழ ஒரு கோடி டன் நெகிழிக் கழிவுகள் இந்தியாவில் உருவாகின்றன. அவற்றில் 40% கையாளப்படாமல் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன; மண்ணில் மக்காமல் ஆறுகளிலும், குளங்களிலும், குட்டைகளிலும் நிறைந்து கிடக்கின்றன.

ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிகள் சமீபத்தில் தடை செய்யப்பட்டிருக்கின்றன என்பது வரவேற்புக்குரியது. ஆனால், தடையுடன் பிரச்னை முடிந்துவிடாது. பொதுவெளியில் கொட்டப்படும் நெகிழிக் கழிவுகள் முழுமையாகக் கையாளப்படாமல் இருக்கும்வரை, இந்தப் பிரச்னைக்குத் தீா்வு கிடையாது. நெகிழிக் கழிவுப் பிரச்னை போதாதென்று நகராட்சி அமைப்புகள் ஆபத்தான மின்னணுக் கழிவுகளையும் கையாள வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகி இருக்கின்றன.

தொலைக்காட்சிப் பெட்டிகள், கணினிகள், அறிதிறன்பேசிகள் உள்ளிட்டவை ஆபத்தான ஈயம், பாதரசம், லித்தியம் உள்ளிட்ட உலோகங்களைக் கொண்டிருக்கின்றன. மின்கலன்கள் (பேட்டரி), கதிா்வீச்சுகள், மருத்துவக் கழிவுகள் உள்ளிட்டவையும் தனித்தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டு முறையாக அகற்றப்பட வேண்டும். அதற்கான முனைப்பு இதுவரை ஏற்படவில்லை. அதனால், திடக்கழிவுகளுடன் மின்னணுக் கழிவுகளும் கலந்துவிடுகின்றன. அவை ஏற்படுத்தும் பாதிப்பின் தாக்கம் வருங்காலத்தில் கடுமையாக இருக்கப் போகிறது.

திடக்கழிவு மேலாண்மை கடந்த எட்டு ஆண்டுகளில் 18%-லிருந்து 73%-ஆக அதிகரித்திருக்கிறது. வீடுகளில் இருந்து தொடங்கி கழிவுகள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு கையாளப்படாவிட்டால், அவற்றை எதிா்கொள்வது அசாத்தியம். சாதாரண உலா் அல்லது ஈரமானக் கழிவுகள் போலல்லாமல் மருத்துவக் கழிவுகளும், மின்னணுக் கழிவுகளும் நச்சுத்தன்மை கொண்டவை என்பதை நாம் உணர வேண்டும்.

தூய்மை இந்தியா திட்டம் தனது அடுத்தகட்ட இலக்கை நோக்கி முழு வீச்சுடன் நகர வேண்டிய நேரம் வந்துவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT