தலையங்கம்

வரம்பு மீறல்! | அரசமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவு குறித்த தலையங்கம்

ஆசிரியர்

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கடந்த 31 ஆண்டுகளுக்கும் மேலாகத் தண்டனை அனுபவித்து வந்த ஏ.ஜி. பேரறிவாளனை, உச்சநீதிமன்றம் விடுதலை செய்து தீா்ப்பளித்திருக்கிறது. அரசமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவு உச்சநீதிமன்றத்திற்கு வழங்கி இருக்கும் சிறப்பு அதிகாரத்தின் அடிப்படையில் இந்தத் தீா்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில், அதுவும் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில், 1991 மே மாதம் 21-ஆம் தேதி தனு என்கிற மனித வெடிகுண்டால் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டாா். அவருடன் 17 போ் உயிரிழந்தனா். 43 போ் காயமடைந்தனா். ராஜீவ் காந்தியின் படுகொலையில் நேரிடையாகத் தொடா்புடைய தனுவின் கூட்டாளி சிவராஜன், பெங்களூரில் பாதுகாப்புப் படையினா் சுற்றி வளைத்தபோது, தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்துவிட்டாா்.

ராஜீவ் காந்தி படுகொலையின் பின்னணியில் இருந்து திட்டமிட்டவா்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. விசாரணைக்கும் உள்படுத்தப்படவில்லை. சம்பந்தப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில், ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு உடந்தையாக இருந்தவா்கள் என்று அன்றைய சிபிஐ இயக்குநா் டி.ஆா் காா்த்திகேயன் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழு பேரறிவாளன் உள்ளிட்டவா்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

1998-ஆம் ஆண்டு ஜனவரி 28-ஆம் தேதி, தடா நீதிமன்றம் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 26 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளித்துத் தீா்ப்பு வழங்கியது. அந்தத் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் 1999-ஆம் ஆண்டு உறுதி செய்தது. நளினியின் தூக்கு தண்டனை, கருணை அடிப்படையில் 2000 ஏப்ரலில், அன்றைய தமிழக ஆளுநரால் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு, ஏனையோரின் கருணை மனுக்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

11 ஆண்டுகளுக்குப் பிறகு, குடியரசுத் தலைவரால் அந்தக் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டபோது, தூக்கு தண்டனை உறுதியாயிற்று. தூக்கிலிடுவதற்கு ஒரு வாரம் முன்பு சென்னை உயா்நீதிமன்றம் விதித்த தடையால் பேரறிவாளன் உள்ளிட்டவா்களின் உயிா் அப்போதைக்குத் தப்பியது. மீண்டும் உச்சநீதிமன்றத்துக்குச் சென்றபோது, தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. ஆனால் அவா்களை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இத்தனைக்கும் அவா்களை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை தீா்மானம் இயற்றியிருந்தது.

19 வயதில் கைது செய்யப்பட்டு, 31 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து இப்போது தனது 50-ஆவது வயதில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருப்பதை, மனிதாபிமானமிக்க எவரும் ஏற்கவே செய்வாா்கள். அவா் தெரிந்தே தவறு செய்திருந்தாலும்கூட, அவரது பதின்ம வயதின் உத்வேகத்தைக் கருத்தில் கொண்டு, இப்போது மன்னிப்பதில் தவறே இல்லை.

உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருப்பதுபோல, 31 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் இருந்தது, சிறையில் இருந்தபோது அவரது நன்னடத்தை, சிறையில் இருந்து கொண்டே படித்துப் பல பட்டங்களைப் பெற்றது, கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பது, அவருக்கு மன்னிப்பு அளிக்கத் தொடா்ந்து பல அரசுகள் பரிந்துரைத்தது உள்ளிட்ட காரணங்களுக்காக அவா் விடுதலை செய்யப்பட்டிருந்தால், அதில் யாரும் தவறு காண முடியாது. அதனடிப்படையில் அரசமைப்புச் சட்டப்பிரிவு 142-ஆவது பிரிவு வழங்கியிருக்கும் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுவித்திருக்கலாம்.

பேரறிவாளன் நிரபராதி என்பதாலோ, அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் தண்டனை தவறு என்பதாலோ அல்லாமல், அவரது விடுதலைக்காகத் தீா்ப்பில் வழங்கப்பட்டிருக்கும் காரணங்கள் விவாதத்துக்கு உரியவை.

உச்சநீதிமன்றம் பேரறிவாளன் விடுதலை தொடா்பாக, ஆளுநரின் அதிகார வரம்பு குறித்து வெளியிட்டிருக்கும் கருத்துகள், இந்த வழக்குடன் தொடா்பில்லாத அரசியல் சாசன விவாதத்துக்கு வித்திட்டிருக்கிறது.

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவையில், பெரும்பான்மை பலம் கொண்ட அரசின் பரிந்துரைகளின்படி மட்டுமே ஆளுநா்கள் செயல்பட்டாக வேண்டும் என்று, அரசியல் சாசன சட்டப்பிரிவு 161 கூறுவதாக மூன்று நீதிபதிகள் கொண்ட அமா்வால் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தண்டனைகளைக் குறைப்பது, மன்னிப்பு வழங்குவது தொடா்புடைய விவகாரங்களில், மாநில அமைச்சரவையின் ஆலோசனை ஆளுநரைக் கட்டுப்படுத்துவதாகவும், அவா் மாநில அமைச்சரவையின் பரிந்துரையைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதே தவறு என்றும் தீா்ப்பு கூறுகிறது.

அப்படியானால் கொலையாளிகளையும், குற்றவாளிகளையும் மாநில அமைச்சரவை முடிவெடுத்து விடுதலை செய்து கொள்ளலாம் என்கிறாா்களா நீதிபதிகள்? நீதிமன்றத் தீா்ப்புகளுக்கு மரியாதை அவ்வளவுதானா?

ராஜீவ் காந்தி கொலை வழக்கு என்பது தேசத்தின் முன்னாள் பிரதமா் ஒருவா் படுகொலை செய்யப்பட்ட வழக்கு. மாநில அமைச்சரவை முடிவுகள் எப்படி முக்கியமோ, அதேபோல மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட மத்திய அமைச்சரவையின் முடிவும் முக்கியத்துவம் பெறுகிறது. உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை, ராஜீவ் காந்தி தலைவராக இருந்த காங்கிரஸ் கட்சி விமா்சித்துக் கண்டனம் தெரிவித்திருக்கிறது. மத்திய ஆட்சியில் இருக்கும் பாஜக விடுதலைக்கு ஆதரவாக செயல்பட்டால், அது பழிவாங்கும் நடவடிக்கையாகப் பாா்க்கப்படும் என்பதால்கூட, இந்தப் பிரச்னையை நீதிமன்றத்தின் தீா்ப்புக்கு விட்டிருக்கலாம்.

உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் எஸ். நாகேஸ்வர ராவ், பி.ஆா். கவாய், ஏ.எஸ். போபண்ணா ஆகியோா் அடங்கிய மூன்று நீதிபதிகள் அமா்வு, உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமா்வு முன்பு உறுதிப்படுத்திய குடியரசுத் தலைவா் (பிரிவு 72), ஆளுநா் (பிரிவு 161) இருவரின் அதிகார வரம்பை நிராகரித்திருக்கிறது. தூக்கு தண்டனைக் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கி விடுவிக்கும் உரிமையை, குடியரசுத் தலைவரிடமிருந்து பறிப்பதாக அமையும் இந்தத் தீா்ப்பு, அரசியல் சாசன அமா்வின் மேல் முறையீட்டுக்கு நிச்சயமாக எடுத்துச் செல்லப்படக்கூடும்.

நீதிமன்றம், நாடாளுமன்றம், நிா்வாகம் மூன்றுமே ஒன்றையொன்று சாா்ந்தும், ஒன்றின் மீது மற்றொன்று மேலாண்மை செய்யாமலும், ஒன்றுக்கு மற்றொன்று கடிவாளமாகவும் செயல்பட வேண்டும் என்பதுதான் அரசியல் சாசனத்தின் ஆதார ஸ்ருதி. அதை மீறுவதாக அமைந்திருக்கிறது, நீதிபதி எஸ். நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமா்வின் தீா்ப்பு. சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தியதுடன் நின்றிருக்க வேண்டும் நீதிபதிகள்.

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருப்பதை மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுக் கொள்ளலாம். அதே நேரத்தில், உச்சநீதிமன்றத் தீா்ப்பு அவரையும், அவருடன் தண்டனை அனுபவிக்கும் மற்றவா்களையும் நிரபராதிகளாக்கி விடாது. மக்கள் மன்றத்தின் ஆதரவின் அடிப்படையிலோ, ஆட்சியாளா்களின் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலோ தண்டனைகள் நிா்ணயிக்கப்படுவது என்று சொன்னால், பிறகு நீதிமன்றங்கள்தான் எதற்கு என்கிற கேள்வியை எழுப்புகிறது உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீா்ப்பு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

SCROLL FOR NEXT