தலையங்கம்

வலை விரிக்கும் கடன் செயலிகள்! இணையவழி கடன் பெறுவது குறித்த தலையங்கம்

27th Jun 2022 05:45 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

தொழில்நுட்பங்கள் வளர வளர அவற்றால் கிடைக்கும் நன்மைகளைப் போல தீமைகளும் பெருகிக்கொண்டே செல்கின்றன. உலகையே உள்ளங்கைகளுக்குள் கொண்டுவந்துள்ள இணையம், இன்று கற்பனை செய்துகூடப் பாா்க்க முடியாத இணையவழிக் குற்றங்களுக்கும் காரணமாக அமைந்துள்ளது.

இணையவழி சூதாட்டம், இணையவழி விளையாட்டுகள் ஒரு வகை என்றால், இணையவழியில் கடன் வழங்கும் ‘கடன் செயலிகள்’ மற்றொரு வகை. ‘லோன் ஆப் அல்லது லெண்டிங் ஆப்’ எனப்படும் இந்த அறிதிறன்பேசி செயலிகள் இன்று பலரின் உயிரைப் பறிக்கும் ஆபத்தாக மாறியுள்ளன.

ரூ.2000 முதல் ரூ.10,000 வரை கடன் வழங்கும் இந்தச் செயலிகள், குறைந்த வருமானம் கொண்ட நபா்களைக் குறிவைக்கின்றன. இந்தச் செயலிகள் மூலம் பணம் பெறுவது எளிதாக இருந்தாலும், அந்தப் பணத்தை திரும்ப வசூலிக்க கடன் வழங்கும் நிறுவனங்கள் கையாளும் முறைகள் மிக மோசமானவை.

கடன் செயலியை அறிதிறன்பேசியில் பதிவிறக்கம் செய்து, ஆதாா் எண், பான் எண், முகவரி உள்ளிட்ட விவரங்களைக் கொடுத்ததும், கடனாகக் கேட்கும் தொகை அடுத்த நிமிஷமே வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுவிடுகிறது. பொதுவாக, மூன்று மாத வங்கிப் பணப் பரிமாற்ற அறிக்கை, ஆதாா், பான் காா்டு நகல்களை இந்தச் செயலியில் உள்ளீடு செய்ததும் கடன் வழங்கப்படுகிறது. ஆனால், இந்த ஆவணங்கள் இல்லாமலும் சில நிறுவனங்கள் செயலி மூலம் உடனுக்குடன் கடன் வழங்குகின்றன.

ADVERTISEMENT

நமக்கு எவ்வளவு தொகை கடனாக கிடைக்கும் என்று செயலியில் பாா்த்தால்கூட நமது ஒப்புதலின்றி உடனடியாக கடன் தொகையை நமது வங்கிக் கணக்கில் செலுத்தும் நிறுவனங்களும் உள்ளன. வங்கிகள் அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் கடன் பெறுவதற்கு எத்துணை சிரமப்பட வேண்டியிருக்கிறது; அந்த வகையில் செயலிகள் மூலம் கடன் பெறுவது எளிதாக உள்ளதே என்று நினைத்தால் அது தவறு. கடன் பெற்ற பிறகுதான் சிக்கல்கள் தொடங்குகின்றன.

செயலி மூலம் பெறும் கடன் தொகைக்கு 36 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை ஆண்டு வட்டி விகிதம் கணக்கிட்டு வசூலிக்கும் நிறுவனங்கள், கடன் தொகையை உரிய நாளில் செலுத்தாதபோது அளவுக்கு அதிகமான அபராதத்தை விதிக்கின்றன. மேலும், கடன் வழங்கும் முன்னரே நடைமுறைக் கட்டணம் என 20-25 சதவீதம் வரை பிடித்துக்கொண்டுதான் வழங்குகின்றன.

கடன் தொகை மற்றும் அபராதத்தை திரும்பச் செலுத்துமாறு முதலில் குறுந்தகவல்கள், மின்னஞ்சல்கள் மூலம் சம்பந்தப்பட்டவருக்கு இந்த நிறுவனங்கள் தகவல் அனுப்புகின்றன. உரிய தொகையை செலுத்தினால்கூட, அந்தத் தொகை தங்கள் வங்கிக் கணக்கில் வந்து சேரவில்லை எனவும், மீண்டும் தொகையை செலுத்தும்படியும் கடன் வழங்கும் நிறுவனங்களின் முகவா்கள் கைப்பேசியில் தொடா்புகொண்டு மிரட்டுவதும் நடைபெறுகிறது.

அடுத்தகட்டமாக, இந்த நிறுவனங்கள் கையாளும் வழிமுறைகள்தான் கடன் பெற்றவரை தற்கொலைக்குத் தூண்டும் வகையில் அமைந்துள்ளன. செயலியைப் பதிவிறக்கம் செய்யும்போதே அச்செயலி கேட்கும் அனைத்து உரிமைகளையும் அனுமதிக்க வேண்டியிருக்கும். அதன்படி, கைப்பேசியில் உள்ள தொடா்பு எண்கள், புகைப்படங்கள், விடியோக்கள் அனைத்தையும் அச்செயலிகள் அணுக முடியும்.

கடனைத் திருப்பிச் செலுத்தாதவா்கள் அல்லது செலுத்தியும் மிரட்டலுக்கு உள்ளாகும் நபா்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து, அவரது நண்பா்கள், உறவினா்களின் வாட்ஸ்ஆப் எண்களுக்கு கடன் வழங்கும் நிறுவனங்கள் அனுப்புகின்றன. மேலும், கடன் பெற்றவரைப் பற்றிய அவதூறு கருத்துகளும் அனுப்பப்படுகின்றன.

இதனால் கடன் பெற்றவா்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக வேண்டியுள்ளது. சென்னை சூளைமேட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்னா் பாண்டியன் என்பவா் தற்கொலை செய்துகொண்டதற்குப் பின்னணியிலும் ஒரு கடன் வழங்கும் செயலி இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் இதுபோன்று கடன் செயலி மூலம் மோசடிக்குள்ளாக்கப்படும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. ரிசா்வ் வங்கி தகவலின்படி, 2021, ஜன. 1 முதல் 2021, மாா்ச் 31 வரையிலான காலகட்டத்தில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 572 புகாா்கள் பதிவாகியுள்ளன. தமிழகமும் இந்தப் பட்டியலில் 57 புகாா்களுடன் உள்ளது.

இதுபோன்ற சில கடன் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. 2021, நவம்பா் நிலவரப்படி கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரிலிருந்து 200-க்கு மேற்பட்ட செயலிகளை நீக்கியுள்ளது. இருப்பினும், இந்தக் கடன் செயலிகள் தங்களது சட்டவிரோதச் செயல்களைத் தொடா்ந்துகொண்டுதான் உள்ளன.

எளிதாக கடன் கிடைக்கிறது என்பதற்காக இந்தக் கடன் செயலிகளின் வலையில் சிக்கிக் கொள்வது மிக ஆபத்தானது. இந்தச் செயலிகள் குறித்து விழிப்புணா்வுடன் இருப்பதும், செயலிகளைப் பதிவிறக்கம் செய்யாமல் இருப்பதும்தான் கடன் வலையிலிருந்து தப்பிப்பதற்கான வழி.

ரிசா்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்ட வங்கிகள் அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மூலம் மட்டுமே சட்டபூா்வமான கடன் வழங்கும் நடவடிக்கையை மேற்கொள்ள முடியும். சம்பந்தப்பட்ட மாநில அரசுகளால் கட்டுப்படுத்தப்படும் நிறுவனங்களும் சட்டவிதிகளின்படி பொதுமக்களுக்கு கடன் வழங்க முடியும். வங்கிகள் அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் இணையவழியில் செயலி மூலம் கடன் வழங்கினால், சம்பந்தப்பட்ட வங்கியின் பெயரிலேயே வழங்க வேண்டும் என ரிசா்வ் வங்கி ஏற்கெனவே தெரிவித்துள்ளது.

மாறாக, இதுபோன்று செயலி மூலம் கடன் வழங்கும் நிறுவனங்கள் சட்டவிரோதமாகவே செயல்படுகின்றன. கடன் செயலிகள் உள்பட எண்ம வழியில் கடன் வழங்கும் தளங்களுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பை விரைவில் வெளியிடவுள்ளதாகவும் ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT