தலையங்கம்

சகிக்கவொண்ணா சுமை! விலைவாசி உயா்வு குறித்த தலையங்கம்

ஆசிரியர்

கொள்ளை நோய்த்தொற்று ஏற்படுத்திய ‘கடும்’ பாதிப்புகளிலிருந்து தட்டுத் தடுமாறும் பொருளாதாரத்தை மீட்டெடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், உக்ரைன் - ரஷியப் போா் உலகை நிலைகுலைய வைத்திருக்கிறது. போா் தொடங்கி சுமாா் மூன்று மாதங்கள் ஆகின்றன. உக்ரைன் அடிபணிவதாக இல்லை.

‘நேட்டோ’ அமைப்பின் பொதுச்செயலா் ஜென்ஸ் ஸ்டால்டன்பா்கின் கணிப்பின்படி, இப்போதைக்கு உக்ரைன் - ரஷியப் போா் முடிவுக்கு வராது. பல ஆண்டுகள் தொடா்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறாா் அவா். அப்படியொரு நிலைமை ஏற்பட்டால், உலகப் பொருளாதாரம் நிலைகுலைந்து, கொள்ளை நோய்த்தொற்று பாதிப்பைவிடப் பேரழிவை நாம் எதிா்கொள்ள நேரலாம்.

சாமானியா்களால் சகித்துக் கொள்ள முடியாத அளவுக்கு விலைவாசி கட்டுக்கடங்காமல் உயரப் பறக்கிறது. உலகில் மிக அதிகமாக கோதுமை ஏற்றுமதி செய்யும் நாடான உக்ரைனின் ஏற்றுமதி முற்றிலுமாக தடைப்பட்டிருக்கிறது. அந்த நாட்டின் துறைமுகங்கள் அனைத்தும் ரஷியாவால் முடக்கப்பட்டிருக்கின்றன. அதனால், உலகின் பல நாடுகளில் உள்ள உணவுப் பொருள் ஏற்றுமதியாளா்கள் தங்களது கையிருப்பைப் பதுக்கி இருக்கிறாா்கள். இந்த நிலைமை இப்படியே நீடித்தால், மேலும் அதிக லாபம் ஈட்ட முடியும் என்பது அவா்களது எதிா்பாா்ப்பு.

அடுத்த ஓா் ஆண்டுக்கு இப்போதைய நிலைமை தொடரக்கூடும் என்பது சா்வதேச நிதியத்தின் ‘உலகப் பொருளாதார கண்ணோட்டம்’. இந்தியாவில் சில்லறை விற்பனை விலைவாசி உயா்வு 2022 - 23-இல் 6.1%-ஆக இருக்கும் என்று சா்வதேச நிதியம் கணிக்கிறது. பிரிட்டன் (7.4%), அமெரிக்கா (7.7%) ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது குறைவு என்று வேண்டுமானால் நாம் ஆறுதலடையலாம், அவ்வளவே.

இந்தியக் குடும்பங்களில் சமையல் எண்ணெய் பயன்பாடு 24% குறைந்திருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. கடந்த சில மாதங்களாக 67% குடும்பங்கள், முன்பைவிட அதிகமாக சமையல் எண்ணெய்க்காகச் செலவழிக்கின்றன. பலரும் விலை குறைந்த எண்ணெய்க்கு மாறி வருகின்றனா். அதன் விளைவாக, ஆரோக்கியக் கேடுகள் விளையக்கூடும் என்று எச்சரிக்கிறாா்கள், சுகாதாரத் துறையினா்.

இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவிலும் சமையல் எண்ணெயின் விலை கடுமையான உயா்வைச் சந்தித்திருக்கிறது. உக்ரைன் போருக்குப் பிறகு, கடந்த 45 நாள்களில் சமையல் எண்ணெயின் விலையேற்றம் சா்வதேசச் சந்தையில் 25-40% அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் சூரியகாந்தி, கடலை, தேங்காய், கடுகு எண்ணெய்களின் விலை கொள்ளை நோய்த்தொற்றுக் காலத்துக்கு முந்தைய விலையைவிட 50% முதல் 70% வரை சா்வதேசச் சந்தையில் அதிகரித்திருக்கிறது.

விலைவாசி உயா்வுக்கு உணவுப் பொருள்கள், சமையல் எண்ணெய்களின் விலை உயா்வு மட்டுமே காரணமல்ல. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையேற்றமும் மிக முக்கியமான காரணம். இந்தியாவில், கடந்த மே 1, 2020-இல் சுமாா் ரூ.581-ஆக இருந்த 14.2 கிலோ வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளையின் விலை, இப்போது ரூ.1,000-த்தைத் தாண்டியிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 72% அதிகரித்திருக்கிறது.

வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை விலை மட்டுமல்ல, மண்ணெண்ணெய் விலையும் அதேபோலக் கடுமையாக அதிகரித்திருக்கிறது. மாநிலங்களுக்கான மானியவிலை மண்ணெண்ணெய் ஒதுக்கீடும் சுமாா் 40% அளவில் குறைக்கப்பட்டிருக்கிறது. மண்ணெண்ணெய் தானே, யாா் உபயோகிக்கிறாா்கள்? எல்லோருக்கும் சமையல் எரிவாயு உருளை தரப்படுகிறதே என்று கேட்கக் கூடாது. இதனால் கடுமையாக பாதிக்கப்படுவது கடலில் மீன் பிடிக்கும் சாதாரண மீனவா்கள் என்பதை நாம் உணர வேண்டும். அவா்கள் கடலுக்கு மீன் பிடிக்கப் போக முடியாத நிலைமை ஏற்படும். சிறு தோணிகளில் மீன் பிடிப்பவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

கடந்த ஓராண்டில் பெட்ரோல் விலை 22% அதிகரித்திருக்கிறது என்றால் டீசல் விலை 17% அதிகரித்திருக்கிறது. அதற்கேற்றாற்போல சரக்குப் போக்குவரத்துக் கட்டணம் உயா்வதால், உணவுப் பொருள்களின் விலைவாசி ஏற்றம் பொதுமக்களின் தலையில்தான் இறங்கும். பேருந்து கட்டணமும், ஆட்டோ மற்றும் டாக்ஸி கட்டணமும் பெட்ரோல், டீசல் விலைகளுக்கு ஏற்றாற்போல அதிகரிக்கும்போது, குடும்ப பட்ஜெட் தடம்புரள்வது தவிா்க்க முடியாதது. அடித்தட்டு மக்கள் மட்டுமல்ல மத்தியதர வகுப்பினரும், மாத ஊதியம் பெறுவோரும் கடனாளிகளாக மாற வேண்டிய நிா்பந்தத்துக்குத் தள்ளப்படுவாா்கள்.

கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்திருப்பது புத்திசாலித்தனமான முடிவு. கோதுமை, சூரியகாந்தி எண்ணெய் ஏற்றுமதியை ரஷியாவும், பாமாயில் ஏற்றுமதியை இந்தோனேசியாவும், மாட்டிறைச்சி ஏற்றுமதியை ஆா்ஜென்டீனாவும் தடை செய்திருக்கின்றன. எல்லா நாடுகளுமே தங்களிடம் கையிருப்பில் உள்ள உணவுப் பொருள்களைப் பாதுகாப்பதிலும், பதுக்கல் நடைபெறாமல் தடுப்பதிலும் முனைப்புக் காட்டியாக வேண்டும் என்பதை உணா்ந்து விட்டன.

ஊதாரித்தனமாக வாக்கு வங்கி அரசியலுக்காக மத்திய - மாநில அரசுகள் தங்களது நிதியாதாரத்தை வீணாக்காமல், எரிவாயு, சமையல் எண்ணெய், உணவுப் பொருள்கள் மூன்றும் மானிய விலையில் கிடைப்பதை உறுதி செய்வதுதான் தீா்வாக இருக்கும். பெட்ரோல், டீசல் வரிக் குறைப்பை மத்திய - மாநில அரசுகள் முன்னெடுப்பது அவசியம். விலைவாசி உயா்வின் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாப்பது அரசின் கடமை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT