தலையங்கம்

ஆக்கிரமிப்பு ஆக்கிரமிப்புதான்! | ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு தொடர்பான தலையங்கம்

14th May 2022 05:52 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் (ஆர்.ஏ.புரம்) கோவிந்தசாமி நகரில் நீர்நிலைக்கு அருகில் உள்ள நிலங்களில் 259 வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக 2008-ஆம் ஆண்டு வழக்கு தொடுக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டதையடுத்து, அந்த வீடுகளை அகற்றும் பணி கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 8)  நடைபெற்றது.

ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையை எதிர்த்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது பாமக நிர்வாகியான வி.ஜி.கண்ணையன் (57) என்பவர் தீக்குளித்தார். மருத்துவமனையில் அடுத்த நாள் அவர் உயிரிழந்தார். உண்மையிலேயே இது துர திருஷ்டவசமான சம்பவம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இதன் பின்னணியில் இருக்கும் எதார்த்த உண்மைகளை நாம் புறந்தள்ளிவிட முடியாது. 

தமிழக கிராமங்களில் விவசாயத்திலோ மற்ற தொழில்களிலோ போதிய வருவாய் கிடைக்காமல் இருப்பதால்,  பல்லாயிரக்கணக்கான குடும்பத்தினர் இடம் பெயர்ந்து சென்னை, மதுரை, திருச்சி போன்ற நகரங்களுக்கு வருகின்றனர். நகர்மயமாதல் என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. 

அப்படி வருபவர்கள் பெரும்பாலும் புறம்போக்கு இடங்களிலும், நீர்நிலைக்கு அருகில் உள்ள இடங்களிலும், கோயில் இடங்களிலும் குடிசைகள் அமைத்து வாழ முற்படுகிறார்கள். வாக்குவங்கி அரசியல் காரணமாக, எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அவர்களுக்கு  குடும்ப அட்டை, மின் விநியோகம் போன்றவற்றை அளித்து விடுகிறது.

ADVERTISEMENT

தலைமுறைகள் கடந்தாலும்கூட, அவர்கள் வாழ்வில் பெரிய முன்னேற்றமில்லை. குடிசைகள் சிறிய அளவில் கான்கிரீட் கட்டடங்கள் ஆகின்றன. யாரோ ஒருவர் நீதிமன்றத்தை நாடும்போது, வாக்குவங்கியைப் பற்றி கவலை இல்லாததால், ஆக்கிரமிப்பை அகற்ற  நீதிபதிகள் உத்தரவிடுகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் இதுதான் நடந்துள்ளது. கோவையிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர்  நீர்நிலை ஆக்கிரமிப்புகள் நூற்றுக்கணக்கில் அகற்றப்பட்டன. மக்கள் போராட்டம் நடத்தியும் பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு அதிகாரிகள் அகற்றினார்கள். 

சென்னை ஆர்.ஏ.புரம் சம்பவத்தில், 2008 முதல் வழக்கு நடந்து வந்துள்ளது. இத்தனை ஆண்டுகளாக அந்த கட்டடங்கள் அகற்றப் படாது என்ற நம்பிக்கையை அளித்தது யார்? எல்லா இடங்களிலும் இதே நிலைமைதான். 

இந்த சம்பவம் நடந்த உடனே ஒரு அமைப்பின் நிர்வாகி, "இது நவீன தீண்டாமை. 220 சதுர அடி வீட்டில் அமைச்சர்கள், நீதிபதிகள், எம்எல்ஏக்கள் வசித்துப் பார்த்தால் கஷ்டம் புரியும்' என்று சமூக வலைதளத்தில் பதிவிடுகிறார். மற்றொரு கட்சியின் தலைவர், வட மாநிலத்தவர் ஒருவருக்காக இத்தனை கட்டடங்கள் இடிக்கப்பட வேண்டுமா? உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறுகிறார். தீக்குளித்து இறந்தவர் சார்ந்த கட்சியின் நிர்வாகியும் சம்பவ இடத்தைப் பார்வையிட்டார். 

இவர்கள் எவ்வளவு ஆவேசமாகப் பேசினாலும், போராடினாலும் அகற்றப்படும் கட்டடங்கள் அங்கு திரும்பி வரப்போவதில்லை. இது ஒருபுறம் இருக்க, கோயில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா அளிக்க வேண்டும் என ஒரு கட்சியினர் மாநிலம் முழுவதும் அவ்வப்போது போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆங்காங்கே மாவட்ட நிர்வாகத்தினரிடம் இது தொடர்பாக மனு அளித்து வருகின்றனர்.

இந்த விஷயத்திலும் என்றாவது ஒருநாள் நீதிமன்றம் தலையிட்டு அங்கிருப்பவர்களை அகற்றிவிடும். வாழ்நாள் முழுவதும் தங்களை அரசியல் கட்சியினர் காப்பாற்ற வழியில்லை என்பதை, ஏழ்மை காரணமாக ஆக்கிரமிப்பு செய்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

"உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பாக வந்த பிறகே, கட்டடங்களை அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஏழைகளின் வயிற்றில் அடிக்கக்கூடிய நிலையில் அரசு இல்லை. அதே சமயம், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்ற வேண்டிய நிலையும் அரசுக்கு  உள்ளது' என ஆர்.ஏ.புரம் சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஆக்கிரமிப்பு பகுதி மக்களுக்கு, அருகிலேயே குடியிருப்புகள் வழங்கப்படும் என்றும், ஆக்கிரமிப்புகளை அகற்றும் சூழ்நிலை  ஏற்படும்போது முன்கூட்டியே மக்களிடம் கருத்து கேட்கப்படும்  என்றும், புதிய இடத்தில் தேவைப்படும் அனைத்து வசதிகளும்  செய்யப்பட்ட பின்னரே குடியமர்வு செய்யப்படுவர் என்றும், மக்கள் நலன் சார்ந்த மறுகுடியமர்வுக் கொள்கை வகுக்கப்படும் என்றும்  மு.க. ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். 

கோவையில் நகரின் மையப் பகுதியில் ஆக்கிரமித்து வீடு கட்டியிருந்தவர்களுக்கு தொலைதூரப் பகுதிகளில்தான் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி  குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டன. தொடக்கத்தில் போராடினாலும் பின்னர் அவர்கள் அந்த இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர்.

இது தவிர்க்க முடியாதது. நகரின் முக்கியப் பகுதிகளில் அவர்களுக்கு இடமளித்தால், அவர்கள் அதை மனை வணிக, அடுக்கு மாடிக் கட்டட நிறுவனங்களுக்கு விற்றுவிடுவார்களே தவிர, அங்கேயே வாழப்போவது இல்லை. ஆக்கிரமிப்புகளைத் தொடக்கத்திலேயே தடுக்க வேண்டும். அத்தகைய வீடுகளுக்கு மின் இணைப்பு, குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றை வழங்கக் கூடாது. அரசியல் கட்சியினரும், அமைப்புகளும் இந்த பிரச்னையில் தலை யிடாமல் இருந்தாலே ஆக்கிரமிப்பு தானாகக் குறைந்துவிடும்.

ஏழைகளுக்காகப் போராடும் அமைப்புகள் எழுப்பும் கேள்வி, பணக்காரர்களது ஆக்கிரமிப்புகளை அரசு அகற்றுமா என்பதே. ஏழைகளின் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தாமல், பணக்காரர்களின் ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என்று போராடுவதே நியாயமாக இருக்கும். எத்தகைய ஆக்கிரமிப்பாக இருந்தாலும் அது அகற்றப் படுவதுதானே நியாயம்..?
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT