தலையங்கம்

முதல்வரின் சரியான யோசனை! மாநிலங்களிடை மன்றம் குறித்த தலையங்கம்

28th Jun 2022 05:23 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

சர்க்காரியா குழு பரிந்துரையின் அடிப்படையில், குடியரசுத் தலைவரால் கடந்த 1990-ஆம் ஆண்டு மே மாதம் 28-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு மூலம் ஏற்படுத்தப்பட்ட நிரந்தர அமைப்புதான் "மாநிலங்களிடை மன்றம்' (இன்டர் ஸ்டேட் கவுன்சில்). நாடு தழுவிய எந்தவொரு திட்டமானாலும் அல்லது பிரச்னையானாலும் அதுகுறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே கருத்தொற்றுமை ஏற்பட வழிவகுப்பதுதான் இந்த அமைப்பின் முக்கிய நோக்கம்.

இந்த அமைப்பின் தலைவராக பிரதமரும், உறுப்பினர்களாக மத்திய கேபினட் அமைச்சர்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள், சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசங்களின் நிர்வாகிகள், குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ள மாநிலங்களின் ஆளுநர்களும் செயல்படுகின்றனர். இந்த அமைப்பு ஆண்டுக்கு மூன்று முறை கூட வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்ட பிறகு, கடந்த 32 ஆண்டுகளில் இதுவரை 12 முறை மட்டுமே கூடியுள்ளது என்பதன் மூலம் இது செயல்படும் விதத்தைப் புரிந்து கொள்ளலாம். மத்தியில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இந்த அமைப்பின் செயல்பாட்டில் பெரிய மாற்றம் ஏற்படுவதில்லை. இது முறையாகக் கூட்டப்படுவதில்லை.

மன்மோகன் சிங் தலைமையிலான 10 ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில், கடந்த 2006-ஆம் ஆண்டு ஒரே முறைதான் இந்த அமைப்பின் கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு 10 ஆண்டுகள் கழித்து, கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூலையில் இந்த அமைப்பு கூடியது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவின் கடந்த 8 ஆண்டு ஆட்சிக் காலத்தில் ஒரேயொரு முறை மட்டுமே "மாநிலங்களிடை மன்றம்' கூடியிருக்கிறது.

ADVERTISEMENT

நாடாளுமன்றம் எதிர்க்கட்சிகளால் தொடர்ந்து முடக்கப்படுவதால் கடந்த 1999-க்குப் பிறகு முறையான விவாதங்கள் நடைபெறுவதில்லை. தற்போதைய ஆட்சியில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, நிலம் கையப்படுத்தும் மசோதா, ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சட்ட 370-ஆவது பிரிவு ரத்து, புதிய வேளாண் சட்ட மசோதாக்கள், 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்துக்கு வீரர்களைத் தேர்வு செய்யும் அக்னிபத் திட்டம் உள்ளிட்டவை முறையான விவாதத்துக்கும் நாடாளுமன்ற ஒப்புதலுக்கும் பிறகு கொண்டுவரப்பட்டவை அல்ல. 

திட்டங்களும், அறிவிப்புகளும் நாடாளுமன்ற விவாதங்களுக்கு உட்படுத்தப்படாமலும், மாநிலங்களுடன் முன்கூட்டியே கலந்தாலோசிக்காமலும் செயல்படுத்தப்படுவதால்தான் நாடு முழுவதும் தேவையற்ற போராட்டங்களும், சர்ச்சைகளும் ஏற்படுகின்றன. சுமார் 138 கோடி மக்கள்தொகை கொண்ட பல்வேறு இன, மொழி, கலாசாரம் என பன்முகத்தன்மையுடைய நமது நாட்டில் அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் கருத்தொற்றுமையை ஏற்படுத்துவதில்தான் அரசின் வெற்றி அடங்கியுள்ளது. 

ஆளுங்கட்சியோ கூட்டணியோ கொண்டுவரும் எந்தவொரு திட்டத்தையும் கண்மூடித்தனமாக எதிர்ப்பது என்பதும், நாடாளுமன்றத்தை அமளியால் முடக்குவது என்பதும் கருத்தொற்றுமை ஏற்படாமல் இருப்பதற்கு ஒரு காரணம். எதிர்க்கட்சிகளை அரவணைத்துச் செல்ல வேண்டும் என்கிற மனப்போக்கு ஆளும்தரப்பினரிடம் இல்லாமல் இருப்பது இன்னொரு காரணம். 

நாடாளுமன்ற விவாதம் இல்லாததால் பாஜக அல்லாத இதர கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மத்திய அரசுடன் அவ்வப்போது மோதல் போக்கை மேற்கொள்கின்றன. இந்தப் பின்னணியில், மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே ஏற்படக்கூடிய பிரச்னைகளை விவாதித்து தீர்வு காணக்கூடிய பொதுத் தளம் "மாநிலங்களிடை மன்றம்'. அதனால் அந்த அமைப்பு  ஆண்டுக்கு மூன்று முறை கூடுவதை பிரதமர் மோடி உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அவருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அண்மையில் எழுதியுள்ள கடிதம் வரவேற்புக்குரியது.

மாநிலங்களின் உரிமைகளையும், நலன்களையும் பாதிக்கக்கூடிய பல்வேறு சட்ட மசோதாக்கள் முறையாக விவாதிக்கப்படாமல் நாடாளுமன்றத்தில் அவசரகதியில் நிறைவேற்றப்படுவதாகவும், இத்தகைய மசோதாக்கள் குறித்து மாநிலங்களிடை மன்றத்தில் முன்கூட்டியே விவாதித்து கருத்தொற்றுமையை ஏற்படுத்தினால் அது மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றும் தனது கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் சுட்டிக்காட்டியிருக்கிறார். அவர் குறிப்பிடுவதுபோல "மாநிலங்களிடை மன்றம்' மத்திய - மாநில உறவுக்கு பாலமாக அமையக்கூடும் என்பதால் அதை மத்திய அரசு பரிசீலிப்பது நல்லது. 

மத்திய திட்டக் குழுவுக்குப் பதிலாக நரேந்திர மோடி ஆட்சியில் அமல்படுத்தப்பட்டுள்ள நீதி ஆயோக் அமைப்பால் மாநிலங்கள் தங்களுக்குரிய நிதியைப் பெறுவதில் இடையூறுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. மத்திய திட்டக் குழு இருந்தபோது, ஆண்டுதோறும் ஒவ்வொரு மாநிலத்துடனும் தனித் தனியாக ஆலோசனை நடத்தி நிதி ஒதுக்கீடு செய்யும் வழக்கம் இருந்தது.

ஆனால், இப்போது அதுபோன்ற நடைமுறை இல்லாததால், மாநிலங்களுக்கு மத்திய அரசு முறையாக நிதி ஒதுக்கீடு செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

நமது அரசியல் சட்டத்தில் மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் என்னென்ன அதிகாரங்கள் உள்ளன என்பது மிகத் தெளிவாக வரையறுத்துக் கூறப்பட்டுள்ளது. பிரச்னைகளையும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களையும் முறையாக விவாதித்து கருத்தொற்றுமை காண்பதற்கு ஒரே வழி "மாநிலங்களிடை மன்றம்' திறம்படச் செயல்படுவதுதான். ஆண்டுக்கணக்கில் முடங்கிக் கிடக்கும் இந்த அமைப்பை உடனே செயல்பாட்டுக்கு கொண்டு வருவதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT